இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து, அமெரிக்காவில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்கு ஏற்கனவே அவருக்கு விடுக்கப்பட்டிருந்த உத்தியோக பூர்வ அழைப்பை அந்த நாட்டு அரசு ரத்துச் செய்துள்ளது. அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமைக்கு உரித்தான பச்சை அட்டையைக் கொண்டவரான ஜெனரல் சரத் பொன் சேகா கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டன் பயணமானார்.
இந்த பயணம் தனிப்பட்ட விஜயம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கை அமெரிக்காவில் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஹவாயில் உள்ள அமெரிக்க பசுபிக் கட்டளை பீடத்தில் இடம்பெறும் நிகழ்வில் சரத் பொன்சேகா கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், ஹவாய் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சரத் பொன்சேகாவிற்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பு கடந்த சனிக்கிழமை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துவிட்டது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பட்ரீசியா புட்டெனிஸ், சரத் பொன்சேகாவிற்கு இத்தகவலைத் தெரியப்படுத்தினார் என ராஜதந்திர வட்டாரங்கள் குறிப்பிட்டன.



0 Responses to சரத்தை அமெரிக்க அரச நிகழ்வில் பங்குபற்ற விடுத்த அழைப்பு வாபஸ்