Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆயுத மோதல்கள் நீடித்த காலப்பகுதியை விடவும், யாழ்ப்பாணத்தில் தற்போது நிகழுகின்ற சமூக சீர்கேடுகள் அச்சத்தினையும், பீதியையும் ஊட்டுவதாக யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் ஆயர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

கொலை, களவு, வாள்வெட்டு, குழுச்சண்டைகள், போதைப்பொருள் பாவனை, கலாசார சீரழிவு போன்ற பல்வேறு விடயங்களால் யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வியல் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விடயத்தில் புத்திஜீவிகள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், கல்வியாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரிய தரப்பினர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முன்வருதல் அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்செயல்களைத் தடுப்பது என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் விழிப்புணர்விலேயே தங்கியுள்ளது எனவும் குற்றச்செயல்களுக்கு தமது எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கு உள்ளது எனவும் யாழ். ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டம், ஒழுங்கை பாதுகாப்பவர்கள், அரசியல்வாதிகள் இது விடயத்தில் அக்கறையுடன் செயற்படுவதற்குத் தேவையான அழுத்தங்களை பிரயோகிக்க முன்வருதல் அவசியமாகும் எனவும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

கல்வியால் மிகச் சிறந்த பிரதேசமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம் இன்று கல்வியில் கீழ்நிலைக்குச் சென்றமைக்கு சமூகச் சீர்கேடுகளும் போதைப்பொருள் பாவனையுமே காரணம் என்பதனை எவரும் மறுப்பதற்கில்லை என அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள சமூக சீர்கேடுகள் அச்சத்தை ஊட்டுகின்றன: யாழ். ஆயர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com