Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2009 மே 18 உலக பந்தில் வரலாறாய் பதியப்பட்ட நாள்.

தமிழர்கள் தலை தலையென அடித்து ஓ என்று உரைக்க அழுத நாள்.

உயிரைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையோடு ஏங்கி ஏங்கி நகர்ந்தவர்களை கொன்றொழித்த நாள்.

ஒட்டுமொத்த தமிழின அழிப்புக்குமான இறுதிப் போர் நாள்.

என்ன செய்வது? தமிழர்கள் என்பதால் எப்படியும் கொன்றொழி என்ற பேரினவாதத்தின் கோர தாண்டவம் உச்சமடைந்த நாளும் இதுவே.

வன்னிப் பெருநிலப்பரப்பு உட்பட தமிழர் தாயகம் எங்கும் நடந்த இன அழிப்பில் உயிரிழந்த அத்தனை உறவுகளையும் தமிழினம் ஒன்றாகச் சந்திக்கின்ற நாளும் இது என்பதால் தமிழர் உள்ளம் விடிகாலப் பொழுதோடே கனத்துக் கொள்கிறது.

ஓ! முள்ளிவாய்க்கால் எங்கள் உறவுகள் முடித்துக் கட்டப்பட்ட இடத்தின் பெயர்.

முகவரிக்கே முடக்குப்பட்டுக் கொண்டிருந்த முள்ளிவாய்க்கால் இன்று தமிழினம் அழிக்கப்பட்ட இடமாகி உலகம் முழுவதும் அறிமுகமாகிக் கொண்டது.

இன்று வன்னிப்போரில்-முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்காக கண்ணீர் விடுகின்றோம்.

ஓ! எம்மோடு வாழ்ந்த உறவுகளே! உங்களைப் பறிகொடுத்து நாம் படும் துன்பம் கொஞ்சமல்ல.

உங்கள் இழப்புக்கள், இந்த உலகில் இனி நமக்கு எதுவும் வேண்டாம் என்று உணரும் அளவில் வேதனை எம்மை முட்டிக்கொண்டே இருக்கிறது.

ஆறுதல் சொல்ல முடியாத அளவில் உங்கள் இழப்பு எங்களைக் கொல்கிறது.

ஓ! உங்களை கொன்றால் எஞ்சியவர்கள் உங்களை நினைந்து நினைந்தே கொல்லப்படுவார்கள் என்பதே பேரினவாத ஆட்சிக்கு நன்கு தெரியும் போல.

அதனால்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் அரசும் சர்வதேசமும் அமைதி காக்கின்றன போலும்.

இழந்ததை நினைந்து உருகும் தமிழன் இனி எங்கே தலை நிமிரப் போகின்றான் என்ற நம்பிக்கையில்தான் நல்லாட்சியும் நல்லது இறந்தவர்களை நினையுங்கள் என்ற அனுமதி தந்திற்றோ.

யார் அறிவார் பேரினவாதிகளின் செயலை?

ஓ! ஐ.நா சபையின் செயலாளர் நாயகமே! வன்னிப் போருக்குப் பின் உலங்கு வானூர்தியில் நீங்கள் வலம் வந்து முள்ளிவாய்க்காலை சுற்றிப் பார்த்ததாக ஞாபகம்.

உயிரிழந்த தமிழன் ஆயுதத்தோடு நிற்கிறானோ என்று வேவு பார்த்து தகவல் கொடுக்க வந்தீர்களோ தெரியவில்லை.

அந்தோ! தமிழினம் அழிப்புச் செய்யப்பட்ட நாள் இன்று.

அன்புக்குரிய தமிழ் நெஞ்சங்களே! ஒட்டு மொத்தப் போரிலும் எங்களை மிஞ்சவைத்து தங்களை ஆகுதியாக்கிய அத்தனை தமிழ் உறவுகளையும் நெஞ்சத்தால்-இதயத்தால் நினைந்து தொழுவோம்.

விம்மி எழும் அழுகுரல்கள் கேட்டு கலங்கிய விழிகளோடு எங்களைப் பார்த்திருக்கும் உறவுகளே! உங்களிடம் இன்னுமொரு கோரிக்கை.

உங்கள் ஆத்மபலத்தால் மட்டும்தான் தமிழினத்துக்கு விடிவு கிடைக்க முடியும்.

ஆதலால் உங்கள் ஆத்ம பலத்தை இறை பலத்தோடு இணைத்து தமிழின வாழ்வுக்கு உதவுங்கள்.

ஆம், எங்களுக்காக உங்களை இழந்த உங்களிடம்தானே! இதைக் கேட்க முடியும்? செய்திடுக.

0 Responses to ஈழ போரில் தங்களை ஆகுதியாக்கிய தமிழ் உறவுகளை இதயத்தால் தொழுகின்றோம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com