மாவீரன் தீரன் சின்னமலை என்றால் தற்போது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! 17ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த இவர் வெள்ளையரை எதிர்த்து கடும் போர் தொடுத்தவர். பாரிய படையணிகளை வழிநடத்தி வெள்ளையர்கள் மீது போர்தொடுத்த பெருமை மாவீரன் தீரன் சின்னமலையைச் சாரும். அவருக்கு ஒப்பாக நவீனகால போர்வீரன் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவப்படத்தோடு, தீரன் சின்னமலையின் நினைவு நாளை நடத்தியுள்ளனர் நாம் தமிழர் கட்சியினர். செந்தமிழன் சீமான் எழுச்சியுரை ஆற்றியுள்ளார். மக்கள் வெள்ளம் கடலெனத் திரண்டு வந்தது!
யார் இந்த மாவீரன் தீரன் சின்னமலை(ஒரு சிறிய குறிப்பு)
இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர் தீரன் சின்னமலை.இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார் மாவீரன் தீரன். .கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற அவர் மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாக போய் சொல் என்று சொல்லி அனுப்பினார்.
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாக விளங்கினார் தீரன். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் தீரன் ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.
அதுமட்டுமல்லாது நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் தீரனின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799- இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் தீரன் கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792- இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று தீரம் தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.
போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் தீரன் திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது. 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் தீரன் பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. அவரின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி தீரன் ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.
போரில் தீரனை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், அவரைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.
மாவீரன் தீரன் நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் மாவீரன் தீரன் அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். வெள்ளையர்கள் கொடுக்கும் அற்ப பதவிக்காக தனது லட்சியத்தை விட்டுக்கொடுக்கவில்லை. தனது இலங்கை நோக்கியே நகர்ந்தார். அதேபோலவே தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் மாறாத மன உறுதிகொண்டவர். அதனை எடுத்துக்காட்டுமுகமாகவே இந் நிகழ்வு செந்தமிழன் சீமானால் வெகு விமர்சையாக முன்னெடுக்கப்பட்டது.
அதிர்வு
சீமான் உரை
மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்: தேசிய தலைவர் படத்துடன் சீமான் உரை!
பதிந்தவர்:
தம்பியன்
08 August 2012
0 Responses to மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள்: தேசிய தலைவர் படத்துடன் சீமான் உரை!