இராணுவத்தினரிடம் பொதுமக்கள் மட்டுமன்றி பாதிரியாருடன் அரசியல்துறையை சார்ந்த போராளிகளும் சரணடைந்தனர். பாலகுமாரன், எழிலன் போன்றவர்கள் இருக்கின்றனரா? இல்லையா? என்பதும் தெரியாமலே இருக்கின்றது. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், கைது செய்யப்பட்டோர், காணாமல் போனோர் மற்றும் சரணடைந்தோர் தொடர்பிலான விபரங்கள் உறவினர்களுக்கு இன்னுமே தெரிவிக்கப்படவில்லை. இவை ஆரோக்கியமான விடயங்களல்ல. எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதி, புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்புகள் அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகால கட்டத்தில் ஆயிரக்கணக்ககான இளைஞர் யுவதிகள் சரணடைந்தமை சகலருக்கும் தெரிந்த விடயம்.
இதுதொடர்பில் திட்டவட்டமான தகவல்களை வெளியிடுமாறு ஜனாதிபதியிடமும் அமைச்சர்களிடமும் கேட்டோம். அந்த தரவுகள் கணினி மயப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். கணினி மயப்படுத்தப்பட்ட தகவல்களை எங்களுக்கோ, இன்றேல் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களிடமோ காண்பிக்கவில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவினர் வடக்கு கிழக்கில் மேற்கொண்ட விசாரணைகளின் போது 5000 ற்கு மேற்பட்ட தாய்மார் தங்களுடைய குழந்தைகளை, கணவர்மாரை காணவில்லை என்ற விபரங்களை தெரிவித்துள்ளனர்.
தங்களுடைய குழந்தைகள் இருக்கின்றனரா?, இல்லையா? என்று தேடியறிவது குடும்பத்தின் தேவையாகும். அத் தேவையை செய்து கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
இதேவேளை, இராணுவத்தினரிடம் பொதுகள் மட்டுமின்றி போராளிகளும் சரணடைந்தனர். பாதிரியாருடன் அரசியல்துறையை சார்ந்தவர்களும் சரணடைந்தனர். பாலகுமாரன், எழிலன் போன்றவர்கள் இருக்கின்றனரா? இல்லையா? என்பதும் தெரியாமலே இருக்கின்றது.
குடும்ப உறவினர்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றனர்.
விபரங்கள் தெரியாமல் சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர். விதவைகள் மட்டுமே வாழ்கின்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெரும் அவஸ்தைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கே.பி., கருணா போன்றோர் சுகபோகம் அனுபவிக்கின்றனர். சிறிய பிரச்சினைக்கு உள்ளானவர்களை சிறைச்சாலைகளில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது நியாயமானதா?
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் விடுவிக்கக் கூடியவர்களை விடுவிக்க முடியும். சிறைச்சாலைகளில் அதிகாரிகளுக்கு அப்பால் சிங்கள கைதிகளும் தமிழ் கைதிகளை தாக்குகின்றனர். சிறிய தவறுக்கேனும் தாக்கப்படுகின்றனர்.
தென் பகுதியிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை வடக்கு கிழக்கு சிறைச்சாலைகளுக்கு மாற்றலாம். அதன் மூலமாக? கைதிகள் முகம் கொடுக்கும் மொழிப் பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் கைதிகளை சந்திக்கலாம்.
அவசரகாலச் சட்டம் அமுலில் இல்லை என்றாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பலரும் கைது செய்யப்படுகின்றனர். கைது எனும் பெயரில் வெள்ளை வேனிலேயே அழைத்து செல்லப்படுகின்றனர்.
ஜனாதிபதி இந்தோனேசியாவில் ஜனநாயகம் பற்றி பேசுகின்றார். யாழில் எங்களால் பேச முடியுமா? அளவெட்டியில் 5 எம்.பி. க்களுக்கு என்ன நடந்தது. துண்டு பிரசுரம் எவ்வாறானது என்பதனை விடவும் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் தலைகவசத்துடன் புகுந்து விளம்பர பலகைகளை உடைக்கின்றனர். அங்கு ஜனநாயகம் இருக்கின்றதா?
தலை கவசத்துடன் வந்தவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகின்றது. தேர்தல் நடந்து விட்டால் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதாக அர்த்தப்படாது என்றார்.
இராணுவ அதிகாரியான வட மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றார்! சுரேஸ் பா.உ.
