Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தமது கருத்துகளையும், யோசனைகளையும் ஜூன் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டுமென நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை, நீதி, மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், இழப்பீடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் பொருட்டு ஏற்படுத்தப்பட வேண்டிய பொறிமுறைகள் குறித்து மக்களின் கருத்துக்களை அறிந்து அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதமரினால் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஸ்தாபிக்கப்படவேண்டிய நான்கு பொறிமுறைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1.விசேட சட்ட ஆலோசகர் ஒருவர் அடங்கலான சட்டப் பொறிமுறை,
2.உண்மை – நீதி – நல்லிணக்கம் மற்றும் மீள்நிகழாமைக்கான ஆணைக்குழு,
3.இழப்பீட்டிற்கான அலுவலகம்,
4.காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம்

ஆகிய நான்கு விடயங்கள் குறித்து அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த பொறிமுறைகளுக்கான வியூகம், விடயதானம், அதிகாரங்கள், செயற்பாட்டு வரம்புகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மாற்றுப் பொறிமுறையொன்று அவசியமென கருதுவதாயின், அதுபற்றிய யோசனைகளை முன்வைக்குமாறும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி மக்களிடம் கோரியுள்ளது.

எழுத்துமூலமான யோசனைகளை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய எந்தவொரு மொழியிலும் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ அல்லது அமைப்பாகவோ சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்களின் கருத்துகளை ctf.srilanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது பதிவுத் தபால்மூலம் “செயலாளர், நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம், குடியரசுக் கட்டடம், சேர்.பரோன் ஜயதிலக்க வீதி, கொழும்பு – 01 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கமுடியும்.

0 Responses to நல்லிணக்கப் பொறிமுறைக்கான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com