பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் காப்பாளரா அல்லது சோனியா காந்தியின் செல்ல நாய்க்குட்டியா? (Saviour or Sonia's poodle) என தலைப்பிட்டு, இங்கிலாந்து பத்திரிகையான த இண்டிபெண்டன் வெளியிட்ட கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் அமெரிக்காவின் த டைம் சஞ்சிகை வெளியிட்ட கட்டுரையில் பிரதமர் மன்மோகன் சிங்கை குறை சாதனையாளர் (Underarchiver) என வர்ணித்திருந்தது. இதற்கு இந்தியாவில் எதிர்ப்பும், ஆதரவும் ஒருங்கே வெளிவந்திருந்த நிலையில், தற்போது இங்கிலாந்து பத்திரிகையும் பிரதமரை விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.
த இண்டிபெண்டண்டின் வெளிநாட்டுப்பிரிவுக்கான புதிய பதிப்பில் வெளியாகியுள்ள குறித்த விமர்சன கட்டுரையில், நாட்டில் நிலவும் ஊழல் மோசடிகள், செயற்படாத அதிகாரத்துவம், ஆதிக்கம் நிறைந்த கூட்டாளிகளின் கீழான முடக்கம் என பல விவகாரங்களில் பிரதமரை விமர்சித்துள்ளது.
அவரிடம் உண்மையான அரசியல் அதிகாரம் இல்லை என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். அவர் சோனியா காந்தியின் முடிவுக்கு கட்டுப்பட்டவராக இருக்கிறார். அவருடைய அமைச்சரவையை கட்டுப்படுத்தக்கூட அவரால் சில நேரங்களில் முடியாமல் போய்விடுகிறது. 40 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு டெலிகாம் லைசென்ஸ் வழங்கப்பட்ட விவகாரத்தில் ஊழல் நிலவுகிறது. இது அவருடைய செயற்பாட்டின்மைக்கு சிறந்த உதாரணம் என த இண்டிபெண்டண்ட் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இக்கட்டுரை தொடர்பில் காங்கிரஸ் பேச்சாளர் மனீஷ் திவாரி தெரிவிக்கையில், சிலர் தமது எடிடோரியல் லைசென்ஸை துஷ்பிரயோகம் செய்வது துரதிஷ்டவசமானது.
ஒருவரை பற்றி விமர்சிக்கும் போது, நாகரீகமாக விமர்சிக்கவேண்டியதன் எல்லையை தாண்டக்கூடாது. ஊடக ஆசிரியர் தலையங்கத்தின் பொறுப்புக்கள் மீது நன்மதிப்பு வைத்திருப்பவர்கள் இதனை நன்கு உணர்ந்து கொள்வார்கள் என்றார்.
பாஜக பேச்சாளர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவிக்கையில், பிரதமர் பற்றிய சர்ச்சைகளுக்கு இக்கட்டுரையும் ஒரு அத்தாட்சியாக இருக்கிறது. செயற்படாமல் இருக்கும் பிரதமரின் அரசாட்சி பற்றி அதிகமானோருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் பிரதமர் பற்றிய விமர்சனங்களுக்கு சோனியா காந்தி இதுவரை கருத்த்து தெரிவிக்காது தப்பித்து வருவது மிகப்பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.



0 Responses to பிரதமர் சோனியாவின் செல்ல நாய்க்குட்டியா?: பிரிட்டிஷ் பத்திரிகை