யுத்தத்தின் காயங்கள் இன்னும் ஆறாத நிலையில் வடமாகாண ஆளுநர் அங்கு தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றார் எனத் தெரிவித்த கூட்டமைப்பு எம்.பி. யான சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கில் ஒரு ஜனநாயகமும் ஏனைய பகுதிகளில் வேறு ஜனநாயகமும் நிலவுகின்றதா என்றும் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
சுரேஸ் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
யுத்தம் நிறைவடைந்து 30 மாதங்கள் கடந்துவிட்டன. எனினும் யுத்தத்தின் காயங்கள் இன்னும் ஆறவில்லை.
இந்நிலையில் அரசாங்கம் முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும். ஆனாலும் தமிழ் பிரதேசங்களுக்கு சிங்கள அதிகாரிகளை கொண்டு செல்வதே அரசாங்கத்தின் முன்னுதாரணமாக இருக்கின்றது.
வடக்கு இலங்கையைப் பொறுத்தவரையில் அங்கு தனியார் காணிகள் இன்னும் இராணுவத்தினரின் பிடியிலேயே இருக்கின்றது. இதேவேளை சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெற்று வருகின்றன.
தனித் தமிழ் மாவட்டமாக முல்லைத்தீவு இருந்தது. எனினும் அங்கு ஒரே இரவில் 9 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் தமது உரிமைக்காகவே யுத்தம் செய்தனர். அதில் தீர்வு கிடைக்கவில்லை. தற்போது பேச்சுவார்த்தைகளும் இழுபறியில் கிடக்கின்றன.
பிரச்சினைக்கு தீர்வைக் கண்டு சுமுக வாழ்க்கையை ஏற்படுத்தி விட்டதன் பின்னர் உங்களது அதிகாரங்களை அங்கு கொண்டு சென்றால் யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை.
மாகாணசபைகள் இருக்கின்றன. இவற்றுக்கு மக்களால் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்றனர். சபைகளுக்கு அதிகாரங்களும் வழங்கப்படுகின்றன. அமைச்சர்களும் நியமிக்கப்படுகின்றனர்.
எனினும் கிழக்கு மாகாண ஆளுநர் அங்கிருக்கும் அமைச்சர்களையும் மதிக்காது அனைத்து விடயங்களிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரைப் போன்று செயற்படுகின்றார். அப்படியென்றால் மாகாணசபையோ மாகாண அமைச்சர்களோ இங்கு தேவையற்ற விடயங்களாகும்.
கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக சபையின் ஆளும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தபோது அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது ஒரு புறமிருக்க கிழக்கில் யுத்தம் நிறைவடைந்து குறுகிய காலத்தில் அங்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் வடக்கில் யுத்தம் நிறைவடைந்து 30 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் அங்கு இன்னும் வட மாகாணத்துக்கான தேர்தல் நடத்தப்படவில்லை.
அரசாங்கம் விரும்பினால் வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் விரும்பாவிட்டால் நடைபெறாது என்ற நிலையில் தான் வடக்கின் நிலை இருக்கின்றது.
இதேவேளை, வட மாகாணத்தின் ஆளுநராக இருக்கின்றவர் அங்குள்ள எந்தவொரு எம்.பி.யும் எந்தவிடயம் குறித்தும் கலந்து பேசுவது கிடையாது. ஆளும் தரப்பு உறுப்பினர்களுடன் பேசியிருக்கலாம். வடக்கில் பெரிய அரசியல் கட்சியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர் எந்தவொரு கூட்டங்களுக்கும் அழைத்ததில்லை.
ஆளுநர் அங்கு தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றார். நியமனங்கள் கூட அங்கு ஆளுநருக்கும் அமைச்சர் ஒருவருக்கும் தேவைப்பட்ட வகையிலேயே இடம்பெறுகின்றன.
வட மாகாண ஆளுநர் இராணுவ அதிகாரியாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் கடற்படை அதிகாரியாகவும் இருக்கின்றனர். இவர்கள் ஜனாதிபதிக்கு தேவையாக இருப்பதால் ஒன்றும் நடப்பதில்லை. ஏனைய மாவட்டங்களிலும் கூட ஆளுநர்கள் இவ்வாறு நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்களாக இருக்கிறார்களா எனக் கேட்கிறேன்.
வடக்கில் ஒரு ஜனநாயகம் ஏனைய பகுதிகளில் இன்னுமொரு ஜனநாயகமா இடம்பெறுகின்றது.
யாழ்ப்பாணம் செல்கையில் பார்த்தால் படையினருக்கான நினைவுச் சின்னங்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனினும் தமிழ் மக்கள் தமது விடுதலைக்காகப் போராடியதன் நினைவாக இருந்த நினைவுச் சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றன என்றார்.
இராணுவ அதிகாரியான வட மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றார்! - சுரேஸ்
பதிந்தவர்:
Anonymous
10 December 2011



0 Responses to இராணுவ அதிகாரியான வட மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றார்! - சுரேஸ்