இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதில் இந்தியாவின் உதவியும் ஆலோசனையும் தேவை. இவ்வாறு அமைச்சர் டியூ. குணசேகர கூறியுள்ளார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான அமைச்சர் டியூ.குணசேகர நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்த கூட்டத்திலும் தெல்லிப்பழை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்திலும் இடம்பெற்ற நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் ஆற்றிய உரை வருமாறு, இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் பாரிய பொறுப்பை நான் செய்துள்ளேன். தமிழ்-சிங்கள மொழியை அரச கருமமொழியாகப் பிரகடனப்படுத்தியுள்ளேன். புதிய அத்தியாயத்தின்படி கட்டாயமாகச் சகல தமிழ் அதிகாரிகளும் சிங்களம் கற்க வேண்டும். சகல சிங்கள அதிகாரிகளும் தமிழ் கற்க வேண்டும்.
2007 ஆம் ஆண்டு பொலிஸ் திணைக் களத்தில் 600 பேர் மட்டுமே தமிழ் தெரிந்த வர்களாக இருந்தார்கள். இப்போது 600 பேரை 6 ஆயிரம் பேராக உயர்த்தியுள்ளேன். அதேபோன்று முப்படைகளைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது. எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்-சிங்களம் ஆகியன கட்டாய மொழியாகப் பயன்பாட்டில் இருக்கும். எங்களுடைய முன்னைய தலைவர்கள் தனிமைப்படுத்தியிருந்த பிரச்சினையைத் தற்போது தீர்த்துள்ளோம். இதனூடாகத் தமிழ், சிங்கள மக்களிடையே தொடர்பையும் உறவையும் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
கடந்த காலங்களில் இரண்டு இனங்களுக்கிடையில் பல்வேறு பிரச்சினைகள் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்தக் கசப்பான விடயங்கள் பற்றிச் சிந்திக்காமல் எதிர்வரும் புதிய யுகத்திற்கான சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வரலாற்று ரீதியாக இன்று எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. யுத்தத்திற்குப் பின்பு தமிழ் மக்களுடன் சேர்ந்து பணியாற்றுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இனப்பிரச்சினை என்பது எங்களுடைய நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்தில் 80 ற்கும் அதிக மான நாட்டில் இன ரீதியாக, மொழி ரீதியாக, மத ரீதியாக, வர்த்தக ரீதியாகப் போராட்டங் கள் இடம்பெற்று வருகின்றன.
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு ஆட்சியிலிருந்தவர்களால் இந்தப் பிரச்சினைனைத் தீர்ப்பதற்கு முடியாமல் போனதுடன், அடையாளமும் காணமுடியாமல் போயுள்ளது. ஆகவே இதில் பாதிக்கப்பட்டவர்கள் மிக வும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்த மக்க ளே. இது வட பகுதியை மட்டும் பாதிக்கவில் லை. நாட்டில் எல்லாப் பகுதியையும் பாதித்துள்ளது. இந்த இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து முடிப்போம். இருந்தாலும் பிரதான அரசியல் கட்சிகள் மத்தியிலேயே ஒற்றுமை, ஒருமைப் பாடு இல்லாத காரணத்தினால் அவற்றைத் தீர்த்துக் கொள்ள முடியாமல் போயுள்ளது.
1987 ஆம் ஆண்டு 13-வது திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்ட போது நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்திலிருந்து அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வாக்களித்த ஒருவன் என்பதில் பெருமையடைகின்றேன். தற்போதைய சூழ்நிலையில் சகல அரசியல் கட்சிகளும் ஒரேயிடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். பிரச்சினையைத் தீர்க்கின்றபோது எங்களுடைய அனுபவம் மட்டும் அல்லாமல் அயல்நாட்டினுடைய அனுபவங்களையும் எடுத்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக இந்தியாவின் ஒத்துழைப்பையும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் உணர்வுகளையும் மதித்துத் தீர்வு காணப்படுவது அவசியம்.
இனப்பிரச்சினையை உணர்வுபூர்வமாக தீர்க்க முடியாது. அறிவுபூர்வமாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்கமுடியும். அந்த முடிவுக்கே தற்போது நாங்கள் சென்றுள்ளோம். ஆகவே தமிழ் மக்களின் ஒத்துழைப்புத் தேவை. யுத்தம் முடிவடைந்த பின்னர் அகதி முகாம்களில் வாழ்ந்த மக்களை விடுதலை செய்யும்படி நாடாளுமன்றத்தில் வாதாடினார்கள். அதற்கு நாங்கள் மறுப்புத் தெரிவித் தோம். காரணம் கண்ணிவெடி புதைக்கப்பட்ட காரணத்தால் மக்கள் மீளக்குடியேற முடியாமல் போனது.
தற்போது முடிந்தவரை மக்களை மீள்குடியேற்றியுள்ளோம். இன்னும் 40 ஆயிரம் மக்களே எஞ்சியுள்ளனர். வரும் மூன்று மாதங்களுக்குள் அவர்களையும் மீள்குடியேற்றுவோம். மிக விரைவில் மாகாண சபை, உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களை நடத்தவுள்ளோம். இதில் தமிழ் மக்கள் தங்களுடைய தலைவர்களைத் தெரிவு செய்து தமது அபிவிருத்திகளை மேற்கொள்ளமுடியும்.
9 மாகாண சபையையும் சமமாக அபிவிருத்தி செய்வதுதான் எமது நோக்கம். கடந்த 30 ஆண்டில் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட மேல் மாகாணம் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் மூன்று வீதம் மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட்டது. இச் சிறிய நாட்டில் எங்களை நாங்கள் அழித்துக் கொள்ளக் கூடாது என்றும் அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்தார்.



0 Responses to இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியாவின் உதவி தேவை: அமைச்சர் டியூ.குணசேகர