Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றச் செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இணைக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்தத் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக, அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், பைசர் முத்தப்பா மற்றும் டி.எம்.சுவாமிநாதன் ஆகிய மூவரைக்கொண்ட விசேட செயலணி ஒன்றை தாங்கள் உருவாக்கியிருந்தீர்கள். வடக்கிலிருந்து ஒருவரும் நியமிக்கப்படவில்லை என்ற வடக்கு மாகாண சபையின் ஏகமனதான தீர்மானத்தையடுத்து, அமைச்சர் துமிந்த திசாநாயக்கவையும் இணைத்துள்ளீர்கள்.

யுத்தம் முடிந்து ஏழாண்டுகள் கழிந்த நிலையிலும், மக்கள் முழுமையாக தமது சொந்த இடங்களுக்குப் போக முடியவில்லை என்பது உண்மையே. வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை என்பதுடன், குறிப்பிட்டளவு முஸ்லிம் மக்களும் இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய மீள்குடியேற்றம், மிகப்பெருமளவு வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டிருப்பதால், வடக்கு மாகாண முதலமைச்சரும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த எண்ணம் ஆகும். இந்நிலையில், வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை நியமித்தமை, தமிழ் மக்களின் மனதை புண்படுத்திய செயல் என்பதை தாங்கள் மறுக்கமாட்டீர்கள்.

காணிகளை இனங்காணல், வீட்டுத் திட்டங்களை உருவாக்குதல், வாழ்வாதாரங்களை ஏற்பாடு செய்தல் போன்ற பல விடயங்கள் இந்த மீள்குடியேற்றத்துடன் அடங்கியுள்ளது. இந்நிலையில், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சரான இளைப்பாறிய உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயாவை, நியமித்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை தாங்கள் பெற்றிருக்கலாம்.

வடக்கு மாகாண முதலமைச்சரைத் தவிர்த்து ஒரு செயலணியை உருவாக்குவது எந்த விதத்தில் சரியானதும், நீதியானதுமாக அமையும் என்று தாங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? வடக்கு மாகாணத்தில் புதிதாக மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பூர்வீக சிங்கள கிராமங்கள் என்று எவையும் இல்லை. ஆனாலும்கூட, குடியேற்றங்களினூடாக சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது உண்மை. அத்தகைய சிங்கள மக்கள் ஏற்கனவே குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்கு அப்பால் யுத்தத்தின் பின்னர் புதிய சிங்கள குடியேற்ற கிராமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

வுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இத்தகைய சிங்கள குடியேற்றங்கள் உருவாகியிருப்பதை நீங்கள் நன்கறிவீர்கள். இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உருவாக்கியிருக்கின்ற இந்த செயலணியானது புதிய சிங்கள கிராமங்களை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்காகவா? என்ற ஐயமும் உருவாகின்றது. அதனை நோக்கமாகக்கொண்டுதான் இந்த செயலணியிலிருந்து முதலமைச்சர் தவிர்க்கப்பட்டாரா? என்ற எண்ணம் எம் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை நீங்கள் சமத்துவமாக நடத்துவீர்கள் என்ற எதிர்பார்ப்பிலும், தமிழ் மக்களின் உரிமைகளை நியாயமாக வழங்குவீர்கள் என்ற எதிர்பார்ப்பிலும், தமிழ் மக்களின் தனித்துவம் காப்பாற்றப்பட்டு அவர்களுடைய கலாசாரம், பண்பாடுகள் யாவுமே பாதுகாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலும் தான் தமிழ் மக்கள் உங்களுக்குப் பாரிய அளவில் வாக்களித்து உங்களை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள். ஆனால் தங்களின் இச்செயற்பாடு நம்பிய மக்களை ஏமாற்றியதாக அமைந்துள்ளது.

தமிழ் மக்கள் தமது தனித்துவத்தையும், சுயமரியாதையையும், சுயகௌரவத்தையும் காப்பாற்றுவதற்காகவே நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பதை தாங்கள் கவனத்தில் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன். ஆனால் உங்கள் ஆட்சியிலும் அவர்களது சுயகௌரவமும், சுயமரியாதையும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. இது உங்களது ஆட்சிக்கும் நற்பெயருக்கும் ஏற்படும் களங்கமாகவும் அபகீர்த்தியாகவும் அமையும் என்பதைத் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த வேளையில் தங்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகின்றேன்.
1. இத்தகையதொரு செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரை நியமித்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை மீளப்பெறுமாறு வேண்டுகிறேன்.
2. உங்களது தலைமையில் கீழ் உள்ள ஆட்சியில் புதிய சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மத ஆக்கிரமிப்பு நடைபெறுவதை தடைசெய்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.” என்றுள்ளது.

0 Responses to மீள்குடியேற்றச் செயலணியில் சி.வி.விக்னேஸ்வரனை உள்ளடக்கக் கோரி மைத்திரிக்கு கடிதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com