சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்சிந்தை கலங்காதிருப்பது நன்றோ தமிழா என் அன்பான உலகத்தமிழ் உறவுகளே! இன்று நாம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வாக்குப் போட்டோம் இவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள். தூங்கிக்கொண்டு இருக்கிறார்களா? உலகத்தமிழர் பேரவை என்ன செய்துகொண்டிருக்கிறது, வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு வாக்குப் போட்டோம் அவர்கள் எங்குபோய் ஒழிந்துகொண்டார்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோமே தவிர நாம் உருப்படியாக என்ன செய்தோம் என்று சற்று சிந்தித்துப்பார்ப்பதில்லை.
நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்பதை விடுத்து நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று ஒவ்வொருவரும் நெஞ்சைத்தொட்டுக் கேட்டுப்பார்க்க வேண்டும்.
தொலைக்காட்சியிலும் வானொலிகளிலும் வந்து சொந்தப் பெயரைச் சொல்லக்கூட துணிவில்லாமல் புனைபெயரில் வீரவசனம் பேசி இயன்றதைச் செய்து கொண்டிருப்பவர்களையும், அமைப்புகளையும் வசைபாடி அவர்களையும் சோர்வடையச் செய்வதை விடுத்து, உங்களுடைய தொடர்பு இலக்கத்தை அந்த ஊடகத்தில் வெளியிட்டாலே இப்போது ஒரு பெரும்படையே உருவாகி இருக்கும்.
அழிந்துகொண்டிருக்கும் எம் இனத்தைக் காப்பாற்றவேண்டிய வரலாற்றுப் பொறுப்பும் கடமையும், உரிமையும், ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. ஒரு தலைவனால் ஒரு பெரும் படையையே உருவாக்க முடியுமானால் ஏன் உன்னால் முடியாது?
நாடுகடந்த அரசும், உலகத் தமிழர் பேரவையும், மற்றய அமைப்புகளும் தம்மால் ஆனதைச் செய்யட்டும், அது சரி என்று உனக்குப்பட்டால் ஒத்துழைப்புக் கொடு. ஒரு வேளை உன்னிடம் அதனைவிடப் பன்மடங்கு திறமை இருக்கலாம். எவன் ஒருவன் மக்கள் அதிகமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய திறமையையும் கொள்கையையும் கொண்டிருக்கிறானோ அவன்தான் தலைவன். ஆகவே நீயும் தலைவனாகலாம். உன்னுடைய திறமையை வெளியில் கொண்டுவா, உன் துணிச்சலை வெளியில் கொண்டுவா, உன்னுடைய அர்ப்பணிப்பை வெளியில் கொண்டுவா.
மகாத்மா காந்தி அகிம்சைவழியில் போராடிக்கொண்டு இருந்தபோது சுபாஸ் சந்திரபோஸ் வேறு வழியில் போராடிக்கொண்டிருந்தபடியால்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. போராட்டங்கள் வேறுபடலாம் போய்ச் சேரவேண்டிய இடம் ஒன்றாக இருக்கவேண்டும்.
நாம் ஆயுதம் ஏந்தத்தேவையில்லை. சர்வதேச நீதிநெறிகளை மீறத்தேவையில்லை, அறவழிப்பாதையிலே இராஜதந்திரத்தைக் கையில் எடுத்து கத்தியின்றி இரத்தம் இன்றி வரும் யுத்தத்தை எதிர்கொள்வோம்.
துரோணாச்சாரியாரின் கட்டளைப்படி இலக்கணைத்த அர்ச்சுனனுக்கு வானம் தெரியவில்லை, மரம் தெரியவில்லை, கிளை தெரியவில்லை, இலை தெரியவில்லை, ஏன் கிளிகூட தெரியவில்லை அதன் கழுத்து மட்டும்தான் தெரிந்தது. அதேபோல் எம்மினத்தை அழித்தவர்களை, எம்மண்ணை அபகரித்தவர்களை, எம்சகோதரிகளை நிர்வாணமாக்கி அழகுபார்த்தவர்களின் கழுத்துமட்டும்தான் எமக்குத் தெரியவேண்டும். அந்த இலக்கை அடையும் வரை தூங்குவதோ தமிழா.
நீ நினைத்தால் 2014ம் ஆண்டு தைப்பொங்கல் தமிழீழத்தில் பொங்குவாய். உன்னால் முடியும். வாய்ப்பேச்சில் காலத்தை கழிக்காதே செயலில் இறங்கு.
