கோட்டைக்குப் போனது ஏன்..? கண்ணகி சிலையை தூக்கி எறிந்தது ஏன்..? சுவைக்காத சோனியாவின் தேநீர்..
தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா செய்யும் சில செயல்கள் எதிரணியினருக்கு மிகச்சிறந்த பிரச்சார வாய்ப்பாக அமைவதுண்டு. அவர் செய்யும் சரியான செயல்கள் தவறாக சமுதாயத்தால் அடையாளம் காணப்படுவதும், தப்பான செயல்கள் சரியாக அடையாளம் காணப்படுவதும் கடந்த 25 ஆண்டு கால நிகழ்வுகளின் பிரதி பிம்பமாகும். இனி அவற்றை ஒவ்வொன்றாகப் பார்த்தால் ஜெயலலிதா பற்றிய புரிதலுக்கு உதவியாக இருக்கும்.
கேள்வி: தமிழக மக்களின் வரிப்பணம் 1000 கோடியை கொட்டி செலவழித்த புதிய சட்டசபைக்கு போகாமல் பழைய சென்.ஜார்ஜ் கோட்டைக்கே ஜெயலலிதா சட்டசபையை மாற்றியது தவறு என்று வை.கோபாலசாமி, கி.வீரமணி உட்பட பலர் குறை கூறியுள்ளனர். ஜெயலலிதா செய்தது சரியா..?
பதில்: இந்தக் கேள்வியும் குற்றச்சாட்டும் வெளிப்பார்வைக்கு நியாயமானவைதான். குற்றம் சுமத்திய இருவரையும் சமுதாய அக்கறை உள்ளவர்களாகக் காட்ட உதவும் கேள்விதான். இப்போது அதை பரீசீலிக்கப் போவதாக ஜெயலலிதா சொல்லியுள்ளார். ஆனால் இதற்குள் ஒரு கதை இருக்கிறது.
சிவாஜி கணேசன் நடித்த மன்னவந்தானடி படத்தில் ஒரு பாடல் வரும். நான் நாட்டை திருத்தப்போறேன் அந்த கோட்டையை பிடிக்கப் போறேன்.. என்ற பாடலே அது. அதன் மூலம் கோட்டையை பிடிக்கப்போவதாக சிவாஜி பாடினார். தமிழக அரசியல்வாதிகளிடையேயும் நடிகரிடையேயும் கோட்டையை பிடிப்பது ஒரு சாதனை. எம்.ஜி.ஆரான எம்.ஜி.ஆரே இரண்டு தடவைகளுக்கு மேல் கோட்டையை பிடிக்க முடியாமல் இறந்துவிட்டார். ஆனால் ஜெயலிதா மூன்றாவது முறையும் கோட்டையை பிடித்தார் என்ற சரித்திரத்தை எழுத வேண்டும். எனவே ஒரு சில மாதங்களாவது அவர் கோட்டையில் இருப்பார். மு.கருணாநிதி பல தடவைகள் கோட்டையை பிடித்துள்ளார். இருந்தாலும் மு.கருணாநிதி கட்டிய கோட்டையான புதிய சட்டசபையை பிடிக்க போராடினாள் என்று நாளை வரலாறு எழுதிவிடக் கூடாது என்பதற்காகவே அவர் இதை செய்துள்ளார். இப்படியொரு கோணத்தில் எண்ணினால் சென்.ஜார்ஜ் கோட்டை போன அடிப்படை நோக்கம் சரியானதே என்பதை விளங்கலாம்.
கேள்வி: ஜெயலலிதா ஒரு புதிய சட்டசபையை கட்டியிருந்தால் கலைஞர் போயிருப்பார்தானே..?
பதில்: தமிழகத்தின் சட்டசபையில் ஜெயலலிதா முதல்வராக இருந்தால் மு.கருணாநிதி வருவதில்லை. சட்டசபை வந்து கையெழுத்து போட்டுவிட்டு போய்விடுவார். சென்ற தடவை கலைஞர் முதல்வராக வந்தபோது ஜெயலலிதா சட்டசபை வந்தார். இதை முற்றிலும் எதிர்பாராத கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர் தனது முகத்தைப் பார்க்கக் கூடாது என்பதற்காக, இருக்கைகளை எல்லாம் புதிதாக மாற்றி அமைத்தார். அப்போதும் மக்கள் பணம் நாசமாகியது, கி.வீரமணி அமைதியாகவே இருந்தார். இப்படி தனது முகத்தை பார்க்க விரும்பாத ஒருவர் உருவாக்கிய சட்டசபைக்கு போய் தனது முதலாவது பணியை ஆரம்பிக்கக் கூடாது என்று நினைத்திருப்பார் ஜெயலலிதா.
கேள்வி: எல்லாம் செய்த ஜெயலலிதா ( சில காலத்திற்கு முன் ) எதற்காக கண்ணகி சிலையை சென்னையில் இருந்து அகற்றி குப்பையில் எறிந்தார். அப்படியொரு சிலை இருப்பது சாஸ்திரத்திற்குக் கூடாது என்று கூறினார்கள். பாராம்பரிய கலைவடிவங்களை இப்படி அவமதிப்பு செய்வது சரியா.. ?
