Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆகாதவனை அழிப்பதற்கான பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களில் “ அனுகூலச் சத்துரு” உத்தியும் ஒன்று என்று ஆரியநூல்கள் கூறுகின்றன, அவற்றுள் இன்னொரு உத்தி திருதராட்டிர ஆலிங்கனம்.

நண்பனைப் போல் உறவு கொண்டு, உதவுவது போல் நடித்து, நண்பன் ஏமாந்த வேளையில் அவன் கழுத்தை அறுப்பது அல்லது அவனை ஆபத்தில் மாட்டி விடுவது. இது அனுகூலச் சத்துரு உத்தி. திருதராட்டிர ஆலிங்கனம் என்பது, அன்பு பாராட்டுவது போல் ஒருவரை ஆரத்தழுவி, அப்படியே எலும்பு நொறுங்குகிட இறுக்கி அணைத்துக் கொன்றுவிடுவது!

ஈழத்தமிழர் இனப்படுகொலை மீது நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுத் தரப்பினரைத் தண்டிப்பது தொடர்பான சிக்கல்களில் அமெரிக்காவும் இந்தியாவும் கடைபிடிக்கும் உத்திகள் மேற்கண்ட ஆரிய சூழ்ச்சித்திட்டங்களை ஒத்தவை!

ஜெனிவாவில் 27.03.2014 அன்று ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன்மொழிந்து 23 நாடுகள் ஆதரித்து நிறைவேற்றப்பட்ட – ஈழத்தமிழர் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் அனுகூலச் சத்துரு உத்தி சார்ந்தது என்பது தெளிவாகியுள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வருகிறது என்று இவ்வாண்டும் உலக அளவில் பரப்புரை செய்யப்பட்டது. அதன் தமிழகப் பிரச்சார பீரங்கியாக வழக்கம் போல் இவ்வாண்டும் கலைஞர் கருணாநிதி செயல்பட்டார் . அவர் 01.02.2014 அன்று டெசோ கூட்டம் நடத்தி, அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார். அப்பொழுது அமெரிக்கத் தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று வெளியாக வில்லை. அதில் என்ன இருக்கிறது என்பதைக் கருணாநிதியும் வெளிப்படுத்த வில்லை.

இந்தியா அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்குமா அல்லது எதிர்க்குமா என்ற வினா பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது . கடைசியில் வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தது. நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை இராசபட்சே கடுமையாகக் கண்டிக்கிறார்.

அமெரிக்கத் தீர்மானத்தில் அடங்கியுள்ள சரக்குகளை எடை போட்டுப் பார்த்தால் அமெரிக்கா-இந்தியா-இலங்கை மூன்று நாடுகளும் திரைக்குப் பின்னால் கூட்டாகப் பேசித் திரைக்குப் பின்னால் ஒத்திகையும் நடத்திவிட்டு-பார்வையாளர்கள் முன்னே அரங்கத்தில் எதிரும் புதிருமானவர்களாக நின்று வசனம் பேசி நாடகம் நடத்தியிருப்பது அம்பலமாகி விட்டது.

கடந்த ஆண்டு ஐ.நா.மனித உரிமை மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை விடப் புரட்சிகரமான தீர்மானம் இந்த ஆண்டு வந்துள்ளது. தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுமனறம் அமைக்குமாறு அமெரிக்கத் தீர்மானம் கோருகிறது என்று புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு சாராரும், தமிழ்நாட்டுத் தமிழர்களில் ஒரு சாராரும் டமாரம் அடித்துத் திரிந்தனர். “சுதந்திரமான சர்வதேச விசாரணையை அமெரிக்கத் தீர்மானம் கோருகிறது” என்று டெசோ கருணாநிதியும் குந்திக் குரலடுத்துக் கூவிக் கொண்டிருந்தார்.

