Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாநிதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் பயணத்தை சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) ஆரம்பித்தார்.

இன்று காலை அப்துல் கலாம் இல்லத்துக்கு சென்ற கமல்ஹாசன், கலாம் சகோதரரை சந்தித்து ஆசிபெற்றார்.

தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிமுகம் செய்ய உள்ளார். கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன் தனது நண்பர்கள் மற்றும் மூத்த அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை துவங்குவதாக கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று கமல்ஹாசன் காலை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்றார். அப்துல் கலாம் இல்லம் சென்ற கமல்ஹாசனை, கலாமின் பேரன் சலீம் வரவேற்றார். இதையடுத்து, வீட்டிற்குள் சென்ற கமல்ஹாசனுக்கு, அப்துல்கலாமின் அண்ணன் முத்துமீரான் மரைக்காயர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அப்துல் கலாம் சகோதரரிடம் கமல்ஹாசன் ஆசி பெற்றார்.

பின்னர், கலாமின் பேரன் சலீம், கமல்ஹாசனுக்கு அப்துல் கலாம் படம் பொறித்த நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினார். நினைவுப்பரிசை ஆர்வத்துடன் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, அப்துல் கலாம் வீட்டில் காலை உணவை கமல்ஹாசன் உட்கொண்டார். இதையடுத்து, ராமேஸ்வரத்தில் உள்ள கணேஷ் மஹாலில் மீனவர்களை சந்தித்து கமல்ஹாசன் பேசுகிறார்.

இதற்கு முன்பாக, அப்துல் கலாம் பயின்ற நடுநிலைப்பள்ளிக்கு சென்று கமல்ஹாசன் மாணவர்களுடன் உரையாடுவதாக இருந்தது. ஆனால், மாணவர்களுடன் அரசியல்வாதிகள் கலந்துரையாட விதிகளில் இடமில்லை என கூறி மாவட்ட கல்வித்துறை கமல்ஹாசன் திட்டத்திற்கு அனுமதி மறுத்தது. இதையடுத்து, கமல்ஹாசன் தனது திட்டத்தை ரத்து செய்தார்.

0 Responses to அப்துல் கலாம் இல்லத்திலிருந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார், கமல்ஹாசன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com