விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஈழத்தமிழ் சமூகத்தை அரசியல் வெறுமை சூழ்ந்து கொண்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்கான சரியான அரசியல் தலைமைத்துவம் இன்னமும் பரிணாமம் பெறாத இந்த நிர்க்கதியான நிலையைப் பயன்படுத்தி, எமது வளங்கள் அழிக்கப்படுகின்றன என்று சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.வவுனியாவில் பொ.ஐங்கரநேசனின் ”ஏழாவது ஊழி” நூல் அறிமுக விழா அண்மையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் எற்புரை நிகழ்த்திய அவர் மேலும் தெரிவிக்கையில், அறிவியல் வரலாறு எம்முன்னே மூன்று உதாரணங்களை விட்டு சென்றிருக்கின்றது. பூமி தட்டையானது என்றும், பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்றும் ஒரு காலத்தில் நம்பப்பட்டது.
இந்தப் பூமி மையக் கோட்பாட்டை கலிலியோ கலிலி நிராகரித்தார். பூமி உருண்டையானது என்றும் பூமியே சூரியனைச் சுற்றிவருகின்றது என்றும் அவர் ஆதாரபூர்வமாக நிரூபித்தபோது உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பாத அதிகார பீடம் அவரைச் சிறைப்பிடித்தது. மரண தண்டனையில் இருந்து தப்புவதற்காக, விசாரணையின் போது அவர் புவி மையக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டார். இருந்த போதும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
அவரிடம் அவரது நண்பர் ஒருவர் எந்தக் கருத்து உண்மையானது என்று கேட்டபோது, ”பூமி தட்டை என்று சொன்னதற்காக பூமி ஒருபோதும் தட்டையாகிவிடாது” என்றாராம். அறிவியலாளர்களில் இவர் ஒரு வகை.
அறிவியலில் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பியவர் சோக்கிரட்டீஸ். அதிகார வர்க்கத்தால் விசாரிக்கப்பட்ட போது தனது கருத்துக்களை மீளப்பெறும் பட்சத்தில் உயிர் தப்பும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால், தன்னை புதைத்து தனது கருத்தை வாழவிடும் முடிவையே அவர் எடுத்து மரணதண்டனைக்கு ஆளானார். அறிவியலாளர்களில் இவர் இரண்டாவது வகை.
மூன்றாவது வகையினரோ அதிகாரிகளும் அமைச்சர்களும் என்ன நினைக்கிறார்களோ அதற்கு அனுசரணையாகக் கருத்துக்களை கூறுபவர்கள். அதிகாரபீடம் வட்டத்தைக் கீறி சதுரம் என்றால் அதனைச் சதுரம் என்றும், சூரியனைப் பார்த்து சந்திரன் என்றால் அதனைச் சந்திரன் என்றும் வழிமொழிபவர்கள்.
வாழ்நாள் பூராகவும் பதவிகளில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நக்கிப் பிழைப்பவர்களாக இந்த மூன்றாவது தரப்பினர் உள்ளனர். இம் மூன்று பிரிவினர்களில் இரண்டாவது பிரிவினரைப் பின்பற்றி வாழவே விரும்புகின்றேன். என்னைப் புதைத்தாலும் என் கருத்துக்களை புதைப்பதற்கு நான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்.
2006ஆம் ஆண்டு ஏற்பட்ட கடற்கோள் எங்களுக்கு மிகப்பெரும் வலிகளைத் தந்ததோடு, பெரிய பாடம் ஒன்றையும் போதித்துச் சென்றிருக்கிறது. இலங்கைத் தீவில் மட்டும் அன்றைய நாளில் முப்பது நிமிடங்களில் இயற்கை முப்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பலி வாங்கியது.
கடற்கரையோரத்தில் கண்டற் தாவரங்களை அழித்தும், மணல் மேடுகளை அகழ்ந்தும் மனிதர்கள் இயற்கைச் சூழலைச் சூறையாடிய இடங்களிலேயே ஆழிப்பேரலை கரைகடந்து அத்தனை உயிர்களையும் காவுகொண்டது. “இயற்கையை நீ அழித்தால் நீ அழிவாய்” என்று இயற்கை எங்களுக்குப் போதித்த பின்பும் எங்களுடைய இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்குத் தொடர்ந்தும் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலை நீடித்தால் சூழலியல் அகதிகள் ஆகவும் நாங்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும். முள்ளிவாய்க்கால் துயரங்களைவிட இது பெரும் துயரமாக அமையும்.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஈழத்தமிழ் சமூகத்தை அரசியல் வெறுமை சூழ்ந்து கொண்டுள்ளது. ஈழத்தமிழர்களுக்கான சரியான அரசியல் தலைமைத்துவம் இன்னமும் பரிணாமம் பெறாத இந்த நிர்க்கதியான நிலையைப் பயன்படுத்தி, எமது வளங்கள் அழிக்கப்படுகின்றன.
சுண்ணாம்புக்கல் அகழ்வு பற்றியும் மணற் கொள்ளைபற்றியும் சூழலியலாளர்கள் எவ்வளவோ பேசியும் வளப்படுகொலைகள் தினமும் நிகழ்ந்தவாறு உள்ளன. அபிவிருத்தி என்ற அலங்கார முகமூடியோடு இவ நிகழ்வதால் இவற்றின் பின்னணி பற்றியும் பின்விளைவுகள் பற்றியும் ஒரு பொதுமகனால் அதிகம் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வை ஊட்ட வேண்டியவர்கள் புவியியல் அறிவு நிரம்பப் பெற்ற எமது கல்வியாளர்களே. ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக, பயத்தினாலோ அல்லது பதவி சுகத்தினாலோ எமது அபிவிருத்திப் புவியியலாளர்கள் பலரும் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள். வாழ் நாள் பூராகவும் பதவிகளை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக சோரம் போகும் இழிநிலையை இனிமேலாது கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர்கள் சுரேஷ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட்ட பெருமளவானோர் பங்குகொண்டு சிறப்பித்தனர்.



0 Responses to திடமான அரசியல் தலைமையற்ற நிர்க்கதியான நிலையைப் பயன்படுத்தி ஈழத்தமிழர்களது வளங்கள் அழிக்கப்படுகின்றன: பொ.ஐங்கரநேசன்