Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில், சகல வளங்களும் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து மிக விரைவில் தமிழ் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இது பின்னாளில் பாரதூரமான விளைவுகளையே உருவாக்கவுள்ளது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 125வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் நந்திக்கடல், வட்டுவாகல் மற்றும் நாயாறு பகுதிகள் ஆக்கிரமிக்கப்படவுள்ளமை தொடர்பாக து.ரவிகரன் சபையில் பிரேரணை ஒன்றை முன்மொழிந்தார். இந்தப் பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

து.ரவிகரன் தெரிவித்துள்ளதாவது, “2017.01.24ஆம் திகதி நிலைபெறுதகு அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவினால் நந்திக்கடல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுமாக 4141.67 ஹெக்டயர் நிலம் மற்றும் நீர்ப்பரப்புக்களையும் நாயாறு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுமாக 4464.35 ஹெக்டயர் நிலம் மற்றும் நீர்ப்பரப்புகளையும் 469 ஆம் அத்தியாயமான தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் 2 ஆம் பிரிவின் 01 ஆம் உட்பிரிவின் கீழான கட்டளை என்ற தலைப்பினுள் வர்த்தமானி மூலம் நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடம், நாயாறு இயற்கை ஒதுக்கிடம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம் 8606.02 ஹெக்டேயர்கள் இதற்குள் அடங்குகின்றன. இந்தப் பகுதிகளில் கிட்டத்தட்ட 9000 குடும்பங்களுக்கு மேல் தமது வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் தீர்க்கக்கூடிய வகையில் இந்நீர் நிலைகளை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள். பண்டைய காலந்தொட்டு ஒரு செழிப்பான இடமாகவும் மக்கள் இறால், மீன்கள் என வீச்சுவலைகள் மற்றும் நன்னீர் மீன்பிடி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட வலைகள் மூலமாகவும் தொழில் செய்து தமது ஜீவனோபாயத்தை காக்கும் இடமாகக் காணப்படுகின்றது.

இது தவிர இதனைச் சூழவுள்ள வயல் நிலங்கள் கூட இதனுள் அடங்குவதை அறிவிக்கப்பட்டுள்ள வரைபடம் காட்டி நிற்கின்றது. முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல், மட்டுமல்லாமல் வற்றாப்பளை அருகாக அமைந்துள்ள வயல் நிலங்களும் இதற்குள் அடங்குவதனை அறிய முடிகிறது. இதேபோல் நாயாற்றுப் பகுதி அநேகமாக இலங்கையிலேயே தூண்டில் தொழிலுக்கு பெயர் போன இடமாகும் அத்தோடு நந்திக்கடல் பற்றிகுறிப்பிட்ட அதே தொழில் வாய்ப்புகள் உள்ள மிக நீண்ட நீர்ப்பரப்புடனான இடமாகும். இங்கும் வயல் நிலங்கள் சிறு பயிர்ச் செய்கைக்கான இடங்களையும் உள்ளடக்கியே தமது கட்டுக்குள் கொண்டு வருகின்றார்கள்.

முல்லைத்தீவு சகல வளங்களுமுள்ள ஒரு இடமாகும். இங்கு பல வடிவங்களில் அரசாங்கம் நில அபகரிப்புகளை செய்து வருகின்றது. மணலாறு குடியேற்றம், மகாவலி எல் வலய போர்வையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புகள், பௌத்த பிக்குகளின் மதத்திணிப்புகள், தொல்பொருள் திணைக்களத்தின் காணிப் பறிப்புகள், வனவளத் துறையின் காணி பறிப்புக்கள், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் காணிப் பறிப்புகள், எனது கணிப்பின்படி முல்லைத்தீவில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஏக்கர்களுக்கு மேல் நிலங்கள், நீர்நிலைகள் என அபகரிக்கப்பட்டுள்ளது என அறியத் தருகின்றேன்.

இது மக்கள் வாழும் இடமென்ற நிலைமாறி திட்டமிட்டு தமிழ் மக்களை வெளியேற்றுமிடமாக மாறி வருகின்றது. ஆட்சியாளர்களின் அபகரிப்பு சிந்தனை மாறி, நியாயமான நிலையில் ஆட்சி செய்யுங்கள், தமிழர்களை ஒதுக்கிவிடும் நிலையை உங்களின் மனங்களிலிருந்து ஒதுக்கி விடுங்கள். இப்படியான திணிப்புக்கள் பாரதூரமான விளைவுகளை பின்னாளில் ஏற்படுத்தலாம் என எதிர்வு கூறுகின்றேன்.

ஜனநாயக நீரோட்டத்தில் எமது மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை எமக்குண்டு. உரிய இடங்களுக்கு இவற்றைக் கொண்டுசென்று தீர்வு பெற்றுத்தாருங்கள் என இச்சபையிலே எனது மக்களின் சார்பாளனாக முதலமைச்சர், அவைத் தலைவர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரிடமும் வேண்டி நிற்கின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தமிழ் மக்கள் முற்றாக வெளியேற்றப்படும் சூழல்: து.ரவிகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com