Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்பார்த்த அறிக்கை கடந்த மாதம் 26ம் திகதி வெளிவந்துவிட்டது. வழமைபோல் உலகின் வல்லரசுகளில் ஒன்றாக தன்னை எண்ணும் சிறீலங்கா, யாரையும் மதியாது . நா. அறிக்கையை எதிர்த்து தரக் கூறைவாக அறிக்கைகளை வெளியிட்டுவிட்டதுடன், மகிந்தவின் இனவாத பிரச்சார நிபுணர்கள் உலக வலம் வர ஆரம்பித்துவிட்டனர்.

அவசரகாரனுக்கு புத்தி மத்திமம்என்பார்கள். சிறீலங்கா தனது புத்தியின் மத்திமத்தை உள்நாட்டுப் பத்திரிகைகளுக்கு அறிக்கையை கசிய விட்டதன் மூலம் நிரூபித்துள்ளார்கள். அறிக்கையை வெளியிடுவதா, இல்லையா என . நா. ஆழ்ந்து யோசித்துக் கெண்டிருந்த வேளையில், சிறீலங்கா அறிக்கையை தனது இனவாத பத்திரிகைக்கு சில விடயங்களை மட்டும் கசிய விட்டதினால் . நா செயலாளரின் வேலை மிகவும் சுலபமாக்கப்பட்டுவிட்டது.

சிறீலங்கா சில பக்கங்களை மட்டும் உள்நாட்டு மக்களின், விசேடமாக தெற்கு மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக பத்திரிகைக்கு கசியவிட்டார்கள். உண்மையில் சிறீலங்கா இப்படியாக அறிக்கையை கசியவிடாதுவிட்டால் இன்றும் அறிக்கை வெளியாகி இருக்குமோ என்பது கேள்விக்குறியாகவே இருந்திருக்கும்.

நல்லது நாம் தொடர்ந்தும் அறிக்கையைப் பற்றி அலசாது இவ் அறிக்கையை நாம் எப்படியாக பயன்படுத்த முடியும் என்பதை இங்கு கவனிப்போம்.

சிறீலங்காவைப் பொறுத்தவரையில் இவ் அறிக்கை உண்மைகள் அற்றதும் பக்க சார்பானதும். இப்படியாக கூறிய சிறீலங்கா அரசு, ஜனாதிபதி தலைமையில் மூன்று குழுக்களை அமைத்து, அக் குழுக்களுக்கு சில அமைச்சர்களையும் பொறுப்பாக நியமித்துள்ளது. இக் குழுக்கள் அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களை, குற்றச் சாட்டுக்களை பொய்யானது பெறுமதியற்றது என நிரூபிப்தற்காக சர்வதேச பரப்புரைகளை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர்.

உலகின் முக்கிய நகரங்களில், விசேடமாக நியுயோர்க், ஜெனிவாவில் சிறிலங்க அரசு சார்பில் பொய்யுரைக்கும் வல்லுனர்கள் பழையவர், புதியவர்கள் யாவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒன்று கூடி சர்வதேச சந்திப்புக்கள் ஆரம்பித்துவிட்டனர்.

இந்த அடிப்படையில் எமது உடன்பிறப்புக்கள், உடன்பிறவா சகோதரர்களின் படுகொலைகள், பட்டினிச் சாவுகள், பாலியல் வன்முறைகள், சித்திரவதை போன்ற விடயங்களை உள்ளடக்கிய அறிக்கையில் கூறிய உண்மை விடயங்களுக்கு நீதி நியாயம் கேட்க, புலம் பெயர் வாழ் தமிழ் மக்களும் உடன் வேலைத் திட்டங்களில் இறங்க வேண்டும்.

எப்படி, எங்கு, யாருடன்?

இம்மாதம் மே 30ம் திகதி தொடக்கம் யூன் 17ம் திகதி வரை . நா. மனித உரிமைச் சபையின் 17வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. அப்படியானால் மே 29ம் திகதி சிலர் ஜெனீவா சென்று சந்திப்புக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று இங்கு நான் கூற முற்படவில்லை. அங்கு கூட்டத் தொடருக்கு விரும்பியவர்கள் செல்லலாம் அது வேறு விடயம்.