ஆனால் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் அந்தக் கற்பனைக்கெல்லாம் ஆப்பு வைத்து விட்டது. ஐ.நா.மனித உரிமை ஆணையர் விசாரிக்கலாம் என்ற அளவில் பன்னாட்டுப் புலனாய்வை வெட்டிக் குறுக்கி விட்டது இத்தீர்மானம். ஐ.நா.மனித உரிமை ஆணையரும் தன் விருப்பப்படி தற்சார்புடன – சுதந்திரமாக இலங்கைக்குப் போய் விசாரிக்க முடியாது. இராசபட்சே அரசு அனுமதித்தால் தான் ஐ.நா. மனித உரிமை ஆணையரும் விசாரிக்க முடியும் என்கிறது தீர்மானத்தின் பிரிவு 11.

“மேலே கூறப்பட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்த, இலங்கை அரசின் ஒப்புதல் பெற்று ஐ.நா.மனித உரிமை ஆணையரும் மற்றும் தொடர்புடையவர்களும் இலங்கை அரசுக்கு அறிவுரையும் தொழில் நுட்ப உதவிகளும் செய்யலாம்” (பிரிவு 11) .

இலங்கை அரசு என்பது சாரத்தில் யாரைக் குறிக்கிறது? இனப்படுகொலைக் குற்றவாளி இராசபட்சேயைக் குறிக்கிறது. இராசபட்சே அனுமதித்தால் மனித உரிமை ஆணையர் அறிவுரை வழங்கலாம். கவனிக்க வேண்டும், அது கூடக் குற்றப் புலனாய்வு (INVESTIGATION) செய்வதற்கல்ல, அறிவுரை (ADVICE) கூறுவதற்கு! சுதந்திரமான அதிகாரம் படைத்த பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்ட குழு குற்றப் புலனாய்வு செய்வது என்ற கோரிக்கையை குழிதோண்டிப் புதைத்து விட்டது அமெரிக்கத் தீர்மானம்

அமெரிக்கத் தீர்மானம் இனப்படுகொலை பற்றிய புலனாய்வு என்று கூறாவிட்டாலும் போர்க்குற்றம் என்று கூறுகிறது எனப் பூரித்துப் போனார்கள் தமிழக இன உணர்வாளர்கள் சிலர். போர்க்குற்றத்திற்குள் இனப்படுகொலைக் குற்றமும் இடம் பெறும் என்று விரித்துரைத்தனர் விளக்கவுரை விற்பன்னர்கள். ஆனால் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் போர்க்குற்றம் என்று கூடக் கூறவில்லை . அத்தீர்மானத்தின் 10-வது பிரிவில் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“ தொடர்ந்து கொண்டுள்ள மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க நம்பகமான உள்நாட்டு செயல் முறைகள் இல்லாததால் பன்னாட்டு விசாரணைப் பொறியமைவு தேவை என்று மனித உரிமை ஆணையர் அலுவலகம் பரிந்துரைத்தது. இதைக் கவனத்தில் கொண்டு கீழ்வரும் முடிவுகள் முன்வைக்கப் படுகின்றன”.

10(a) இலங்கை அரசு இத்திசையில் செயல்படுவதில் ஏற்படும் முன்னேற்றத்தை மதிப்பிடவும், அங்கு மனித உரிமைகள் பற்றிக் கண்காணிக்கவும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் செயல்பட வேண்டும்.

10(b) “இலங்கையில் இருதரப்பினரும் நடத்திய மனித உரிமை மீறல்களையும், அதிகார அத்து மீறல்களையும் அவை தொடர்பான குற்றங்களையும் விரிவாகப் புலனாய்வு செய்யவும், அரங்கேற்றப் பட்ட குற்றங்களை மெய்ப்பித்து நிலைநாட்டவும் அவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதைத் தவிர்க்கவும், அவர்கள் மீதான நடவடிக்கையை உறுதி செய்யவும் தொடர்புடைய வல்லுநர்களின் உதவியைப் பெறவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10(c) என்ன நடந்துள்ளது என்பதை மனித உரிமை மன்றத்தில் 27-வது கூட்டத்தில் (2014 செப்டம்பர் வாக்கில்) வாய் மொழியாகக் கூற வேண்டும்.

