Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேர்ண், 09.11.2012

தமிழீழ தேசத்திற்காய் இடைவிடாது கனன்ற விடுதலைச்சுடர்...

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!

தேசம் கடந்தும் தமிழீழ தேசத்திற்காக இடைவிடாது கனன்ற விடுதலைச்சுடர் ஒன்று, இன்று அணைக்கப்பட்டிருக்கின்றது. சொந்தமண்ணின் சுமைகளையெல்லாம் தன் தோள்களில் தாங்கி நடந்த எங்கள் தளபதி கேணல் பரிதி அவர்கள் 08.11.2012 அன்று வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.

1983 களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் றீகன் ஆக இணைந்து தாயக விடுதலைக்காக போராடி, எங்கள் விடுதலை அமைப்பின் பிரான்ஸ் கிளைக்கு 2003 இல் பொறுப்பேற்று, வழிநடத்தி எதிர்கொண்ட அத்தனை இடர்களையும் சவால்களையும் எமது அமைப்பிற்கே உரித்தான கொள்கையுறுதியுடன் எதிர்கொண்டு வீறுநடை போட வைத்தவர் தளபதி கேணல் பரிதி அவர்கள்.

எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் தனது ஆளுமையையும் இழக்காது, தொடர்ந்தும் அமைப்பின் செயற்பாடுகளை தனது சக செயற்பாட்டாளர்களுடனும், இளையோர்களுடனும், மக்களுடனும் இணைந்து தீர்க்கமுடன் முன்னெடுத்த தளபதி கேணல் பரிதி அவர்கள் எமது அமைப்பின் முன்னணி புலத்துப் போராளியாவர். எதிர்ப்பட்ட இடர்களையெல்லாம் தன் துணிச்சலால் எதிர்கொண்டு விடுதலைத்தேரை முன்னகர்த்தும் பிரதானியாக விளங்கிய ஒரு அற்புதப் போராளியை இன்று நாம் இழந்து நிற்;கின்றோம்.

2009ன் முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தாயகத்தில் எமது விடுதலைப்போருக்கு முடிவு கட்டிவிட்டதாக எண்ணிக்கொள்ளும் சிறிலங்கா அரசு, புலத்தில் எமது மக்களின் விடுதலை உணர்வையும் எழுச்சியையும் கண்டு அஞ்சி நிற்கின்றது. புலத்தில் இவ்வாறான கீழ்த்தரமான தாக்குதல்கள் மூலம் புலத்து செயற்பாட்டாளர்களையும், இன உணர்வாளர்களையும், மக்களையும் உளவியல் ரீதியாக பணியவைத்து, எமது விடுதலைக் கோரிக்கையை இல்லாமல் செய்ய சிறிலங்கா அரசு கங்கணம்கட்டி நிற்கின்றது.



புலம்பெயர்ந்த நாடுகளில், அந்தந்த நாடுகளின் சட்டநெறிகளுக்கு உட்பட்டு, ஒரு மக்கள் மயப்பட்ட போராட்ட வடிவத்தை வரித்துக்கொண்டிருக்கும் எமது மனிதநேய செயற்பாட்டாளர்கள் மீது, இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்தும் நடாத்தப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தளபதி கேணல் பரிதி மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உலகநாடுகள் இவ்வாறான தாக்குதல்களை வெறுமனே பார்த்துக்கொண்டிராமல், தமிழ்மக்கள் மீதான இவ்வாறான வன்முறைத் தாக்குதல் கலாச்சாரத்தை வெளிநாடுகளிலும் நெறிப்படுத்தும் இலங்கை அரசின் உளவுப்பிரிவின் வன்முறையாளர்களையும், அவர்கள் பின்னணியிலிருக்கும் உந்துசக்திகளையும் இனம் கண்டு நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

எங்கள் விடுதலை அமைப்பும், விடுதலைப் போராட்டமும் எத்தனையோ இழப்புக்களை எதிர் கொண்டிருக்கின்றன. இழப்புக்களால் நாம்  ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என உறுதியெடுத்துக்கொள்வோம். அதுவே இதுவரை தேசத்திற்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த அத்தனை மாவீரர்களுக்கும், மக்களுக்கும் நாம் செய்து கொடுக்கும் சத்தியமாகும்.

தளபதி கேணல் பரிதி அவர்களை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் நாமும் துயரில் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.

'புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்'

தமிழீழ விடுதலைப் புலிகள்
சுவிஸ் கிளை

0 Responses to தமிழீழ தேசத்திற்காய் இடைவிடாது கனன்ற விடுதலைச்சுடர்- தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com