Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிதாக வரக்கூடிய ஜனாதிபதி எவராக இருந்தாலும், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முழுமையாக தீர்ந்து, தமிழ் மக்கள் கௌரவமாக இந்த நாட்டில் எல்லோருக்கும் இணையாக வாழக் கூடிய சூழல் உருவாக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தோருக்குமாக 24 துவிச்சக்கர வண்டிகளை பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் வழங்கி வைத்தார். இந்த நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாங்கள் மிக விரைவில் தேர்தல் ஒன்றை சந்திக்க இருக்கின்றோம். அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்றாவது முறை ஜனாதிபதியாக வருவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆசைப்பட்டு சட்டத்தை மாற்றி தான் மூன்றாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஒரு சட்ட திருத்தத்தை மேற்கொண்டு ஏற்படுத்தியுள்ளார்.

அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் மிகவும் விறுவிறுப்பான சுறுசுறுப்பான ஒரு கால கட்டமாக அமையும். இப்போது இருக்கும் ஜனாதிபதி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பெரும் முனைப்பில் இருக்கின்றார்.

எங்களுடைய தேவை என்னவென்றால் வன்முறையற்ற தேர்தலாக அது அமைய வேண்டும். மக்கள் மிரட்டப்படக் கூடாது. மக்களிடம் வாக்குச் சீட்டுக்கள் அடையாள அட்டைகள் பறிக்கப்படக்கூடாது. இந்த வகையில் மக்களின் வாக்களிக்கும் சுதந்திரம் பறிக்கப்படக்கூடாது. இந்த தேர்தல் காலத்தில் இவ்வாறான செயல்கள் நடக்கலாம் என்ற பயமும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது.

இன்னும் இரண்டு மாதங்கள் வரை உங்களுக்கு காலம் இருக்கின்றது. பல பேர் பல கருத்துக்களை சொல்வார்கள். பத்திரிகையில் பல செய்திகள் வரும். நீங்கள் எல்லாவற்றையும் எடை போட்டு யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது வாக்களிக்கக் கூடாது என்பதை தீர்மானிக்கும் வல்லமை உங்களிடம் தான் இருக்கின்றது.

ஆனால், மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால் ஆட்சிகள் மாறுகின்றன. ஜனாதிபதிகள் மாறுகின்றார்கள். எங்களுடைய பிரச்சினை மாறுகின்றதா? அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் ஒரு கூட்டத்திற்கு சென்றாலும் அறிவிக்க வேண்டும். அவர்கள் வந்து படம் எடுக்க வேண்டும். ஆகவே, நாங்கள் இவ்வாறான சூழ்நிலையில் இருக்கின்றோம் என்பது வருத்தப்படக்கூடிய விடயம்” என்றுள்ளார்.

0 Responses to புதிய ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க வேண்டும்: சுரேஷ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com