இவ் 17வது கூட்டத்த தொடர்பற்றிய விடயத்தில் ஓர் குழுவோ பல குழுவோ, ஓர் அமைப்போ பல அமைப்போ, ஏற்கனவே வேலையை ஆரம்பித்திருக்க வேண்டும். இல்லையேல் இந்த நிமிடமே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

முதலாவது: நாம் வாழும் நாடுகள் பெரும்பாலும் மேற்கு நாடுகள் ஜனநாயாக நாடுகள். ஆகையால், உடன் அந்த அந்த நாடுகளில் உள்ள வெளிநாட்டு அமைச்சுடன் தொடர்பு கொள்ள வேண்டும். முடியுமானால் அமைச்சரையோ அல்லது அங்குள்ள முக்கிய அதிகாரிகளையோ சந்தித்து அறிக்கை பற்றிய விளங்கங்களை கூறி, அவர்களை இதை ஆதரிக்குமாறு வேண்டுதல் விட வேண்டும்.

இரண்டாவது: நாம் வாழும் ஒவ்வொரு நாடுகளில் உள்ள முக்கிய வெளிநாட்டு தூதுவராலங்களுடன் தொடர்பு கொண்டு (உதாரணமாக சீனா, ரஷ்யா, இந்தியா, கியூபா, வெனிசுலா, தென் ஆபிரிக்கா, பிறேசில், பாலஸ்தினம் போன்றவற்றுடன்) இவ் அறிக்கைக்கு நாம் ஆதரவு தேடவேண்டும்.

மூன்றாவது: நாம் வாழும் நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் (சகல அரசியல் கட்சியையும்) நகரபிதாக்கள், முக்கிய அரசியல் பிரமுககர்களை சந்தித்து அறிக்கை பற்றி விளக்குவதுடன் இதை சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்க உடன் உதவுமாறு கேட்கும் அதேவேளை, அவ் நாட்டு அரசாங்கம் இவ் அறிக்கையில் அக்கறை கொள்ள உதவுமாறு வேண்டுதல் விட வேண்டும்.

நான்காவது: நாடுகளிற்கு இடையிலான நிறுவனங்களான ஐரோப்பியா நாடாளுமன்றம், ஐரோப்பிய ஆணைக்குழு, அணிசேரா நாடுகளின் அமைப்பு, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து அறிக்கைக்கு நாம் ஆதரவு தேடவேண்டும்.

ஐந்தாவது: நாம் வாழும் நாட்டுப் பத்திரிகையாளர், தொலைகாட்சிகள், வானொலிகள் போன்ற ஊடகங்களின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு வேண்டுதல் விட வேண்டும்.

இதேவேளை நாம் வாழும் நாட்டில் உள்ள முக்கிய அரசசார்பற்ற நிறுவனங்களை அணுகி, இது பற்றிய விளக்கங்களை கொடுத்து அவர்களின் ஆதரவைப் பெறுவதுடன், அவ் அமைப்பு . நா. அங்கீகாரம் பெற்றிருந்தால், அவ்வமைப்பினால் . நா. மனித உரிமைச் சபையின் 17வது கூட்டத் தொடரிலும் மற்றைய கூட்டத் தொடர்களிலும் அவர்களது ஊரையில் இவ் அறிக்கை பற்றி சேர்ந்து கொள்ளுமாறு வேண்டுதல் விடவேண்டும்.

ஆறாவது: அந்த அந்த நாடுகளின் சட்டங்களுக்கு அமைவாக கூட்டங்களையும், ஊர்வலங்களையும், முன்கூட்டியே அனுமதி பெற்று, சகல மக்களுக்கு தெரியப்படுத்தி, பெரும் எண்ணிக்கையான மக்களுடன் (ஆயிரக்கணக்கில்) ஊர்வலங்கள், கூட்டங்களை அமைதியான முறையில் இதற்குரிய சுலோகங்களுடன் நடத்தும் அதேவேளை, பத்திரிகையாளர் மகாநாடு பிரதிநிதிகள் சந்திப்பு போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.

ஊர்வலங்கள், கூட்டங்களை அவ்நாட்டின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற, செனற் போன்ற முக்கிய முற்றல்களில் நடத்த வேண்டும்.

ஜெனீவாவில் . நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடர் வேளையில், . நா சபையின் முன்னால் ஆயிரக்கணக்கான புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் பங்குபற்றும் கூட்டங்கள் ஊர்வலங்களும் மீண்டும் புத்துயிர் பெற, சகல அமைப்புக்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். இது தமிழர் பற்றிய விடயம், ஆகையால் முக்கியமாக சுவிசில் உள்ள சகல தமிழ் அமைப்புக்களும் இவ் முன்னெடுப்புக்களில் ஈடுபட வேண்டும்.

இவ் வேலை திட்டங்களில்வேற்றுமையில் ஒற்றுமை கண்டு”, சகல அமைப்புக்களும் ஒருங்கிணைத்து, ஒவ்வொரு அமைப்பாக தம்மால் செய்யக் கூடிய வேலைகளை செய்ய முன் வர வேண்டும்.