சர்வதேச காலநிலை எமக்குச் சாதகமாக இருக்கிறது. அந்தமுகில் எப்போதும் கலையலாம், அல்லது பாதகமான திசைக்குத் திரும்பலாம் ஆகவே இப்போதே செயல்படு.
முப்பத்திமூன்று நாடுகள் எமக்கெதிராக எமது எதிரிக்கு ஆயுதம் கொடுத்ததாக அறிகிறோம். குறைந்தது மூன்று நாடுகள் எமக்கு ஐ.நா வில் நீதிகிடைக்க விடமாட்டார்கள் என்கிற செய்தியும் வருகிறது. இவர்களை எவ்வாறு எமக்கு ஆதரவாக மாற்றலாம், அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? இவர்கள் வழிக்கு வராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? எல்லாவற்றிற்கும் மருந்திருக்கிறது.
அன்று அண்ணா சொன்னார் ”நாங்கள் நான்கு கோடி தமிழர்கள் இருக்கிறோம், ஈழத்தமிழனுக்கு ஒரு துன்பமென்றால் இரண்டு கோடி தமிழர்கள் பாக்கு நீரிணைக்குப் பாலமாவார்கள், மற்ற இரண்டுகோடி தமிழர்களும் தமிழீழத்தில் இருப்பார்கள் என்று” இன்று அண்ணாவும் இல்லை, அண்ணாவின் பாசறையில் வாழ்ந்த தம்பிகளும் எம்மோடில்லை.
ஆனால் அந்த தம்பிகளை எம்மால் உருவாக்க முடியும் என்பதை முத்துக்குமாரன் தொடங்கி கிருஷ்ணமூர்த்தி வரை உயிரைக்கூடக் கொடுக்கக்கூடிய பல தம்பிகள் எமக்கு நினைவூட்டியிருக்கிறார்கள்.
ஆனால் நீதான் சோர்வாய் இருக்கிறாய். பொறுத்தது்போதும் பொங்கி எழு தமிழா. எதிரியைக் கண்டு அச்சம் கொள்ளும் கோளைகள் எமக்குத் தேவையில்லை. வாழ்வா சாவா பார்த்துவிடுவோம் ஒருகை என்று வெஞ்சினம் கூறும் வீரர்களே பொங்கி எழுங்கள்.
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை, இருப்பது ஓர் உயிர் , அது போவதும் ஒருமுறைதான். அது எம்மக்களுக்காக, மண்ணுக்காக போகுமானால் அதை விடபெரும்பாக்கியம் வேறொன்றும் இல்லை. இன்று நீ தூங்கிவிட்டால் இனி என்றும் உன்னால் எழுந்திருக்கவே முடியாது.
எம்முன்னால் பெருமளவு வேலை இருக்கிறது. சில அமைப்புகள் நிறையவே செய்கின்றன. இருந்தாலும் அதன் வேகத்தை இன்னும் அதிகரிக்கவேண்டிய கட்டாயம் எமக்கிருக்கிறது. அவர்செய்வார் இவர் செய்வார் என்று சும்மா இருக்காமல் எம்மால் ஆனதைச் செய்யவேண்டிய காலம் இது. இது எமக்குக் கிடைத்திருக்கின்ற மிகமுக்கியமான கடைசிச் சந்தர்ப்பம். எல்லோரோடும் புரிந்துணர்வை வளர்த்துக்கொண்டு மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் எமது அறவழிப்போராட்டத்தை முன்நகர்த்துவோம்.
புத்தன் வந்த திசையிலே போர், புனித ஈழமண்ணிலே போர், சத்தியத்தின் நிழலிலே போர், தர்மத்தின் மடியிலே போர்- போர் மறுபடியும் வீழ்வதில்லை வா - மரணமேனும் பெறுவதென்று வா, கொடியவர்கள் கொட்டமடக்க வா - பொன்னழந்த மண் அழக்கவா - வா - வா
இலங்கையில் நடந்தது இன ஒழிப்புத்தான் என்று கருதுபவர்கள் மட்டும் தொடர்புகொள்ளவும்.
உலகத்தமிழர் சமாதானப் பேரவை.



0 Responses to பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா!: உலகத் தமிழர் சமாதான பேரவை