பதில்: இதற்கும் ஒரு கதை இருக்கிறது. கலைஞர் எழுதிய பூம்புகார் படத்தில் கண்ணகியாக நடித்தவர் நடிகை விஜயகுமாரி;. சில மாதங்களுக்கு முன் வந்த காபி வித் அனு நிகழ்ச்சியில் அவர் சொன்னார். சென்னையில் இருக்கும் கண்ணகி சிலையை செய்த சிற்பிகள் தனது உருவத்தைப் பார்த்தே அந்தச் சிலையை வடிவமைத்தாக. தன்னை சிலை வடிவமாக்கி கண்ணகியாக நிற்க வைத்த கலைஞர் பெருமையை பாராட்டியிருந்தார். கண்ணகியாக நடித்த பின்னர் விஜயகுமாரியும், அவர் கணவர் எஸ்.எஸ்.ஆரும் பிரிந்த கதை தனிக்கதை. இருப்பினும் விஜயகுமாரி கண்ணகி என்றால் அந்தச் சிலையை தூக்கி எறிய வேண்டும் என்பது ஜெயலலிதாவின் சரியான கணிப்பே. விஜயகுமாரியைப் போலவே நடிகையாக இருந்த ஜெயலலிதாவுக்கு கோடம்பாக்கம் நடிகர்களின் சீத்துவக்கேடு தெரியும், நடிகைகளையும் தெரியும். மேலே சொன்ன காரணங்களை முன்னிலைப்படுத்தி பேசினால் அவருடைய செயலில் நியாயம் இருப்பதை உணரலாம்.
கேள்வி: அப்படியானால் ஜெயலலிதாவின் செயல்களில் தவறுகளே இல்லையா..?
பதில்: இருக்கிறது, சசிகலாவுடன் இணைந்து நடாத்திய தினகரன் திருமணம், பின்னர் சசிகலாவுக்கு மாலை மாற்றியது போன்ற செயல்கள் அவருடைய சாத்திர சம்பிரதாயங்களின் அடையாளமாக உள்ளன. இவைகள் தொடர்ந்தால் அவருக்கு மேலும் பின்னடைவுகளை கொடுக்கும். ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்துள்ள ஜெயலலிதா சிறிது மாறுபட்டவராகவும், முன்னைய காலத்தைவிடவும் புத்திசாதுர்யமானவராகவும் இருக்கிறார். கடந்தகால பாடங்கள் அவருக்கு பல புதிய சிந்தனைகளை தந்திருக்கலாம். கலைஞரைப் போல நடைமுறை உலகத்தை புரியாத ஒருவராக அவர் இல்லை. தன்னைத் திருத்திக் கொள்கிறார். ஆகவே பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கேள்வி: ஈழத் தமிழர் விவகாரத்தில் அவர் மறுபடியும் பல்டி அடித்து காங்கிரசுடன் சேர்வாரா..?
பதில்: புலிகள் போராட்டக்களத்தில் இருக்கும்போது பயங்கரவாத பட்டத்தை தலையில் சுமந்திருந்தார்கள். அவர்களை ஆதரிக்கும் நிலையில் இருந்து பல்டி அடிப்பது இந்திய அரசியலில் இலாபகரமாகதாக இருந்தது. அதன் உச்சகட்டம் 2ஜி. ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி பணம். மு.கருணாநிதி புலிகளை ஆதரித்துக் கொண்டு அந்தப் பணத்தை சுழற்றி விளையாடியிருக்க முடியாது. ஆனால் இப்போது புலிகள் போராடவில்லை. தற்போது அவர்கள் போராட்டக்களத்திலும் இல்லை. ஐ.நாவின் அறிக்கை சிறீலங்காவை போர்க் குற்றவாளி நாடாக அடையாளம் காட்டிவிட்டது. இன்றய சூழல் ஈழத் தமிழருக்காக கதைத்தால் வெற்றிபெறும் காலமாகும். ஈழப் பிரச்சனை ஒரு கீறீஸ்கம்பம் போன்றது. ஏறியவர்கள் எல்லாம் உடலில் கிறீஸ் பூசியதுதான் மிச்சம். இப்போது யாராவது கிறீஸ் பூசாதவர் கம்பத்தில் தொங்கும் பரிசை பிடுங்கும் காலம். அதைப் பிடுங்கினால் ஜெயலலிதாவை மேலும் இரண்டு தடவைகள் ஆட்சியில் இருந்து இறக்கவே முடியாது. கருணாநிதி கிறீசைப்பூசிக்கொண்டு இறங்கிவிட்டார், இனி ஜெயலலிதா சவர்க்கார பரிசை பிடுங்கிக் கொள்ள வாய்ப்பிருப்பதால் அவர் பல்டியடிக்க வாய்ப்பில்லை. சோனியாவின் தேநீரை அவர் குடித்தாலும், சவர்க்காரத்தைக் கோட்டைவிட மாட்டார். காரணம் ஈழத் தமிழரைவிட இதில் ஜெயலலிதாவுக்கே ஆதாயம் அதிகம். மேலும் நான் இனி கோட்டை விடமாட்டேன் என்பதை விளங்கப்படுத்தத்தான் அவர் கோட்டையில் முதல்வராகியிருக்கிறார். சோனியாவின் 2 ஜி மார்க் தேநீரை கனிமொழியும், கலைஞரும் குடித்துப் படும்பாடு ஜெயலலிதாவுக்கு தெரியும். அதில் ஒரு மிடறு நாக்கை நீட்டி நக்கிப்பார்த்த ராஜபக்ஷவும், கோத்தபாயவும் வயிற்றைப் புரட்டி படும்பாடும் தெரிந்ததே.
அலைகள்



0 Responses to ஜெயலலிதா புதிர்களும் புரிதலும் - சுவைக்காத சோனியாவின் தேநீர்