Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மீளக்குடியமர்ந்துள்ள தாம் முகாம்களிலேயே வாழ்ந்திருக்கலாம் என எண்ணுவதாக முல்லைத்தீவுப் பகுதியில் மீளக் குடியமர்ந்துள்ள மக்கள் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.

இன்று முல்லைத்தீவிற்கான பயணத்தினை மேற்கொண்ட சுரேஷ் பிறேமச்சந்திரன் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த மக்கள் தாம் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் தமக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. தொழில் முயற்சிகளுக்கான எந்தவித உதவிகளும் வழங்கப்படவில்லை. மீன்பிடித் தொழிலைப் பிரதான தொழிலாகக் கொண்ட தாம் மீன்பிடிக்குச் செல்வதானால் தமக்கு மீன்பிடி உபகரணங்கள் தேவை.

நாம் எமது மீன்பிடி உபகரணங்களை இடப்பெயர்வின் போது அம்பலவன் பொற்கணை, முள்ளிவாய்க்கால் பகுதிகளில் கைவிட்டுவிட்டே படைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றிருந்தோம். இன்று மீளக் குடியமர்ந்துள்ள நாம் எமது தொழில் உபகரணங்களை விட்ட இடத்திற்குச் சென்று எடுத்து வந்து தொழிலில் ஈடுபட அனுமதி கோரிய போதிலும் அனுமதி வழங்கப்படவில்லை.

மருத்துவமனை முல்லைத்தீவில் இல்லாத நிலையில் குமாரபுரம் பகுதியில் உள்ள மாஞ்சோலை மருத்துவமனைக்கே செல்லவேண்டிய நிலை உள்ளது. நாங்கள் கைவிட்டுச் சென்ற மிதிவண்டிகள் எதுவும் எமக்கு வழங்கப்படவில்லை. மருத்துவமனைக்கோ, ஏதாவது பொருட்களைப் பெறுவதற்காகவோ வெளியிடங்களுக்குச் செல்வதாக இருந்தால் யாரிடமாவது இரவலாகவே மிதிவண்டிகளைப் பெற்றுச் செல்லவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

இதேபோன்று பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் பல கிலோமீற்றர்கள் தூரம் நடந்தே பயணித்து தமது கல்வியைத் தொடரவேண்டிய நிலையில் உள்ளனர். என்று தெரிவித்த குறித்த மக்கள்,

இதனைவிடவும் தற்போது சீமெந்துப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறித்த எட்டு பொதிகளைப் பெறுவதற்கு காணி உறுதிப்பத்திரம் உட்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுகின்றது. போரின் போது உயிரை மட்டும் காத்துக் கொண்டால் போதும் என ஓடிய நாங்கள் எவ்வாறு உறுதிப் பத்திரங்களை வைத்திருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

பொருளாதார ரீதியில் எந்தவித முன்னேற்றமும் இன்றி எவ்வளவு காலத்திற்கு பிழைப்பு நடத்தமுடியும்? மாதத்திற்கு இரண்டு தடவைகள் வழங்கப்படுகின்ற நிவாரணப் பொருட்களை வைத்து மட்டும் வாழ்க்கை நடத்த முடியாது.

இந்த நிலையினை எண்ணிப் பார்க்கின்ற போது மீளக் குடியமர்ந்து அவலப்படுவதைவிடவும் முகாமில் இருந்து அவலப்பட்டிருக்கலாம் போன்ற எண்ணமே மேலோங்குகின்றது என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரனிடம் தெரிவித்த மக்கள் தமது வாழ்க்கை முன்னெடுப்பினை மேம்படுத்த உரியவர்கள் சரியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.

முல்லைத்தீவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த சுரேஷ்பிறேமச்சந்திரன் கற்சிலைமடுவில் உள்ள பண்டார வன்னியின் நினைவுத் தூபி உள்ள இடத்திற்குச் சென்று உடைக்கப்பட்ட நிலையில் காணப்படும் குறித்த சிலையினையும் பார்வையிட்டார்.

0 Responses to முல்லைத்தீவில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு வசதிகள் எதுவும் இல்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com