அறிக்கை விடயத்தில் இவ்விதமாக புலம்பெயர் வாழ் மக்கள் வேலை செய்வதன் மூலம், எமது மக்களுக்கு இளைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, நிலப்பறிப்பு போன்றவற்றிற்கு நாம் சர்வதேச ரீதியாக நீதி நியாயம் தேடமுடியும்.

எமது வேலைத் திட்டங்கள் யாவும், நாம் வாழும் ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டு மொழியில் நல்ல ஆழுமை உள்ளவர்கள், ஆங்கில மொழியை திறமையாக உரையாற்ற கூடியவர்களினால் முன்னின்று செய்யப்படும் அதேவேளை, மற்றவர்கள் அதற்கான ஊக்கத்தையும் சரீர உதவிகளையும் செய்ய முன்வரவேண்டும்.

ஆனால் இவர் புதியவர் அவர் பழையவர், இவர் எட்டப்பர் அவர் துரோகி என பிரஞ்சனைகளை உண்டு பண்ணாது, யாரையும் பிரிவினை காட்டாது, இது எனது தனிப்பட்ட விடயமல்லா, எமது இனத்திற்கான வேலை திட்டம் ஆகையால் சகல தமிழ் மக்களுக்கு இதில் பங்கு கொள்ள உரிமை உண்டு என யாவரும் எண்ண வேண்டும்.

இவற்றை விரும்பதோர், விமர்சனங்களை மேற்கொள்ளாது, இவர்கள், அமைதியாக இருப்பது, உயிர்களை அர்பணித்த ஆயிரம் ஆயிரம் ஆத்மாக்களுக்கும், தமிழ் இனத்திற்கு செய்யும் பெரும் அர்பணிப்பாக இருக்கும்.

சமகாலத்தில் தமிழ் ஊடகங்கள், இணையத்தளங்கள் . நா அறிக்கை விடயத்தில் அமைப்பு, கட்சி, குழுவென பாரபட்சம் பாராது தமிழ் மக்களுக்கு ஊக்கத்ததை கொடுக்கும் செய்திகள் கட்டுரைகளை வெளியிட வேண்டும்.

அதேவேளை ஊடகங்கள் சிறீலங்காவினுடைய பிரச்சாரம் பற்றிய உண்மை நிலைகளை அறிந்து, அவை பற்றி பிரசுரிப்பதன் மூலம், தமிழ் செயற்பாட்டாளர்கள் நல்ல திறமையான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும்.

படங்களும் செய்திகளும்

வேறுபட்ட காரியாலங்களில் நடைபெறும் எந்த சந்திப்புக்கள் பற்றிய செய்திகள் படங்களை இணையத் தளங்களிலோ, ஊடகங்களில் வெளியிடுவது புத்தியான செயல் அல்ல. இதனால் சந்திப்புக்களை நடத்தியவர்கள் தமக்கு தனிப்பட்ட ரீதியில் புகழ் தேட முடியுமே தவிர, தமிழ் இனத்திற்கான வேலை திட்டங்களுக்கு பல இடைஞ்சல்களையே உருவாக்குவார்கள்.

எமது சந்திப்புக்கள் பற்றி நாம் செய்தி படங்களுடன் வெளியிடும் பொழுது, சிறீலங்கா அரசு இவற்றைப் பார்த்ததும் நாம் சந்திந்தவருக்கு சில தொல்லைகளை கொடுப்பதானால், வேறு சில சந்திப்புக்களை மற்றவர்கள் மேற்கொள்ள முடியாத நிலை உருவாக நாமே காரணமாகிறோம்.

ஆனால் கூட்டங்கள், பத்திரிகையாளர் மகாநாடுகள், ஊர்வலங்கள் பற்றிய வெளிப்படையான செய்திகள், நிட்சயம் ஊடகங்கள் மூலம் மக்களுடன் பகீர்ந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக இவ் வேலைத்திட்டங்கள் பற்றி பறைசாற்றாது, அமைதியாக மேற்கொள்ள வேண்டும். காரணம் ஏற்கனவே எம்மிடையே சிறீலங்கா அரசின் முகவர்களும், மூக்கர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஊடுருவியுள்ளார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.

கடந்த இருபத்து இரண்டு ஆண்டுகளாக, மனித உரிமை செயற்பாடுகளில் சர்வதேச ரீதிய பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், இவ் விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இங்கு எழுதியுள்ளேன்.

0 Responses to ஐ. நா. அறிக்கையும், சர்வதேசத்துடனான அணுகுமுறையும்: ச.வி. கிருபாகரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com