Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தொடர்பில் இந்திய ஜனாதிபதி கருணை காட்ட வேண்டும். என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழகம், இலங்கை மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து எழுந்துள்ள மக்கள் குரல்களுக்கு மதிப்பளித்து மரண தண்டனை என்ற சட்டபூர்வமான கொலை தடுத்து நிறுத்தப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை வாழ் தமிழ் மக்களின் மன உணர்வுகளை இந்திய அரசாங்கத்திற்கு இலங்கையில் இருக்கின்ற இந்திய தூதுவர் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

வன்முறை செயற்பாடுகளை நாம் ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம். ஆனால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கும் மூவரும் உண்மையிலேயே குற்றம் புரிந்தவர்களா என்பது பற்றி பலத்த சந்தேகங்கள் இந்தியாவிலேயே எழுப்பப்பட்டுள்ளன.

ராஜிவ் படுகொலை தொடர்பில் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட வர்மா ஆணைக்குழு செயற்படவில்லை. அதேபோல் ஜெயின் ஆணைக்குழு இடைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் பிரபல ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் கிருஷ்ண அய்யர், குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை நிரபராதியென அறிவித்துள்ளார்.

இந்த அடிப்படைகளிலேயே இந்திய அரசியல் தலைவர்கள் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோருகின்றார்கள். ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையாகும். இது இலங்கை இனப்பிரச்சினை ஆயுத போராட்ட வடிவம் பெற்றமையுடன் நேரடி தொடர்பு கொண்டதாகும்.

அப்படுகொலைக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் செயற்பாடுகளுடன் அந்த படுகொலைக்கு தொடர்பு இருக்கின்றது. அதேபோல் இன்றுவரை இலங்கை இனப்பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டில் ராஜீவ் காந்தியின் படுகொலை செல்வாக்கு செலுத்தி வருகின்றது.

இந்த கொள்கை நிலைப்பாட்டின் பின்னணியிலேயே இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது. இது வரலாறு ஆகும். எனவே மரண தண்டனை கைதிகள் விவகாரமும், இலங்கை இனப்பிரச்சினையுடன் தொடர்பு கொண்டதாகும்.

ராஜீவ் காந்தியின் மண்டையை உடைத்து அவரை கொலை செய்வதற்கு இலங்கையில் கொழும்பில் வைத்து 1987ம் ஆண்டு ஒரு முயற்சி நடைபெற்றது. அவரது பாதுகாப்பு அதிகாரியின் முயற்சியினால் பிரதமர் ராஜீவ் காந்தி அன்று பாதுகாக்கப்பட்டார்.

அந்த கொலை முயற்சியும் இலங்கை இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டதாகும். எனவே இலங்கை இனப்பிரச்சினையுடன் தொடர்புகொண்ட ஆயுதப்போராட்டம், யுத்தம் ஆகியவை தொடர்பில் படுகொலை செய்தவர்களையெல்லாம் தூக்கில் போடவேண்டும் என்றால், பெருந்தொகையானோரை தூக்கில் போடவேண்டும்.

அந்த தகுதியுடைய நிறையபேர் இந்தியாவிலும், இலங்கையிலும் இருக்கின்றார்கள். எனவே இது வெறும் சட்டப்பிரச்சினை அல்ல. இதுதொடர்பில் இந்திய அரசாங்கம் அரசியல் ரீதியாக முடிவெடுக்க வேண்டும். அதற்கான வழி இந்திய அரசியல் சட்டப்படி இருக்கின்றது.

அதனால்தான் இந்த பிரச்சினை இன்று இந்திய நீதிமன்றங்களிலிருந்து, இந்திய ஜனாதிபதியிடம் சென்றுள்ளது. பொது மன்னிப்பை வழங்கி மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும். அதன் மூலமாக இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலே ஒரு சரியான சமிக்ஞையை இந்திய அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.

0 Responses to மரண தண்டனை குறித்து இந்திய ஜனாதிபதி கருணை காட்ட வேண்டும்!: மனோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com