Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி: சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் கோரிக்கை குறித்து தமிழக அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமென்றும், தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்ததற்கு பேரவையில் பதில் கூறிய முதல் அமைச்சர் ஜெயலலிதா, தேவையில்லாமல் கருணாநிதியின் இரட்டை வேடம், பித்தலாட்டம், கபட நாடகம் என்றெல்லாம் அநாகரிகமான வார்த்தைகளைப் பேசியிருக்கிறாரே?

பதில்: அவரவர் தகுதிக்கேற்பத்தான் வார்த்தைகள் வெளிவரும். இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி ஜெயலலிதா எப்போது அறிக்கை வெளியிட்டாலும், அதிலே இடம்பெறக்கூடிய வார்த்தைகள்தான் இவை. முதலில் 110 வது விதியின் கீழ் அறிக்கை படிக்கும்போது குற்றச்சாட்டே கூறக்கூடாது. ஆனால் அந்த அறிக்கை முழுவதும் குற்றச்சாட்டுகள், அதுவும் என் மீதுதான்! 2000 ம் ஆண்டில் அமைச்சரவையிலே எடுக்கப்பட்ட ஒரு முடிவினை தற்போது ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை நடைபெற்ற ஒருசில ஆண்டுகளில் 8.10.1999 அன்று உச்சநீதிமன்றமும், அதைத் தொடர்ந்து கருணை மனு மீது 25.11.1999 அன்று சென்னை உயர் நீதிமன்றமும் இவர்களின் கோரிக்கையை நிராகரித்துவிட்ட சூழ்நிலையில், நாட்டு மக்கள் எல்லாம் இவர்கள் மீது எதிர்ப்புக் கருத்தினைக் கொண்டிருந்தபோது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவினை ஜெயலலிதா பேரவையில் படித்துக் காட்டியிருக்கிறார்.

2000 ம் ஆண்டில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் ஒருசில ஆண்டுகளே தண்டனையை அனுபவித்திருந்தனர். அப்போதுதான் ராஜீவ்காந்தியின் மறைவுக்குக் காரணமாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டியபோது, தி.மு.க. அமைச்சரவையில் ஒரு முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவினைக்கூட நான் ஜெயலலிதாவைப்போல தன்னிச்சையாக எடுத்துவிடவில்லை. அமைச்சரவையில் வைத்து விவாதத்திற்குப் பிறகுதான் முடிவெடுக்கப்பட்டது. அப்போதுகூட தூக்கு தண்டனைக்கு ஆளான நான்குபேரில் ஒருவரான நளினியின் பெண் குழந்தை அனாதை ஆகிவிடும் என்று நான் தெரிவித்த கருத்தினை ஏற்றுத்தான், அவருக்கு அப்போது கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

அதைத்தான் ஜெயலலிதா பேரவையில் சுட்டிக்காட்டி, நளினிக்கு தண்டனை குறைப்பு செய்ததைப் போல, மற்றவர்களுக்கு ஏன் செய்யவில்லை என்று கேட்டிருக்கிறார். ஆனால் நளினி ஒருவரின் தண்டனையைக் குறைத்ததற்கே 27.4.2000 அன்று பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஏன் நளினியை விடுதலை செய்தது பற்றி 23.10.2008 தேதிய நமது எம்.ஜி.ஆர்.'' இதழில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

நளினி உட்பட இன்னும் சிலருக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ம் ஆண்டு மரண தண்டனையை உறுதி செய்தது. உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது......''

இப்படியெல்லாம் கூறிவிட்டு நேற்றைய தினம்கூட அவர்களின் தண்டனையைக் குறைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்ற முன்வராமல், தற்போது தி.மு.க.வும், மற்ற எதிர்க்கட்சிகளும், அனைத்துத் தரப்பினரும் அறிக்கை விடுத்தபிறகு, அதனால் எழுந்துள்ள எழுச்சியைக் கண்டு பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

எப்படியோ தற்போது மற்ற மூவரும் இதுவரை 20 ஆண்டுகளுக்குமேல் தூக்கு தண்டனைக்கு சமமாக சிறையிலே இருந்து தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். எனவே அவர்களின் தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று தி.மு.க. சார்பில் கோருகிறோம். நமது நிலைப்பாடு என்னவென்றால் இருபதாண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் சிறையிலே இருந்துவிட்ட காரணத்தால், அதையே அவர்கள் அனுபவித்த முழு தண்டனையாக எண்ணி அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்று மத்திய அரசை தி.மு.க. கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

0 Responses to மூவரையும் விடுதலை செய்யவேண்டும்: கலைஞர் கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com