தனக்கு வாக்களிக்குமாறு ராஜபக்சே விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டனர். இதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கூறியுள்ளார்.அதிபர் தேர்தலில் பொன்சேகாவை ஆதரித்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. ஆனால் இந்த முடிவை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டார் சிவாஜிலிங்கம். தேர்தலில் அவர் மொத்தமே 9,662 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஒட்டுமொத்த தமிழர்களும் ராஜபக்சேவை நிராகரித்து விட்டனர். தன்னை மீண்டும் அதிபராக அமர அனுமதியுங்கள் என்று அவர் விடுத்த கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.
தமிழர்கள் மட்டுமல்லாமல் முஸ்லீம்களும் கூட ராஜபக்சேவை நிராகரித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் உத்தரவுக்கேற்ப அவர்கள் வாக்களித்துள்ளனர்.
ராஜபக்சே தனது பிரசாரத்தின்போது கடந்த தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் அதிபரானேன். இந்த முறை சிறுபான்மையினரின் (தமிழர்கள், முஸ்லீம்கள்) ஆதரவும் எனக்குத் தேவை என்று கோரியிருந்தார். ஆனால் அதை சிறுபான்மையினர் நிராகரித்துள்ளனர்.
எனவே தனது 2வது ஆட்சிக்காலத்திலாவது தமிழர்கள் மற்றும் முஸ்லீம்களின் நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் ராஜபக்சே பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நல்லாட்சியைத் தர முயல வேண்டும். தனது போக்கையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
தேர்தலின்போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அரசு ஊடகங்களும், நிறுவனங்களும் முழுக்க முழுக்க ராஜபக்சேவுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஊரகப் பகுதிகளில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
லாரிகள் நிறைய மது பாட்டில்கள், தையல் இயந்திரங்கள், பிற பொருட்ளை கொண்டு சென்று தமிழ் மக்களுக்குக் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து போயுள்ள தமிழ் மக்கள் அதை ஏற்கவில்லை.
எந்தவிதமான ஊழலுக்கும் அவர்கள் இடமளிக்கவில்லை. மாறாக ஒட்டுமொத்தமாக ராஜபக்சேவை நிராகரித்துள்ளனர். இதற்காக தமிழ் மக்களையும், முஸ்லீம்களையும் நான் பாராட்டுகிறேன், நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.
நன்றி: நக்கீரன்



0 Responses to ராஜபக்சேவை தமிழர்கள் நிராகரித்து விட்டனர்: சம்பந்தன்