புதுக்கோட்டைடையின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து எதிர்பாராத விபத்தில் ஏப்ரல் 1 ந் தேதி மறைந்த சி.பி.ஐ தோழர் எஸ்.பி.முத்துக்குமரனின் படத்திறப்பு மற்றும் புகழங்சலிக் கூட்டம் முத்துக்குமரனின் சொந்த கிராமமான நெடுவாசல் கிராமத்தில் கடைவீதி பொது மேடையில் நடந்தது.
விழாவில் சி.பி.ஐ எம்.பி ராஜா, மாநில செயலாளர் தா.பாண்டியன், தோழர் நல்லகண்ணு, சி.மகேந்திரன், தி.மு.க முன்னால் எம்.பி ராஜாபரமசிவம், முன்னால் எம்.எல்.ஏ. க்கள் குழ.செல்லையா, சுவாமிநாதன், புஷ்பராஜ் மற்றும் அனைத்துக் கட்சிகாரர்களும் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினார்கள்.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டிருந்தனர். கண்ணீருடன் அனைவரும் காணப்பட்டனர். விழா தொடங்கும் முன்பாக ராஜா எம்.பி முத்துக்குமரன் வீட்டிற்கு சென்று முத்துக்குமரன் மனைவி சுசிலாவிற்கு ஆறுதல் கூறினார்.
முத்துக்குமரன் படத்தை தோழர் தா.பாண்டியன் திறந்து வைத்து பேசினார்.. இழப்புகளையும் சோதணைகளையும் சந்தித்து வளர்ந்த இயக்கம் இந்த இயக்கம். முத்துக்குமரன் குடும்பம் ஒரு துளி கண்ணீர் கூட விட அனுமதிக்கவிட மாட்டோம்.
முத்துக்குமரன் ஆற்றிய பணி எங்கள் கட்சிக்கு பெருமை என்றால் அப்படிப்பட்ட தோழரை இழந்து விட்டோமே என்று துடிக்கிறோம் என்று பேசியதுடன் கண்ணீர் கொட்டியது.. தொடர்து பேசினார்.. முத்துக்குமரன் எடுத்துக் கொண்ட கொள்கை கோட்பாடுகளை இந்த செங்கொடி இயக்கம் காப்பாற்றும்.
அவரது கனவுகளை நிறைவேற்ற இந்த செங்கொடி மேலும் மேலும் எழும்.. அவன் செய்ய நினைத்ததை எல்லாம் செய்து அவனுக்கு காணிக்கை ஆக்குவோம். முத்துக்குமரன் சொத்து சுகங்களை விட்டு செல்லவில்லை என்றாலும் உலக செல்வங்களான நல்ல உள்ளங்களை விட்டு சென்றிருக்கிறார் என்று பேசினார்.
தோழர் நல்லகண்ணு:
முத்துக்குமரன் வாழ்க்கையை இலக்கணமாக கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததிகளுக்கு அவன் விட்டுச் சென்றது அந்த இலக்கணமான வாழ்க்கையை தான். முத்துக்குமரனின் இலக்கண பாடத்தில் இளைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக அவர் ஆற்றிய பணிகள், சட்டமன்ற கேள்விகள், பேச்சுகள் அனைத்தும் புத்தகமாக வெளி வரும் என்று பேசினார்.
தோழர் ராஜா எம்.பி.
நான் 1991 ல் புதுக்கோட்டைக்கு வந்த போது எனக்கு புட்பாய்சனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள தங்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். என் மகள் பிறந்த நேரம் அது. என் கூடவே இருந்து எனக்கு தேவையான மருந்து, உணவுகளை வாங்கி வந்து கொடுத்து பணிவிடை செய்து என்னை உயிர் பிழைக்க வைத்த என் உயிர் தோழன் உயிர் காக்கும் தோழன் முத்துக்குமரன் இன்று இல்லை என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்று பேசும் போதே கண்ணீர் கொட்டியது.. மரணத்தைக் கூட மரணிக்க வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். முத்துக்குமரன் கனவுகளை மெய்பட வைப்போம் என்றார்.
இந்த விழா ஏற்பாடுகளை நெடுவாசல் கிராம மக்கள் செய்திருந்தனர். முத்துக்குமரன் நினைவாக அன்னதானம் நிகழ்சியையும் செய்திருந்தனர்.
இரா. பகத்சிங்.



0 Responses to முத்துக்குமரன் படத்திறப்பு புகழஞ்சலி : தலைவர்கள் கண்ணீர்