இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை சரத் பொன்சேகா மீது சாட்டிவிட்டுத் தப்பித்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கடுமையான போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச சமூகத்தினரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அப்படியே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தலையில் சாட்டிவிட்டுத் தப்பித்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென ஜனாதிபதி தனக்குக் கீழ் விசேட குழுவொன்றை நியமனம் செய்துள்ளார்.
போர்க்குற்றங்களை சரத் பொன்சேகாவின் மீது சாட்டக்கூடிய வகையில் அவர் பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக்களை தொகுத்து முன்வைக்க ஜனாதிபதியின் ஆலோசகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கேதுவாக சரத் பொன்சேகா இராணுவ சேவையில் இருந்தபோதும் அதன் பின்பும் பகிரங்கமாக வெளியிட்டுள்ள கருத்துக்களை தொகுத்து ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்புமாறு ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சுக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுடான போரில் ஜனாதிபதி எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்றும், அனைத்து ஆயுத தளவாடங்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டவை என்பதுடன், அவற்றுக்கான தோட்டாக்களை வழங்கியது மாத்திரமே ஜனாதிபதி மஹிந்தரின் பங்களிப்பு என்பதாக முன்னர் ஒரு தடவை சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டிருந்தார்.
அதனையே தற்போது அவருக்கு எதிரான முதல் ஆதாரமாக ஜனாதிபதி தரப்பிலிருந்து முன் வைக்கப்படவுள்ளது. ஆயினும் போரின் வெற்றி குறித்து சரத் பொன்சேகாவுக்குச் சாதகமான கருத்துக்கள் மேலோங்கி விடாதவாறு ஜனாதிபதி தரப்பினரின் நடவடிக்கைகள் அமையவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.



0 Responses to பொன்சேகா மீது போர்க்குற்றங்களை சாட்டிவிட்டு தப்பித்துக் கொள்ள அரசாங்கம் முயற்சி?