ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சீனா, ரஷ்யா உட்பட்ட நான்கு முக்கிய நாடுகள் ஜுன் மாதத்துடன் விலகிக் கொள்வதால், நவம்பர் 1ம் நாள் நடைபெறவுள்ள, மனித உரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் மட்டுமே உறுப்புரிமை வகிக்க முடியும் என்பதால், சுழற்சி முறையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டு யூன் மாதத்துடன் ரஸ்யா, சீனா, சவூதி அரேபியா, பங்களாதேஸ் ஆகிய நாடுகளின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இவற்றில் ரஸ்யாவும், சீனாவும் இலங்கைக்கு மிகவும் நெருக்கமான நாடுகளாகும்.
கடந்தமாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கு இந்த நாடுகள் கடுமையாக முயன்றன.
குறிப்பாக சீனா, இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கான பரப்புரைகளிலும் இறங்கியிருந்தது.
இந்தநிலையில் வரும் யூன் மாதத்துடன் ரஸ்யா மற்றும் சீனா உள்ளிட்ட இலங்கைக்கு ஆதரவான நான்கு நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்த விலகிக் கொள்வது இலங்கையை கவலை கொள்ளச் செய்துள்ளது.
ஜெனிவாவில் வரும் நவம்பர் 1ம் நாள் இலங்கை தொடர்பான மீளாய்வு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த நாடுகளின் ஆதரவைப் பெறமுடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நாடுகள் மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது போவது இலங்கையை கவலையில் ஆழ்த்தியுள்ளது என்றும், ஆனாலும் இந்த நாடுகள் வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்று நம்புவதாகவும் இலங்கை அரசாங்க வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
சீனா | ரஸ்யா வெளியேற்றம்! மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு மேலும் நெருக்கடி!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
29 April 2012



0 Responses to சீனா | ரஸ்யா வெளியேற்றம்! மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு மேலும் நெருக்கடி!