Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வது சாத்தியமற்ற விடயமாகும். முப்படை தளபதி என்ற வகையில் தீர்ப்பில் கையொப்பம் இட்டுள்ள ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரும் நடைமுறையை பின்பற்றுவதே ஒரே வழியாகும் என்று ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் சுமார் 5000 க்கும் அதிகமான இராணுவ வீரர்களை இராணுவ நீதிமன்றம் அமைத்து தண்டனை வழங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளார். மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள எதிர்க்கட்சிகள் சரத் பொன்சேகா விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றன என்றும் ஆளும் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர்களே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அமைச்சர் டிலான் பெரேரா கருத்து வெளியிடுகையில் :

இராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையை அரசியல் பழிவாங்கல் என்று கூறுகின்றனர். சரத் பொன்சேகாவை அரசியல் பழிவாங்குவதன் மூலம் அரசாங்கத்துக்கு என்ன இலாபம் இருக்கின்றது? ஒன்றுமில்லை.

நாட்டின் சட்டக்கட்டமைப்பு மிகவும் முக்கியமானது. அதனை மீறி யாராலும் செயற்பட முடியாது. இராணுவ நீதிமன்ற தண்டனை பெறும் ஒருவர் அரசியலுக்கு வருகின்றார் என்பதற்காக அவரை விடுதலை செய்ய முடியுமா?

சிவில் நீதிமன்றத்தில் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டால் அவர் மேன்முறையீடு செய்யலாம். அதிலும் தண்டனை உறுதிபடுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரல் எனும் ஒரு தெரிவே இருக்கின்றது.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் சரத் பொன்சேகா விவகாரத்தை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றன.

இராணுவ சட்டம் என்பது இராணுவத்தின் ஒழுக்கத்துடன் தொடர்புபட்ட விடயமாகும். அந்த சட்டத்தின் முன் தளபதிகள் வீரர்கள் என்று வித்தியாசமில்லை. யாரும் சட்டத்தை மீற முடியாது
அதிகாரிகள் மற்றும் சாதாரணமானவர்களுக்கு என்று வேறான சட்டங்கள் இல்லை.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் இலங்கை விடயம் தொடர்பில் தான் ஆலோசனை பெற நிபுணர் குழு ஒன்றை அமைத்திருந்தார். அதற்கான தகவல்களை வழங்கியது யார் என்று எங்களுக்கு தெரியும். சரத் பொன்சேகா தெரிவித்த சில கருத்துக்களும் இதற்கான அடிப்படை காரணங்களாக அமைந்தன என்றார்.

அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தற்போது சரத் பொன்சேகா விடயத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றார். காரணம் மனிதாபிமான நடவடிக்கை இடம்பெற்ற காலத்தில் அவர்கள் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையிலேயே இவ்வாறு செய்கின்றனர்.

சரத் பொன்சேகா விடயத்தில் இன்னும் வழக்குகள் உள்ளன. வெள்ளைக் கொடி விவகாரம் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது. எனவே போராட்டம் நடத்துவதாக கூறுபவர்கள் சற்று சிந்திக்கவேண்டும். போராட்டங்களை நடத்துவதன் மூலம் எதனை சாதிக்க முயற்சிக்கின்றனர்? என்றார்.

அமைச்சர் டலஸ் அழகப்பெரும

இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் ஊடாக சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ஜனநாயகத்துக்கு விழுந்த அடியென்று தவறான அர்த்தப்படுத்தலை வெளியிட முயற்சிக்கின்றனர்.

அனோமா பொன்சேகா கூறும் விடயங்கள் குறித்து நான் கருத்து வெளியிட விரும்பவில்லை. அவர் பொன்சேகாவின் பாரியார். எனவே அவருக்கு கவலை இருக்கும். அதே போன்று இதற்கு முன்னர் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உள்ளாகிய இராணுவ அதிகாரிகளின் பாரியார்களும் இவ்வாறு கவலையடைந்திருக்கலாம்.

சிறந்த ஒழுக்கடைய இராணுவம் என்பதாலேயே பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடிந்தது. அன்று 1983 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருநெல்வேலியில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும் அங்கு கிராமங்களில் இராணுவ வீரர்கள் புகுந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் தெற்கின் மனநிலை புலிகளுக்கு கடுமையான எதிர்ப்பானதாக இருந்தது. எனினும் அக்காலத்தில்கூட இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டு சம்பவத்தில் தொடர்புபட்ட 69 அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அதே சட்டம்தான் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா தனது தளபதி பதவிக்காலத்தில் 156 இராணுவ அதிகாரிகளையும் 5088 இராணுவ வீரர்களையும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்களின் ஊடாக வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ஜனாதிபதி முப்படை தளபதி என்ற வகையில் கையெழுத்திட்டார்.

இந்த இராணுவ நீதிமன்ற தீர்ப்பானது அரசினதோ அமைச்சரவையினதோ அழுத்தங்களால் அளிக்கப்பட்டதல்ல. மாறாக சட்டத்துக்கு அமைவாக வழங்கப்பட்டது.

சட்டத்தை ஏளனம் செய்ய முடியாது இந்த தீர்ப்பின் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளதாக கூறுவது அர்த்தமில்லாத விடயமாகும். அது முறையல்ல. அவ்வாறான கூற்றுக்களை நிராகரிக்கின்றோம். மத போதகரோ அரசியல்வாதியோ யாராக இருந்தாலும் சட்டத்தை ஏளனம் செய்ய முடியாது.

எனவே இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் தவறான அர்த்தப்படுத்தல்களை முன்வைக்கவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கின்றோம். அதனை அகௌரவப்படுத்தவேண்டாம். இவ்வாறு தவறாக அர்த்தப்படுத்தப்பட்டால் எமது இராணுவம் தொடர்பில் சர்வதேச ரீதியில் பாதிப்புக்கள் ஏற்படலாம்.

இந்நிலையில் சரத் பொன்சேகா நடைமுறையை பின்பற்றி ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரலாம். மேன் முறையீடு செய்வதற்கு ஜனாதிபதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியல்ல.

சரத் பொன்சேகாவைவிட தரத்தில் குறைந்த அதிகாரிகளே இராணுவ நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவரைவிட உயர்ந்த தரத்தில் அதிகாரிகள் இல்லை என்பதற்காக இராணுவ நீதிமன்றத்தை அமைக்காமல் இருக்க முடியுமா?

பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டபோது அவரைவிட கனிஷ்ட தரத்தில் இருந்தோர்களே நீதிபதிகளாக சரத் பொன்சேகாவினால் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சரத் பொன்சேகா விடயத்தில் முப்படை தளபதி என்ற வகையில் ஜனாதிபதி அனைவரையும் நியமித்தார் என்றார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோருவதே ஒரே வழி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com