Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனவாதத்தை முன்னிறுத்திக் கொண்டு பேரணி செல்லும் கூட்டு எதிரணியினரைப் (மஹிந்த ஆதரவு அணி) பார்த்து, தமிழ் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும், அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பேரணி செல்பவர்களுக்கு அஞ்சி, அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் தடைகளோ முட்டுக்கட்டைகளோ ஏற்பட்டுவிடும் என்று தமிழ் பேசும் மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனூடாக தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவே தேசிய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிரணியின் பேரணிக்கு எவ்விதமான இலக்கும் இல்லை. எவ்விதமான இலக்குகளும் இல்லாமல் ஏன் இவ்வாறான போராட்டத்தை செய்கின்றனர் என்று புரியவில்லை என்றும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கூட்டு எதிரணியின் பேரணிக்கு எவ்விதமான இலக்கும் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறான பேரணியை முன்னெடுத்து ஒருபோதும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. காரணம் 19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியாது.

அதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலும் நடைபெறாது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடவும் முடியாது.

எனவே, எவ்விதமான நோக்கமுமின்றி ஏன் இந்தப் பேரணியை கூட்டு எதிரணி முன்னெடுக்கின்றது என்று எங்களுக்கு புரியவில்லை. வற் வரி அதிகரிப்புக்கு எதிராக இந்தப் பேரணி இருக்குமாயின் ஒரு நியாயம் இருந்திருக்கும். ஆனால் இந்தப் பேரணியால் இனவாதமே தூண்டப்படுகின்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு எதிராக கோஷமிடுகின்றனர். இதன்மூலம் எதனை அடையப்போகின்றனர் என்று புரியவில்லை. அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்பது நிச்சயமாகும். ” என்றுள்ளார்.

0 Responses to பேரணிக்காரர்களைப் பார்த்து தமிழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை: டிலான் பெரேரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com