ஐ.நா அலுவலகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட வேளையில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசேட பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவரும் முற்றுகைப் போராட்டத்தை தலைமைதாங்கி நடாத்தியவருமான விமல் வீரவன்ஸவினால் பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் விமல் வீரவன்ஸ பொலிஸ் மா அதிபருக்கு செய்த முறைப்பாட்டில் கொழும்பு ஐ.நா. அலுவலகத்தில் பணிபுரியும் புலி உறுப்பினர்களிடமிருந்து இலஞ்சம் வாங்கிக் கொண்டு எம்மைத் தாக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்பட்டிருந்தது.
எனினும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளிடம் ஏற்கனவே வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மேலிடத்தில் கிடைக்கப் பெற்ற உத்தரவிற்கு அமைய ஐ.நா உத்தியோகத்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தியதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தரவுகளை உரிய முறையில் கடைப்பிடித்த தம்மீது தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் விசனம் வெளியிட்டுள்ளார். போராட்டக்காரர்களின் மீது பொலிஸார் தாக்குதல் எதனையும் நடத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த அதிகாரிகள் மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை அதிருப்தி அளிப்பதாக அந்த உயர்மட்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.



0 Responses to ஐ.நா அலுவலக முற்றுகையில் ஈடுபட்டவர்களை அகற்றிய பொலிஸார் மீது விசாரணை