Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக காப்பாற்றுவார் என்று புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழு உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "புதிய அரசியலமைப்பு மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்கும் கூறவில்லை. சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையில் மாற்றம் வரும் என்றே அவர் கூறியிருந்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் ஆகியவற்றையே பிரதான வாக்குறுதிகளாக 2015இல் ஜனாதிபதி வழங்கியிருந்தார். ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றிபெற்றிருந்தாலும் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தும், 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக ஜனாதிபதி பல சந்தர்ப்பங்களில் அறிவிப்பு விடுத்திருந்தார். தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும் அறிவித்திருந்தார்.

மைத்திரிபால சிறிசேன மாத்திரமல்ல, மஹிந்த ராஜபக்ஷவும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட்டு சர்வஜன வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தார். கட்டாயம் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி ஒழிப்பார் எனத் திடமாக நம்புகின்றோம்.

2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் பிரதான கருப்பொருள் புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் என்பதாகும். அந்தச் செயற்பாட்டையே தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.

ஆனால், புதிய அரசமைப்பின் மூலம் நாடு பிளவுபடப் போகின்றதென நாட்டில் சிலர் பொய்ப் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளனர். புதிய அரசமைப்பின் மூலம் நாடு பிளவுபடாதென இடைக்கால அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பையும் காட்டி இறையாண்மை பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை என்பது பிரிக்க முடியாத பிளவுபட முடியாத நாடாகும். அத்துடன், இலங்கையின் ஒரு பகுதியை தனிநாடாகப் பிரகடனப்படுத்த முடியாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏக்கிய ராஜ்ய என்றால் ஒருமித்த நாடாகும். தற்போதுதான் இலங்கை என்பது ஒரு நாடாகக் கூறப்பட்டுள்ளது. 2000ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டிருந்த தீர்வுத்திட்டத்தில் இலங்கை என்பது பிராந்தியங்களில் ஒன்றாகவே கூறப்பட்டுள்ளது. அவ்வாறு தீர்வுத் திட்டங்களைக் கொண்டுவந்தவர்கள்தான் இன்று எதிர்க்கின்றனர்.

எனக்கு ஏற்பட்டுள்ள ஓர் அனுபவத்தில் சொல்கின்றேன். நாம் தேநீர்க் கோப்பையைத் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக உள்ளபோதிலும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லை என்பதே நிதர்சனம். தேசிய பாதுகாப்புடன் பிரிக்கப்படாத இறைமையின் அடிப்படையில் இம்முறை சிறந்த தீர்வுத்திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

மாகாண சபையொன்றில் அசாதாரண நிலை ஏற்படும்போதும், கலவரங்கள் அல்லது ஸ்திரத்தன்மை ஏற்படும்போதும் அதிகாரங்களை மத்திய அரசின்கீழ் கொண்டுவர முடியும் என்பதுடன், மாகாண சபையைக் கலைக்கவும் முடியும். முப்பது வருடகாலம் கரைபடிந்த அனுபவம் எமக்குள்ளது. அதனடிப்படையில் முன்னோக்கிப் பயணிப்பதற்கான பாதையை நாம் புதிய அரசியலமைப்பின் மூலம் உருவாக்குவோம்.” என்றுள்ளார்.

0 Responses to நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக அளித்த வாக்குறுதியை மைத்திரி காப்பாற்றுவார்: ஜயம்பதி விக்ரமரட்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com