Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கான விஜயத்தை அண்மையில் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதுவர்களுக்கு, தமிழ் அரசியல் கைதிகளான தமது உறவுகளின் அவல நிலையை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என்று தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் தங்களது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயத்தில், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்புக்கள் எனக் கூறிக்கொள்பவர்களும், தமிழ் அரசியல் தலைமைகளும், சிவில் சமூகத்தினர் மற்றும் மத அமைப்புக்கள் என அனைவரும் பொறிப்பினைத் தவறவிட்டுள்ளனர் என்றும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளனர்.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் இருவர் இலங்கையின் சமகால நிலைமைகளையும், உறுதிமொழிக்கு அமைவான முன்னேற்றங்களையும் மதிப்பீடு செய்வதற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்கள். அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பலதரப்பினரையும் சந்தித்த பிரதிநிதிகள் வடபகுதியில் கூடுதலான கவனத்தை ஈட்டியிருந்தனர்.

எனினும், இன்று இந்நாட்டில் அவசரமாகவும், அவசியமாகவும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளுள் முதன்மைவிடயமாக தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் பார்க்கப்படுகின்ற இத்தருணத்தில் அரசியல் கைதிகளை ஐ.நா அதிகாரிகள் சந்திக்கத் தவறியமை பெரும் ஏமாற்றத்ததையும், கவலையையும் தருகின்றது.

அந்த வகையில் சித்திரவதைகள் மற்றும் கொடூர செயற்பாடுகள் பொருத்தமற்ற தண்டனைகள் தொடர்பிலான விசேடபிரதிநிதி ஜீவான் மென்டோஸ் அவர்களும், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனதன்மை தொடர்பான விசேட பிரதிநிதி மொனிக்கா வின்டோ அவர்களும் தமது விஜயத்தின் போது பூசா தடுப்புமுகாம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாததடுப்புப் பிரிவுமற்றும் சாதாரண சிவில் கைதிகளைத் தடுத்துவைக்கக்கூடிய வெலிக்கடை, வவுனியா சிறைச்சலைகளுக்கும் சென்று அவதானிப்புகளை நடத்தியிருந்தார்கள்.

ஆயினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 15-20 வருடங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு பெரும் தண்டனைகள் வழங்கப்பட்டவர்கள் உட்படசுமார் 80 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள மகசீன் சிறைச்சாலைக்கோ 50 வரையிலான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அநுராதபுரம் சிறைச்சாலைக்கோ ஜ.நா விசேடபிரதிநிதிகள் விஜயம் செய்யாமையானது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாகவே கருதவேண்டியுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளானது குறித்த தமிழ் அரசியல் கைதிகள் அங்கீகரிக்கப்படாத அநீதிக்கு உட்பட்டிருப்பதை அப்பட்டமாகவெளிச்சம் போட்டுகாட்டியுள்ளது. அதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

எவ்வாறாயினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அரங்கில் அறிக்கை சமர்ப்பிக்கப்படக் கூடிய ஆதாரங்கள் திரட்டும் முக்கிய சந்திப்பின் அரசியல் கைதிகளான எமது உறவுகளின் அவலநிலையை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்புக்கள் எனக் கூறிக்கொள்பவர்களும், தமிழ் அரசியல் தலைமைகளும், சிவில் சமூகத்தினர் மற்றும் மத அமைப்புக்கள் என அனைவரும் தவறிவிட்டார்கள்.

இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் எமது உறவுகளின் விடுதலை விவகாரத்தின் வலிமையை மலிமைப்படுத்திவிடும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்துசெயற்படவேண்டும்.” என்றுள்ளது.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் நிலையை ஐ.நா. தூதுவர்களுக்கு எடுத்துக்கூற சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை; பெற்றோர் ஆதங்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com