இந்து மாகடல் முன்னரிலும் கூடிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. இலங்கைத் தீவின் கேந்திர அமைவிடம் அதற்கு உலகின் புவிசார் அரசியலில் (Geopolitics) புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது. இலங்கைக்குரிய விசேட பொருளாதார வலய வளங்களை அதனால் தனியே மேம்படுத்த முடியவில்லை.
வங்காள விரிகுடாவின் கடலடியில் பெருமளவு எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது. இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்க்;குள் வரும் வங்காள விரிகுடா நீரடியிலுள்ள எரிவாயுவையும் பிற வளங்களையும் வெளிக்கொணரும் தொழில் நுட்பத் திறன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் மாத்திரம் உண்டு.
இதைத் தவிர்ந்த பிற காரணங்களாலும் இலங்கை முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையின் எதிர்காலம் இ;ந்துமா கடலோடு தொடர்புடையது. அதனுடைய வெளிவிவகாரக் கொள்கை இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது.
சிறிய தீவாக இருந்தாலும் பலமான முப்படைகளைக் கொண்டதாக இருப்பதால் இந்துமா கடலின் ஒரு பகுதியைக் கண்காணிக்கும் வலுவை உயர்த்த வேண்டிய தேவையை இலங்கை அரசு உணர்ந்துள்ளது. இராணுவ பலத்தை வெளிக் காட்டாவிட்டாலும் இராணுவ வலுவை உயர்த்தும் அடிப்படைக் கட்டமைப்பு வசதி அதனிடம் இருக்கிறது.
2020ல் சிறிலங்கா உடையாமல் இருந்தால் அதன் முப்படை வலு உயரும் வாய்ப்பு இருக்கிறது. சீனா, இந்தியா, அமெரிக்கா தவிர்ந்த பிற நாட்டுக் கடற்படைகள் இன்னொரு தசாப்தத்தில் இந்துமா கடலில் சஞ்சரிக்கப் போகின்றன என்ற செய்தியைக் கடல்சார் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அத்திலாந்திக் பசுபிக் மாகடல்களுக்கு நிகரான உயர்வு இந்துமா கடலுக்கு ஏற்கனவே வந்து விட்டது. மக்கள் தொகையில் முதலாம் இரண்டாம் இடங்களில் சீனாவும், இந்தியாவும் ஆசியக் கண்டத்தில் இருக்கின்றன. இவை இரண்டும் உலகப் பொருளாதாரத்தில் உயர்நிலை மேம்பாடு அடைந்துள்ளன.
வியற்நாம் நாடு 2020ஐ ஒட்டிய எதிர்காலத்தில் ஒரு இராணுவ வலுப்பெற்ற நாடாக உயர்வது உறுதியாகி விட்டது. மக்கள் தொகையும் போராட்டப் பாரம்பரியமும் அதனிடம் உண்டு. உலகின் மிகப்பெரிய தீவுத் தொகுதியைக் கொண்ட இந்தோனேசியாவின் கடற்படை விரிவாக்கம் இதே காலத்தில் உச்சம் அடையும் என்று நம்பப்படுகிறது.
இந்தச் சூழலில் முப்பது வருடப் போர் நடத்திய அனுபவமுள்ள இலங்கைத் தீவால் தனது பலத்தை உயர்த்தாமல் இருக்க முடியாது. மக்கள் தொகை, இராணுவத்தினர் எண்ணிக்கை ஆகியவற்றின் விகிதாசார அடிப்படையில் பார்ப்போமானால் ஒப்பீட்டில் தெற்கு ஆசியாவில் மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடாக இலங்கை இடம் பெறுகிறது.
ஈழத் தமிழர்களை படைத்துறை ஆளுமைக்குள் வைத்திருக்கும் நோக்கில் போர் முடிந்ததாகச் சொல்லப்பட்டாலும் 300,000 படையினரைக் கொண்ட இராணுவத்தை இன்னும் 50,000 பேரை இணைப்பது மூலம் மென்மேலும் பலப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பாவையும் மத்திய கிழக்கையும் சீனாவுடனும் ஐப்பானுடனும் பிற ஆசிய நாடுகளுடனும் இணைக்கும் முக்கிய கடற் பாதைகள்; செல்லும் மைய இடத்தில் இலங்கைத் தீவு அமைந்துள்ளது. அமைவிடம் அதற்கு தரைப் பருமனிலும் கூடிய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது.
கடற் பாதைகளின் பாதுகாப்பிற்கு இலங்கைத் தீவின் பங்களிப்பு அளப்பரியது. இந்துமா கடற் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு வாய்ந்த அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையில் கால் பதிக்கத் திட்டமிடுவதில் வியப்பில்லை.
உலக தரம்வாய்ந்த இயற்கைத் துறைமுகமான திருகோணமலை கப்பல்கள் பாதுகாப்பாகத் தரித்து நிற்பதற்கும் இந்துமா கடலில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் சிறந்த வாய்ப்புக்களை அளிக்கிறது.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை நகரைத் தமிழர் தாயகத்தின் தலைநகராகப் பிரகடனஞ் செய்ததால் எதிர்விளைவுகள் எற்பட்டுள்ளன. சிங்களக் குடியேற்றம் தீவிரமடைந்தது. 13 வீதமாக இருந்த திருகோணமலையின் சிங்கள மக்கள் தொகை 2010ல் 30 வீதமாகியுள்ளது.
