இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு நேற்று டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சிறப்பு பட்டமளிப்பு விவாழில் கலந்து கொண்ட அவருக்கு, பல்கலைக்கழக வேந்தரும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியுமான எம்.ஏ.ஜாகி டாக்டர் பட்டத்தை வழங்கினார். இதன் போது கருத்துரைத்த பான் கீ மூன், நான்கு தசாப்தகாலத்திற்கு முன்னர் இந்தியாவில் மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அதற்கான ஆதாரமாக இன்று பட்டம் பெற்றிருக்கிறேன் என்றார். மேலும் தனது மகன் இங்கு தான் பிறந்ததாகவும், தனது மகளின் கணவரும் இந்தியாவை சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா தனது மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான சவால்களை பொறுப்புடன் கையாளவேண்டியுள்ளதாகவும், பாலினம், அடையாள அல்லது சமூக தோற்றம் என்பவற்றின் அடிப்படையில் குடிமக்களை சட்டத்தின் ஊடாகவும் கொள்கை மற்றும் நடவடிக்கைகள் ஊடாகவும் பாதுகாக்க வேண்டியது இன்றியமையாதது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பட்டமளிப்பு விழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே கூடிய சீக்கியர்கள் 1984ம் ஆண்டு சீக்கிய கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதி இன்னமும் கிடைக்கவில்லை என கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தனது சீக்கிய மெய் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பின்னர் ஏற்பட்ட கலவரங்களில் புதுடெல்லியில் 2,732 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
இதேவேளை பான் கீ மூன் நேற்று புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரையும் பான் கீ மூன் மற்றும் அவரது துனைவியார் யோ சூன் டேக் ஆகியோர் சந்தித்தனர்.
இதன் போது இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் தமக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும், ஆனால் இது நிலைத்திருக்க ஊக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.



0 Responses to மூனுக்கு டாக்டர் பட்டம்!