Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2016 ஆம் ஆண்டு கடந்த மில்லியன் கணக்கான வருடங்களாக இல்லாத அளவுக்கு பூமியின் வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவின் சதவீதம் மிகவும் அதிகரித்திருப்பதாகவும் இது ஒரு பின்னோக்கிய சாதனை எனவும் அதிர்ச்சித் தகவலை இன்று திங்கட்கிழமை ஐ.நா சபை வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு வரை ஏற்பட்டுள்ள கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவின் அதிகரிப்பு உலகளாவிய ரீதியில் கடல் நீர் மட்டம் 20 மீட்டர் அதிகரிப்பதற்கும் வளிமண்டலத்தில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிப்பதற்கும் போதுமானது எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நாவின் உலக காலநிலை அவதான அமைப்பு வெளியிட்டு வரும் வருடாந்த பச்சை வீட்டு விளைவு வாயு (Greenhouse Gas) தொடர்பான அறிக்கையில் இது தொடர்பிலான மேலும் சில அதிர்ச்சி தரும் புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன. இதில் கடந்த ஒரு தசாப்தத்தின் சராசரி கார்பன் வாயு அதிகரிப்பு அளவை விட 50% வீதம் வேகமாக கடந்த சில வருடங்களாக பச்சை வீட்டு விளைவு வாயுவான கார்பன் வாயுவின் அதிகரிப்பு இருந்து வருகின்றது.

ஐ.நா இன் இந்த அறிக்கையை அடுத்து எதிர்வரும் நவம்பர் மாதம் பொன் (Bonn) நகரில் முன்னதாக 2015 ஆம் ஆண்டு 195 நாடுகள் கலந்து ஏற்றுக் கொண்ட பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தப் பிரகாரம் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சுற்றுச் சூழல் அமைச்சர்கள் அவசரமாகக் கூடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்ததில் இருந்து இந்த ஒப்பந்தத்தின் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பூமி சந்தித்த இறுதி பனி யுகத்தின் (Ice age) பின்னர் அது மீண்டு வந்ததில் இருந்து முதன் முறையாகக் கடந்த சில தசாப்தங்களாகத் தான் பூமியின் வளிமண்டலத்தில் 100 மடங்கு அதிகமாக கார்பன் டை ஆக்ஸைட்டு வாயு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சுற்றுச் சூழல் நிலை முன்னதாக சுமார் 3 தொடக்கம் 5 மில்லியன் வருடங்களுக்கு முன்பு மத்திய Pliocene யுகத்தில் நிலவியதற்கான ஆதாரமே இருப்பதாகவும்  விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் 1990 ஆம் ஆண்டு முதல் பூகோள வெப்பமயமாதலுக்குக் (Global warming) காரணமான பச்சை வீட்டு விளைவு வாயுக்களில் கார்பன் டை ஆக்ஸைட்டுடன் இன்னும் சில பிரதான வாயுக்களான மெதேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைட்டு ஆகியவையும் கடந்த வருடம் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

0 Responses to 2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவின் சதவீதம் மிகவும் அதிகரிப்பு! : ஐ.நா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com