பிரான்சிய தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும்போது தற்போதய அதிபர் ஸார்கோஸிக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஸார்கோஸி வெற்றி பெறுவதற்கு காலம் சென்ற கேணல் கடாபி 50 மில்லியன் யூரோவை வழங்கியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய ஐரோப்பிய காலைச் செய்திகளில் அதிக பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தகவலை பிரான்சில் உள்ள மீடியாபாட் என்ற இணையப் பத்திரிகை வெளியீடு செய்துள்ளது. இதற்கான அரபு மொழி ஆவணங்களையும் அது வெளியீடு செய்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு கடாபியின் வெளிநாட்டு அமைச்சராக இருந்த மூஸா கூஸா இந்த பண மாற்றத்திற்கான படிவங்களில் கையொப்பமிட்டுள்ளார். இறுதியாக பணம் எவ்வாறு கைமாறியது என்ற விடயம் மட்டும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் ஸார்கோஸி பணம் வேண்டியதை நிரூபிப்பதற்கு இது போதுமான ஆதாரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபிய தலைவர் கடாபிக்கு எதிராக நடாத்தப்பட்ட போருக்கு முன்னணியில் நின்றவர் பிரான்சிய அதிபர் ஸார்கோஸி ஆகும். அதற்கு முன்னர் கடாபியுடன் தொடர்பு கொண்டவர் பிரிட்டன் பிரதமர் ரொனி பிளேயராகும். இதுமாத்திரமல்லாமல் இத்தாலிய முன்னாள் பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனி கடாபிக்கு இன்ரசிற்றி ரயில் வண்டியை பரிசாக வழங்கியவர். இவருடைய தேர்தல் பிரச்சாரத்திற்கு அழகிகளை ஸ்பொன்சர் செய்தவர் கடாபி என்றும் தெரிவிக்கப்பட்டது. இவ்விதம் தலைவர்கள் கடாபியுடன் நல்லுறவு வைத்திருக்க அவருடைய பணமும், எண்ணெய் வளமும் காரணமாக இருந்துள்ளது.
ஆனால் இத்துணை ஆதரவளித்த தலைவர்கள் கடாபிக்கு எதிராக ஏன் திரும்பினார்கள் என்ற மர்மமே இதுவரை உடையாத மர்மமாக இருந்து வந்தது. அதில் முக்கியமான இரகசியம் ஒன்று இன்றைய காலைச் செய்திகளில் வெளியானது. உலகின் முக்கிய தலைவர்களுக்கு பணத்தையும், எண்ணெயையும் வாரி வழங்கியபடியே கடாபி அணு குண்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதுதான் உலகம் அவருக்கு எதிராக திரும்ப அடிப்படைக் காரணம் என்று அந்தச் செய்தி கோடி காட்டியது. இந்த விவகாரம் கடாபி கொலையின் மர்மங்களை அவிழ்க்க வாய்ப்புள்ளது. கடாபி சரணடைய வாய்ப்பை வழங்காமல் விட்டமைக்கு என்ன காரணம்… அதற்குள்தான் மர்ம முடிச்சே இருக்கிறது.. முள்ளிவாய்க்காலுக்குள் புலிகள் சரணடைய முன் வந்தும் முடியாமல் போனமைக்கான காரணங்களும் இதுபோல ஆய்வுக்குரியவையே.
மேலும் தற்போதைய பிரான்சிய அதிபருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடுத்த வாரம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவருக்கு பாரிய பின்னடைவை கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தோல்விப்படியிலேயே நிற்கும் ஸார்கோஸி இந்த விவகாரத்தால் மேலும் ஒரு படி கீழே விழுந்துள்ளார். அதைவிட மோசமான ஆபத்து, ஒரு கொடியவன் கொடுத்த பணமே பிரான்சின் அதி உயர் பதவியை தீர்மானித்துள்ளது என்பதுதான். தேர்தல் முடிந்ததும் விசாரணைகள் ஆரம்பமாகும். குற்றச்சாட்டை ஸார்கோஸி மறுத்தாலும் கூட, தோல்வியடைந்தால் அவரை சிறைச்சாலை கொண்டு போகக்கூடியளவு ஆபத்து இதில் மறைந்துள்ளதை மறுக்க இயலாது. கடைசி நேரம் வரை பிரான்ஸ் தமக்கு எதிராக திரும்பாது அவர்கள் எமது நண்பர்கள் என்று கடாபியின் மகன் கூறிவந்தமை இங்கு கவனிக்கத்தக்கது.
