Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசதலைவர் தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவுக்கு தமிழர் தாயகத்தில் வாக்குகளை கிடைக்க விடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களுக்கு துரோகமிழைத்துவிட்டது என்று சிறிலங்கா அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பி.பி.ஸிக்கு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

சிறிலங்கா அரசதலைவர் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த ஒரு அடி ஆகும். தோல்வியடைந்த வேட்பாளரான சரத் பொன்சேகா மூலம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்த்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி ஒட்டு மொத்த தமிழ் பிரதேசங்களிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்குகள் குறைவாக விழுந்துள்ளதை ஏற்றுக்கொண்ட அவர் -

தமிழ் பகுதிகளில் தற்போதைய அரசதலைவருக்கு வாக்குகள் குறைவாக விழுந்ததற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த "துரோகம்" காரணம் என்று அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் கூறுகிறார்.

சிங்கள மக்களை தமிழ்மக்களின் நிரந்தர எதிரிகளாக வைத்து தாங்கள் அரசியல் நடத்தலாம் என்ற நிலைப்பாட்டுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டது. தமிழர் உரிமை, உரிமை என்று பேசிக்கொண்டிருப்பதில் இனி பயனில்லை. நாடாளுமன்ற நாற்காலிகளை அலங்கரிப்பதற்காகவே தமிழர்களின் உரிமை என்ற விடயம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால் யதார்த்தம் என்பது வேறானதாகவே காணப்படுகிறது.

மேலும் இந்தத் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வெல்வதற்கான வேலைத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்பதை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது - என்றும் அமைச்சர் முரளிதரன் கூறினார்.

0 Responses to தமிழ்மக்களுக்கு கூட்டமைப்பு துரோகமிழைத்துவிட்டதாம்: அதனை கருணா(ய்) சொல்கிறார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com