Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் போரில் ஈடுபட்ட தரப்புகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கோரும் அனைததுலக மன்னிப்புச் சபையின் மனுக்களில் 52,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மனுக்களை அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகளும், 2006ஆம் திருகோணமலையில் சிறீலங்கா படைகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் ஒருவரின் தந்தையுமான மருத்துவர் கைலாசபிள்ளை மனோகரனும் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கடந்த 22ஆம் நாள் நேரில் கையளித்திருக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 16வது கூட்டத்தொடர் எதிர்வரும் 28ஆம் நாள்முதல் மார்ச் மாதம் 25ஆம் நாள்வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த மனுக்கள் கையளிக்கப்பட்டிருக்கின்றன.

அனைத்துலக மன்னிப்புச் சபையின் அமெரிக்க இயக்குனர் ஜிம் மக்டொனால்ட், இலங்கை பற்றிய ஆய்வாளர் ஜொலெர்டா போஸ்ரர், மருத்துவர் கைலாசபிள்ளை மனோகரன் ஆகியோர் இந்த மனுக்களை நேரடியாக் கையளித்தனர்.

தமது மனு தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது தொடர்பான அழுத்தங்களை தாம் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொடுப்போம் என அனைத்துலக மன்னிப்புச் சபையின் அமெரிக்க இயக்குனர் ஜிம் மக்டொனால்ட் கூறியதாக இந்த அமைப்பின் இணையத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் சுயாதீன விசாரணைக்கு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அனைவரும் அமெரிக்க அரசாங்கத்திற்கு மனுக்களை எழுதி கோரிக்கை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மனோகரன் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும் எனவும் மக்டொனால்ட் வலியுறுத்தினார்.

கடந்த ஒரு வருடத்தில் அமெரிக்க கொங்கிரஸ் சபையின் 60 அங்கத்தவர்களும், செனட் சபை அங்கத்தவர்கள் 20 பேரும் இலங்கையில் இடம்பெற்ற போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பன்னாட்டு சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

கடந்த வாரம் பிரித்தானியாவின் மூன்று பிரதான கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற அங்கத்தவர்கள் 41 பேர் பன்னாட்டு சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதமர் டேவிட் கமறூனிற்கு மனு கையளித்திருந்தனர்.

இதேவேளை, ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சிறீலங்கா அரசைப் பாதுகாக்கும் வகையில், முன்னாள் மனித உரிமைகள் அமைச்சரும், தற்போதைய பெருந்தோட்டத்துறை அமைச்சருமான மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

1 Response to ஐ.நா சபைக்கு 52,000 கையெழுத்து முறைப்பாடுகள் - மன்னிப்புச்சபை கையளிப்பு

  1. அட்டூழிய அராஜக கொலைவெறி சிஙகள காவாலி அரசை நீதியின் முன் கொணர அனைதது வழிகளிலும் அழுத்தங்கள் கொடுக்கப்ட வேண்டும். இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய இனவழிப்பை செய்து விட்டு கொக்கரித்துத் திரியும் கொலைவெறியருக்கு தண்டனை பெற்றுத தரும் வரை அனைத்து வழிகளிலும் ஓயாமல செயல்பட வேண்டும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com