இலங்கைக்கு அழுத்தம் தர அதுவே சிறந்த வழி என்கிறது பிரிட்டன்
இலங்கையில் வவுனியா அகதிமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் நடமாட்ட சுதந்திரத்தை வலியுறுத்தி, அந்த விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, இந்த வருடத்துடன் பருவமழை முடிந்த கையோடு அகதிகளுக்காக இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத் தப்போவதாக பிரிட்டன் மீண்டும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறது.
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இதுதான் ஒரே வழி என கூறியிருக்கும் பிரிட்டன், தனது இந்த முடிவைப் பின்பற்றி ஒட்டுமொத்தமாக நிதியுதவியை நிறுத்தி அழுத்தம் கொடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இலங்கை அகதிமுகாம்கள் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நீண்ட விவாதம் இடம்பெற்றது. பல மணி நேரமாக இடம்பெற்ற இந்த விவாதத்தின் இறுதியில் உரையாற்றிய அந்த நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக்பொஸ்ரர் மேற்படி கருத்தை சர்வதேச சமூகத்திடம் வெளியிட்டார்.
அவர் தமது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இலங்கைக்கான எனது விஜயத்தின் போது முகாம்களில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் நடமாட்ட சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே பிரிட்டனின் மிக முக்கிய முன்னுரிமைக் குரிய விடயம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளேன். பிரிட்டனால் மாத்திரம் இதனை சாதிக்க முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். சகல தரப்புகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் காரணமாக இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் உலக நாடுகள் ஐ.நா. அமைப்புகள் என சகல தரப்பும் இலங்கை அரசிற்கு தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்பட்ட அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.
அனைத்துத் தரப்பினரும் இலங்கைக்கு தெளிவான செய்தியினை வழங்க வேண்டியது அவசியம். இலங்கை அரசு அகதிகளுக்கு நடமாடும் சுதந்திரத்தை வழங்கினால் பருவப்பெயர்ச்சி மழைகாலத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை தவிர்க்கலாம். பருவப்பெயர்ச்சி மழைகாலத்தில் ஏற்படப்போகும் நிலைமையை எதனுடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால் முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள் கடும் மழையை எதிர்கொள்ள கூடியவை அல்ல. ஒக்ரோபர் 24ஆம் திகதி வரையிலான புள்ளி விவரங்களின் படி 35 ஆயிரத்து 822பேர் அவர்களது பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். 16ஆயிரத்து 490பேர் உறவினர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர மூவாயிரம் மக்கள் வதிவிட முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அரசின் 180நாள் அவகாசத்திற்குள் 80 வீதமானவர்களை விடுவிக்க முடியும் எனினும் 60ஆயிரம் பேரை விடுவித்தாலும் கூட இன்னமும் ஒருலட்சத்து 70ஆயிரம் பேர் முகாம்களில் இருப்பர். மோதல் முடிவடைந்து ஐந்து மாதங்களாகிவிட்டன. முகாம்களில் உள்ள பெரும்பாலானவர்களை விசாரிக்க ஐந்து மாதங்கள் போதும். இலங்கையில் இருந்தவேளை சொன்னதையே இப்போதும் திருப்பிச் சொல்கிறேன். பருவப் பெயர்ச்சி மழைகாலம் முடிவடைந்ததும் முகாம்களுக்கு நாம் மனிதாபிமான உதவியை வழங்கப்போவதில்லை, மிகவும் அவசியமான சூழ்நிலைகளைத் தவிர நாம் நிதியை வழங்கப் போவதில்லை பிரிட்டனின் நிலைப்பாடாக இதனைக் கருதுவது முக்கியத்துவமானது. நாம் செல்லவேண்டிய பாதை இதுவென்பதை ஏற்றுக் கொண்டு சர்வதேச சமூகம் நம்முடன் இணையும் என்று கருதுகிறோம். என்றார்.
வன்னி அகதிகளுக்கான நிதியுதவியை இந்த வருடத்துடன் நிறுத்த வேண்டும் -பிரிட்டன்
பதிந்தவர்:
தம்பியன்
30 October 2009



0 Responses to வன்னி அகதிகளுக்கான நிதியுதவியை இந்த வருடத்துடன் நிறுத்த வேண்டும் -பிரிட்டன்