Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்மக்களுக்காக, தமிழீழ நாட்டிற்காக, தங்களையே அர்ப்பணித்த தற்கொடையாளர்களை நினைவில் கொள்கின்றநாள்.தரணியில் தமிழனை தலைநிமிரவைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரர்களை நெஞ்சினில் நிறுத்தி, மலர்தூவி தலைதாழ்த்தி வீரவணக்கம் செலுத்தும் நாள்.

தரணியில் தமிழனை தலைநிமிரவைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரர்களை நெஞ்சினில் நிறுத்தி, மலர்தூவி தலைதாழ்த்தி வீரவணக்கம் செலுத்தும் நாள்.

இந்நாளில் நாம் எடுக்கின்ற உறுதிமொழி, களத்தில் காவியமான கதாநாயகர்களின் எண்ணங்களில் உறைந்திருந்த தமிழீழத் தாயக இலட்சியத்தை ஈடேற்றும்வகையில் ஒற்றுமையாய், ஒரணியில்திரண்டு தமிழனுக்கென்றோர் நாடு தரணியில் அமையப்பெற சத்தியம் செய்துகொள்வோம்.

நாம்வாழ, நமக்கென்றோர் நாடு அமைய, நெருப்பாய் எழுந்து தரையில், கடலில், வான்வெளியில் களமாடி சாவிலும் சரித்திரம் படைத்த மாவீரர்கள், முகம்தெரியாமல் முழுநிலவாக எங்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கின்ற சாதனை வீரர்கள், எமது விடுதலைப் போராட்டத்துக்கு அதரவு வழங்கிய நாட்டுப்பற்றாளர்கள், எமது போராட்டத்துக்காக குரல்கொடுத்து செயல்பட்ட மாமனிதர்கள், மற்றும் இப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்த மக்கள் ஆகியோரை என்றும் எம் இதயத்தில் வைத்து ஆராதிப்போம்.

தாய் நிலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் சிதைக்கப்பட்டபோதும் புலத்தில் எமதுமக்கள் ஒன்றுதிரண்டு எமது தேசிய வீரர்களை நினைவில் கொள்கின்றார்கள். இவர்களைப் பெற்றெடுத்த தாய்மார்கள், இவர்களின் உறவுகள் இந்நாளில் தாய்நிலத்தில் இல்லங்களிலிருந்து ஏங்குகின்றபோதும் புலத்தில் நாம் செலுத்துகின்ற வீர வணக்கம் நிலத்தில் நிம்மதியைக்கொடுக்கின்றது.

எமது தேசிய வீரர்களை என்றும் நாம் மறக்கக்கூடாது. அவர்கள் தங்களின் வாழ்வைப்பற்றி சிறிதளவேனும் சிந்திக்காது ஒட்டுமொத்த தமிழினத்தின் வாழ்வே தமது இலட்சியமென்று எதிரி படைகளை எமது மண்ணிலிருந்து விரட்டியடிக்க களமாடிய மாவீரர்கள்தான் எமது தேசிய செல்வங்களாகும். இவர்கள்தான் எமது வழிகாட்டிகள் என்பதையும் இந்நாளில் எமது மனங்களில் அழியாத நினைவாக வைத்துக்கொள்வோம்.

ஒன்றா, இரண்டா எண்ணற்ற வீரமறவர்கள் சிந்திய செங்குருதி, எமது மண்ணுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்குமென்ற உறுதி வீரம் செறிந்த விடுதலைப் போரில் வெளிப்பட்டது. எங்கள் சந்ததியினரின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு எமது மண்ணில் தங்களை விதைத்தார்கள். நிச்சயம் வேரூன்றி விருட்சமாக எழுவார்கள். அப்போது எமது மக்கள் விடுதலையைப் பெறுவார்கள்.

எமது வரலாறு காட்டிய பாதையில் புயலாக எழுந்து தமிழர் வரலாற்றை நிலைநிறுத்த நிமிர்ந்து நின்றவர்கள். காலத்தால் அழியாத வரலாற்றுப்பதிவை தங்கள் வீரத்தால் எழுதி வீழ்ந்தவர்கள். என்றென்றும் எங்கள் உள்ளத்தில் வைத்து உணர்வோடு வணங்க வேண்டியவர்கள்.

நாம் தமிழர் என்று சொல்வதற்கும், தன்மானத்தோடு வாழ்வதற்கும் தங்களை அர்ப்பணித்து தமிழர் வரலாற்றில் நிமிர்ந்து நிற்பவர்கள்.

நாம் எம்மை அறிந்து கொள்வதற்கும், எமது வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கும், தாய்மொழியான தமிழின் சிறப்பையும் நீண்ட வரலாற்றையும். உலகின் மனித இனம் நாவசைத்தபோது எழுந்த மொழிகளில் ஒன்றாக வரலாற்றுப்பதிவில் அழியாத இடத்தில் அமர்ந்திருக்கின்ற எம்மொழியை பாதுகாக்கவும், அரியணையில் வைத்து அழகு பார்க்கவும் நாம் தயங்குவது இன்று எம்முள் எழுந்துள்ள சவாலாகவும் இருக்கின்றது.. எமது மாவீரர்கள் எதற்காக தங்களை தாய்மண்ணில் விதைத்தார்களோ? அதற்காக நாம் இத்தருணத்தில் உறுதியாக சில முடிவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடலைத் தாய் மண்ணுக்கும் உயிரைத் தமிழுக்கும் கொடுத்துள்ள இந்த உத்தமர்கள் தங்கள் வாழ்வின் மூலம் தமிழர் வரலாற்றுக்கு பெருமை சேர்த்துக்கொண்டவர்கள். சொல்லியதை செயலில் காட்டிய செயல்வீரர்கள் என்றும் எமது வழிகாட்டிகளாகும்.