மனித உரிமை மன்றத்தின் 28-வது கூட்டத்தில் (2015 மார்ச்) முழுமையான விவாதத்திற்குரிய விரிவான அறிக்கையை மனித உரிமை ஆணையம் அளிக்க வேண்டும்”.

மேற்கண்ட தீர்மானத்தின் செயல்பாட்டு பகுதியில் (Operative Portion)  எங்கேயும் போர்க்குற்றம் என்ற சொல் பயன்படுத்தப்பட வில்லை. அது மட்டு மல்ல, இலங்கை அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் சமதட்டில் வைத்து இரு தரப்பும் (Both Parties) செய்த மனித உரிமை மீறல் குற்றங்களை, அதிகார அத்து மீறல்களை விசாரிக்க வேண்டும் என்கிறது.

வடக்கு, கிழக்கு மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ள படைப் பிரிவுகளைத் திரும்ப அழைத்துக் கொள்வது, சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பது போன்ற எதுவுமில்லை இத்தீர்மானத்தில் தமிழர் என்ற சொல் கூடக் கிடையாது. இந்து, முஸ்லிம், கிறித்தவர்கள் என்று மட்டுமே இத்தீர்மானம் கூறுகிறது. இவ்வாறாக, ஈழச் சிக்கல் ஒரு தேசிய இனச் சிக்கல் என்பதை ஏற்கமறுத்து, மதச் சிறுபான்மைச் சிக்கலாக மடைமாற்றி, சிங்கள பேரினவாதத்திற்கு அமெரிக்கத் தீர்மானம் சேவை செய்கிறது.

ஒருவேளை இராசபட்சே ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை இலங்கைக்குள் அனுமதித்தால் அந்த ஆணையத்தின் பணி என்ன? இலங்கை அரசு விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பும் செய்த குற்றங்கள் மீது இராசாபட்சே அரசு நடத்தும் விசாரணைக்கு உதவியும் அறிவுரையும் வழங்குவது தான் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் பணி!

இத்தீர்மானம் சொத்தையானது ; சோடையானது என்பது அமெரிக்காவுக்குத் தெரியாதா? தெரியும்! திட்ட மிட்டுத்தான் இப்படி ஒரு தில்லுமுல்லு தீர்மானத்தை அது முன்மொழிந்தது. தமிழர்களுக்கு நீதி கேட்பதைப் போன்ற தோற்றத்துடன், தமிழர் சிக்கலைப் பயன்படுத்தி இலங்கை அரசைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு இது ஒரு வழி . அவ்வளவே !

தனது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்ப் படுகொலைகளை மறைக்க ஏற்கெனவே மாட்டிக் கொண்டுள்ள மனித உரிமை முக மூடிக்குப் புதுச்சாயம் பூசிக் கொள்ள அமெரிக்காவுக்குக் கிடைத்த புதிய வாய்ப்பு தான் இத் தீர்மானம்.

இதெல்லாம் இந்திய ஆரிய வர்த்த அரசுக்குத் தெரியாதா? தெரியும்! நாடகம் நம்பும் படியாக இருக்க வேண்டாமா ? அதற்காக- அமெரிக்க - இலங்கை அரசுகளிடம் ஒப்புக் கொண்ட பாத்திரத்தைக் கனகச்சிதமாக நடித்துள்ளது.

