Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான அ.அமிர்தலிங்கம், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்போதைய தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அதில், ”பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், தியாகராஜா மகேஸ்வரன், ரி.எம்.தசநாயக்கா ஆகியோரின் படுகொலைகள் சம்பந்தமான விபரங்களை தந்து உதவுமாறு சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் தங்களை வேண்டியுள்ளதாக அறிகின்றேன்.

இதே காலத்தில்தான் தங்கத்துரை, கிங்ஸ்லி இராஜநாயகம், லக்ஷ்மன் கதிர்காமர் ஆகியோரின் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. தயவு செய்து இவர்களின் விபரங்களையும் சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கவும்.

பாராளுமன்ற உறுப்பினர் தங்கதுரையின் படுகொலை சம்பந்தமாக மக்கள் விசாரிக்க தொடங்கியுள்ளனர். அவர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய காலத்தில் ஒரு பாடசாலை நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டவேளையில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் பலர் பலியானார்கள்.

அந்த நேரத்தில் இவரது படுகொலை சம்பந்தமாக கொழும்பில் ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு கிராமசேவையாளர் ஒருவர் உட்பட ஐந்துபேர் கைது செய்யப்பட்டனர் என்றும் ஏனைய இருவரை பொலிஸார் தேடுகின்றனர் என்று செய்திகள் அன்று வெளியாயின. தங்கதுரை அவர்களுடைய விசாரணையோடு இணைத்து கிங்ஸ்லி இராஜநாயகம், லக்ஷ்மன் கதிகாமர் ஆகியோரின் படுகொலைகள் பற்றியும் ஒரே காலத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

யுத்த காலத்தில் யுத்தப்பிரதேசத்துக்கு வெளியில் பயங்கரமான குற்றங்கள் நடந்துள்ளன. பயத்தின் காரணமாக சாட்சிகள் தயக்கம் காட்டியமையால் விசாரணைகள் தடைப்பட்டன. தற்போது நிலைமை பெருமளவு சீரடைந்துள்ளமையால் எனது அபிப்பிராயம் மூடி வைக்கப்பட்டிருந்த கோர்வைகள் கட்டவிழ்க்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென கருதுகின்றேன்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கத்தின் படுகொலையில் பலர் சம்பந்தப்பட்டுள்ளமையால் இது சம்பந்தமாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது தொடர்பில் விசாரணைகள் நடத்துவதற்கு இதுவே பொருத்தமான நேரமாகையால் ஒரு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணையை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to அமிர்தலிங்கம், கதிர்காமர் கொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும்: வீரசிங்கம் ஆனந்தசங்கரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com