20 ஆம், 21 ஆம் நூற்றாண்டுகளில் உலகில் நீதியான, நேர்மையான, எமது தேசிய இனத்துக்கான, வீரம்செறிந்த மாபெரும் விடுதலைப்போரை எமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடத்தியிருக்கின்றோம். நாம் உரிமையோடு, உலகில் தலைநிமிர்ந்து வாழ்வதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் சில நாடுகள் சிங்கள ஆக்கிரமிப்பளார்களுக்கு உதவி புரிந்ததின் மூலம் எமது வீர விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.

தமிழர்களின் வரலாற்றில் சோழர்காலம் பொற்காலமாக கருதப்பட்டது. அதற்குப் பிறகு புலிகளின் காலமே பொற்காலமாகும். தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் என்றும் இதனை குறிப்பிடமுடியும்.

உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் நாம்தமிழர் , நமது மொழி தமிழ், நமது நாடு தமிழீழம், நமது தேசியகொடி புலிக்கொடி, நமது தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் என்பவை தொடந்தும் எமது சந்ததியினரின் மனதில் ஆழமாக பதியப்படவேண்டும். அப்போதுதான் எம்மால் உறுதியாக விடுதலையைப் பெறமுடியும். புலத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தமிழனும் சொல்லிலும், செயலிலும் எமது நாடு தமிழீழம் என்பதை ஏனைய இனத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும்.

சுயநலத்திற்கு அப்பால் தமிழ் மக்களின் உரிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அர்ப்பணிப்போடு செயலாற்றி ஒவ்வொரு மாவீரரின் நினைவில் அழியாத ஓவியமாக பதிந்துள்ள தமிழீழ நாட்டின் வரைபடம் உலகப்படத்தில் இடம்பெறவும் , உலக அரங்கில் எமது தேசியக்கொடியான புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கவும், தொடர்ச்சியாக எமது மக்களின் குரல் ஒவ்வொரு நாடுகளிலும் ஓங்கி ஒழிக்கவேண்டும்.

எமது விடுதலைப் போராட்டத்தை விழுதுகள்போல் தாங்கிநின்ற மக்கள் , மாவீரர்களை ஈன்றெடுத்த பெற்றோர்கள் , எமது வீரர்களோடு உறவாடி உதவிகள் புரிந்து விடுதலையை நேசித்தவர்கள் இன்னும் எமது மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். புலத்தில் வாழ்கின்ற மக்களை நோக்கியவண்ணம் காத்திருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு உதவி புரிவது எமது கடமைகளில் ஒன்று என்பதை எப்போதும் நாம் மறக்கக்கூடாது. இதனை திடமாக இந்நாளில் புரிந்து கொள்வோம்.

தாய்மண்ணில் இன்று அரசியல்சூழ்நிலை மாறியுள்ளது. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறி விடுதலைப் புலிகளின் வீரமும், தீரமும் தீர்க்கமான தற்கொடைகளும், சாதனைகளும் சரித்திரத்தில் இடம்பெற இலட்சிய வெற்றிக்கு முன்னதாக இடையூறு ஏற்படுத்தும் விதமாக இடைக்கால தீர்வாகக்கூட இல்லாத நிலையில் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் மீண்டும் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் அரசியல் ரீதியாக முன்னிலை படுத்தப்பட மக்கள் தங்கள் வாக்குகளை பெருவாரியாக அளித்துள்ளார்கள்.

அமைதிவழிப் போராட்டங்கள், அரசியல் அரங்குப் போராட்டங்கள் ஏற்படுத்தாத தாக்கத்தினை விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் ஏற்படுத்தியதனால் உருவான மாகாண சபைகள் இன்று அரசியல் அரங்கில் மக்களின் விடுதலைக்கான கதவாக இருந்த போதும் இதன் இறுதி வெற்றிக்கும், தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமை நிலைநிறுத்தப்படுவதற்கும் எமது மாவீரர்களின் தற்கொடைகள்தான் காரணமாக அமைந்துள்ளன.

எமக்காக எமது மேம்பாட்டு வாழ்வுக்காக தங்களையே தாய்மண்ணுக்கு உரமாக்கிய சரித்திர நாயகர்களின் நினைவு தலைமுறை, தலைமுறையாக எமது வாழ்வோடு கலந்து விடுகின்றபோது, அவர்களின் உறங்காத ஆன்மாக்கள் எமக்கான பலத்தை, உறுதியை உணர்வை ஏற்படுத்தித்தரும் என்பது காலத்தின் நியதியாகும்.

மாவீரர்களின் நினைவுகளை சுமந்து அவர்களின் எண்ணங்களுக்கேற்ற விதத்தில் உலக மக்களோடு ஒன்று கூடி எமது உரிமையை பெற்றுக்கொள்வோம்.

கார்த்திகை 27 ம் நாள்.
தமிழீழத் தேசிய மாவீரர்நாள்.

0 Responses to தமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com