வீரத்தமிழ் மகன் முத்துகுமார் அவர்களுக்கும், இன்னும் ஈழத்தழிழினத்திற்காக அக்கினித்தீயின் வாய்க்குள் இரையாகிப்போன அனைத்து தமிழ் மான வீரர்களையும் இதயத்தின் கனத்தவலியுடன் நினைவு கூர்ந்து எமது வீரவணக்கம் செலுத்துகின்றோம்.கொடிய சிங்களவனின் தமிழர் இனஅழிப்பை பொறுக்காது கைகொடுக்க வேண்டிய இரத்த உறவுகளான தமிழ்நாட்டு மக்களும், அதன் மாநில அரசுகளும், கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு நடிப்பையும், நாடகத்தையும் நடாத்திக் கொண்டிருந்த போது, தன்னைத் தானே தீ மூட்டி தமிழ்நாட்டு தமிழ்ச்சகோதரர்களுக்கு சூடேற்றி தம்மை மாய்த்துக்கொண்ட எம் இதய தெய்வங்களான எம் மாவீரர்களே !
கலைமான்களால் ஆமைகளுக்கு வேகத்தை கற்றுக் கொடுக்க முடியாமல் போனது பரிதாபத்திற்குரியது தான், அதே போல தமிழ் எங்கள் உயிர், மூச்சு என்றும் தமிழின தலைவன் தாம் என்றும் தம்மைதாமே சொல்லிக் கொள்பவர்களுக்கு உயிருடன் தமக்கு தாமே தீ மூட்டி, தம்மை அக்கினியில் சங்கமம்மாக்கி தமிழனாய் இரு, தமிழனை வாழவை பின்னர் தமிழினத்தலைவனாய் வா என்று உணர்த்தி சென்றீரே! தம் இனம் அழியும் போது உரியவர்கள் இவர்கள் கண்ணிருந்தும் குருடாகவும், காதிருந்தும் செவிடராகவும் இருந்ததற்கு நாம் என்ன செய்ய முடியும். ஆனால் நாம் இழந்தது ஆற்றலும், அறிவும், அளப்பரிய அர்ப்பணிப்பும் கொண்ட அரும்பெரும் செல்வங்களான உங்களையல்லவா?
ஈழத்தமிழன் இனம் காக்க 2002ல் தீயில் தியாகத்தை புரிந்த கவரிமான் அப்துல் ரகுமான் முதல் புலம்பெயர் மண்ணில் தன்னினத்திற்கு நீதி வேண்டி ஜெனீவா ஐ.நா முன்னிலையில் தீமூட்டிய உருகிப்போன குமரேசன் வரையும் அளப்பரிய தியாகங்கள். மாவீரர்களே மரணம் உங்களை ஒழித்து வைத்தாலும், மாபெரும் மௌனம் எம்மை இப்போது சூழ்ந்து கொண்டாலும், உங்கள் உணர்வுகளும், இதயத்துடிப்புகளும், எம் இதயத்தில் கேட்கின்றன.
உங்கள் மூச்சு எம்மை தினமும் உரசிச்செல்கின்றன. இந் நாட்களில் உங்கள் எங்கள் தேவையை நிறைவேற்றவில்லை என்றாலும் அது நிறைவேறும் அதன் காலம் தூரத்தில் இல்லை.
இந்நாளில் தீக்குள் இரையாகி அணைந்து போன அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் ஏற்றி வணங்குகின்றோம்
தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு



0 Responses to அக்கினித்தீயின் வாய்க்குள் இரையாகிப்போன அனைத்து வீரர்களுக்கும் வீரவணக்கம்: த.ம.பேரவை பிரான்சு