இது இவ்விதமிருக்க அமெரிக்க அpதபர் தேர்தலுக்கான பிரச்சாரங்களின் முதலாவது குரலை நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டார். தன்னுடன் போட்டியிடப் போகும் மிற் றொம்னியும் தானும் ஹாவாட் பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், அங்கே தான் முதலாவது இடத்திலும், றொம்னி இரண்டாவது இடத்திலும் இருந்தார் என்றும் கூறினார். நடக்கப் போகும் தேர்தல் முடிவுக்கு இதைவிட பெரிய ஒப்புமை வேறென்ன வேண்டுமென்று கேலியாக பேசினார். அவருடைய சிரிப்பு நடக்கப்போகும் தேர்தலில் தனக்கு முதலிடம் என்றும், றொம்னிக்கு இரண்டாமிடம் என்பது போலவும் இருந்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதையே அடி தலையாக புரட்டிப் போட்டு றொம்னி பிரபலமடைய ஓரிடம் இருப்பதை ஒபாமாவின் கொள்கை வகுப்பாளர் கவனிக்கத் தவறிவிட்டார்கள். ஒபாமா கூறுவது சரி அமெரிக்க அதிபர் பதவிக்கு இரண்டு தடவைகள் வாய்ப்புக்கள் உள்ளன. முதலாவது ஒபாமாவுக்கு அவர் பதவியில் இருந்துவிட்டார். இரண்டாவது பருவத்திற்கான வாய்ப்பு எனக்கு, அதுதான் நான் இரண்டாவதாக இருந்தேன் என்று கூறினால் ஒபாமாவின் முதலாவது பிரச்சாரம் உடைந்துவிடும். இப்படி அவரது முதலாவது பிரச்சாரத்தை கோணலாக்கி முதற் கோணல் முற்றும் கோணல் என்ற நிலைக்குள் தள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தும் பிரச்சார ஆற்றல் றொம்னியிடம் இருக்கிறதா.. பொறுத்திருக்க வேண்டும்…
எகிப்திற்கான சவுதி அரேபியா தூதராலயங்கள், கொன்சலேற் தர காரியாலயங்கள் யாவும் மூடப்படுவதாக சவுதி அறிவித்துள்ளது. சவுதியில் கைது செய்யப்பட்ட எகிப்திய சட்டத்தரணி ஒருவரை விடுதலை செய்யக்கோரி எகிப்தில் உள்ள சவுதி தூதரகங்களுக்கு முன்னால் ஆர்பாட்டங்களை நடாத்தியதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சூடான் – தெற்குச் சூடான் எல்லைப் பகுதியில் மூன்று வெளிநாட்டவர்கள் சூடான் படைகளால் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் ஒருவர் பிரிட்டன், மற்றவர் நோர்வே மூன்றாமவர் தென்னாபிரிக்காவை சேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் அனுமதி இல்லாமல் சூடானின் எண்ணெய் வளமுள்ள பகுதிகளுக்கு வந்ததாக சூடான் தெரிவித்து தடுத்து வைத்துள்ளது. இவர்கள் ஆயுதங்களுடன் இரண்டு வாகனங்களில் வருவதற்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவர்கள் ஐ.நா பணியாளர், சூடனின் தலைநகர் கார்டுமில் இருந்தபோது கைதானதாக தெரிவித்த ஐ.நா அவர்களை விடுவிக்கும்படி கோரியுள்ளது. ஆனால் ஐ.நாவின் கோரிக்கையை சூடான் ஏற்கவில்லை. போகிற போக்கில் சூடான் – தென் சூடான் பிரச்சனை தொடரும் போலவே தெரிகிறது.
அலைகள்



0 Responses to கடாசி இழுக்கிறது கடாபி பணம்!