81.76 வீதமாக இருந்த தமிழ் மக்கள் தொகை இன்று 23.5 வீதமாகியுள்ளது. திருகோணமலை இன்று தமிழர் நிலமல்ல. அரசியல் காரணிகளுக்காக கடன் வழங்கும் உலக வங்கி, நாணய நிதியமும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் குடியேற்றத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
இந்தியாவுக்கு அயல் நாடு என்ற காரணத்தால் மாத்திரமல்லாமல் அதனுடைய உள்நாட்டுக் கடற்பாதைகள் இலங்கைத் தீவைச் சுற்றிச் செல்வதால் கூடுதல் கரிசனை ஏற்பட்டுள்ளது. தூத்துக்;குடித் துறைமுகத்தில் இருந்து கொல்கொத்தா துறைமுகத்திற்குச் செல்லும் இந்தியக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
மன்னார் கடல் – பாக்கு நீரிணை ஆகியவை ஆழம் குறைந்தவை என்றபடியால் இந்தியாவின் சரக்குக் கப்பல்களும் போர் கப்பல்களும் தமது கிழக்கு மேற்குத் துறைமுகங்களுக்குச் செல்லும் போது மேற் கூறிய சுற்றுப் பாதையைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது.
இந்த நீரீணையை ஆழமாக்கும் சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மேற்கூறிய சுற்றுப் பாதை முக்கியத்துவம் குறையாமல் இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பிற்கு இலங்கைத் தீவு அதிமுக்கியமானது என்ற சிந்தனை இந்தியத் திட்டமிடலாளர்களிடம் இருக்கிறது.
இது பிரட்டிஷ் சாம்ராச்சியத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்று. பிரிட்டிஷ் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கைத் தீவு முக்கியமானது என்பது அவர்களுடைய முலோபாயச் செயற்றிட்டம். இந்தியாவின் பிடியில் விழக்கூடாது. என்ற கொள்கை இலங்கை அரசை இயக்கும் அடிப்படைக் கருத்தாக அமைகிறது.
இந்திய- இலங்கை உறவுகளில் இருக்கும் அடிப்படைப் பிரச்சனையை மிகச் சுருக்கமாகச் சொல்லலாம். இலங்கையின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு ஒழுங்கைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது.. இந்தியாவின் எதிர்பார்ப்புகளுக்கு வளைந்து கொடுத்தபடி தனது இறையாண்மையை வலுப்படுத்துவது இலங்கையின் இந்தியா தொடர்பான திட்டம்.
இந்தியாவின் பலத்தைத் தனது பலக் குறைவை நிறைவு செய்யும் இலங்கையின் மூலோபாயம் இது வரை சிறந்த வெற்றியளித்துள்ளது. தனது ஆளுமையின் கீழ் இலங்கையைக் கொண்டுவரத் திட்டமிட்ட இந்தியா இன்று இலங்கைக்கு குற்றேவல் செய்யும் நாடாக மாறிவிட்டது.
இது இலங்கை ஆட்சியாளர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மதிப்பிடலாம். இந்த நிலவரம் நீடிக்குமா என்பது முக்கிய கேள்வி 6.5 கோடி தமிழர்கள் வாழும் தமிழ் நாடு மாநிலத்தை இலங்கை -இந்திய நெருக்க உறவுக்காக நிரந்தரமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மத்திய அரசின் தந்திரோபாயம் தோல்வி கண்டுள்ளது.
2011ம் ஆண்டின் தமிழ் நாட்டுச் சட்ட சபைத் தேர்தல் முடிவுகள் ஒரு அமைதிப் புரட்சிக்கான கட்டியங்க கூறுகின்றன. தமிழகத் தமிழர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் அசமந்தப் போக்குள்ள கூட்டணித் தலைவர்களைக் கூட்டுச் சேர்த்தபடி இலங்கை அரசுக்குச் சார்பான கொள்கையை முன்னெடுப்பது இனிமேலும் சாத்தியப்படாது.
இந்த தேர்தலில் நடந்த ஆட்சி மாற்ற வாக்களிப்பு இந்திய- சிங்களக் கூட்டணி பற்றிய மாற்றுச் சிந்தனையைப் புது டில்லியில் தோற்றுவித்துள்ளது. புதிய தமிழக முதல்வர் பழைய குருடியாக மாறினாலும் கூட மீண்டும் தமிழ் நாட்டைப் பனிக் கரடியின் துயில் நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம்.
இந்தியாவைப் பொறுத்தளவில் இலங்கையின் முக்கியத்துவம் குறையப் போவதில்லை. இந்த மூலோபாயம் எட்டப்படுவதற்குத் தந்திரோபாய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. தமிழீழ நிகழ்வுகள் தமிழ் நாட்டைப் பாரியளவில் பாதிக்கும் என்பதை இந்திய அரசை இயக்குவோர் புரிந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவின் பங்காளியான அமெரிக்காவும் இதைப் புரிந்து கொண்டால் நல்லது. வாய்ச்சாலங்கள் மூலம் ஈழத் தமிழர்களையோ, தமிழகத் தமிழர்களையோ ஏமாற்ற முடியாது என்ற பேருண்மையை பங்காளி நாடுகள் இரண்டும் காலதாமதமின்றி உணர்வது அவசியம்.
இலங்கையின் அமைவிட முக்கியத்துவம் அதன் தரைப்பரப்பு உறுதிப்பாட்டிற்கு ஆபத்து விளைவிக்கும் சாத்தியங்கள் தென்படுகின்றன. வடக்கு கிழக்குத் தமிழர்களின் சம்மதமில்லாமல் நடக்கும் ஆட்சியை உண்மையான ஜனநாயகம் என்று சொல்ல முடியாது.
தமது தேசிய நலனுக்காக இந்த நிலவரத்தை கருத்தில் எடுக்க மறுக்கும் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மனத்தளவில் பிரிந்த இலங்கையின் இனங்களை இரு நாட்டுத் தீர்வு மூலம் வேறுபடுத்தி விட்டால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறந்த அனுகூலங்கள் கிடைக்கும்.



0 Responses to இலங்கைத் தீவுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?