இந்தியா ஆதரிக்காதது – அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிர்வகைக் கவர்ச்சி ஆகும். தமிழின உணர்வாளர்களைக் குழப்பிடும் தந்திரம் ஆகும். தமிழினப் படுகொலைப் போரில் பங்கு கொண்ட இந்தியா - தமிழின உணர்வாளர்களின் பகையைத் தேடிக் கொண்டுள்ளது. இந்த மனநிலையில் இந்தியா அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்காமல், வாக்கெடுப்பிலிருந்து விலகி நின்றது, தமிழின உணர்வாளர்களிடம் இந்திய அரசின் மீதான எதிர்ப்பைத்தான் முதன்மைப் படுத்தும். அமெரிக்கத் தீர்மானத்தின் சூழ்ச்சியின் மீது உரிய அளவு கவனம் பாயாது!

இந்தியா – அமெரிக்கா - பிரிட்டன் – இலங்கை ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தும் ஈழத்தமிழர் சிக்கல் குறித்த விசாரணை நாடகத்தில் கோயபல்ஸ் வேடம் பூண்டுள்ள கருணாநிதி, எட்டப்பராகவே என்றும் செயல்பட்டுப் பழகிப் போன ப.சிதம்பரம் ஆகியோர் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காததற்காகக் கண்ணீர் அணையைத்திறந்து விட்டுள்ளார்கள். ஒப்பாரி வைக்கும் போது கூட தமது கங்காணி வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளார் கருணாநிதி! இந்தியா தமிழர்களின் தாயகமாம் ; இந்தியா ஆதரித்து வாக்களிக்காமல் புறக்கணித்தது தமிழர்களுக்குத் தலைகுனிவாம்! இந்திய அரசு எப்போதுமே தமிழர்களின் இனப்பகை அரசு என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம்!

செயலலிதாவுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது . யாராவது குளத்தை இறைத்துத் தண்ணீரை வெளியேற்றியிருந்தால் மிதக்கும் மீன்களைக் கொத்திச் செல்லப் பருந்தாகப் பறந்து வருவார்!

கொலைகாரக் கொடியவன் இராசபட்சே கூட இத் தீர்மானத்திற்கு எதிராக நெற்றிக் கண்ணைத்திறந்து நெருப்பைக் கொட்டுகிறான்! நாடக மேடைதானே, தீப்பற்றிக் கொள்ளாது.

இந்தியா, தீர்மானத்தை ஆதரிக்காததால், அதற்குப் பரிசாக, இலங்கைச் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் திறந்துவிட ஆணையிட்டானாம் இராசபட்சே! அப்படி என்றால், இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப் பணயக் கைதிகளாகத்தான் ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு; கைது செய்கிறதா ? எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்பது போலிக் குற்றச் சாட்டு தானே !

ஐ.நா.மன்றத்தில் இலங்கைக்கான நிரந்தரப் பேராளராக இருந்து ஓய்வு பெற்றுள்ள தயான் ஜெயதிலகா ஓர் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார். “ இது இந்தியாவின் மிக நேர்த்தியான இராசதந்திரம். இந்தியா இலங்கையுடன் கொண்டுள்ள உறவின் வலிமைக்கும் இந்தியா தமிழ்நாட்டை எந்த இடத்தில் வைத்துள்ளது என்பதற்கும் அது ஜெனிவா தீர்மானத்தில் – வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது தக்க அளவு கோலாக அமைந்துள்ளது. கொள்கை வகுப்பதில் தமிழ்நாட்டின் உணர்ச்சிகளுக்கு இந்தியா இடம் கொடுக்கவில்லை. ஓரஞ்சாரத்தில் உள்ளவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்குக் கட்டளை போட முடியாது என்பதை அது துணிச்சலுடன் உணர்த்தி விட்டது” என்றார் (The Hindu 28.03.2014)

தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீண்டும் தக்க பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய தருணமிது. ஜெனிவாவில் நடந்தது இந்தியா- அமெரிக்கா- பிரிட்டன் இலங்கை ஆகிய நாடுகள் முன் கூட்டியே திட்டமிட்டு நடத்திய நாடகம்; தமிழர்களை ஏமாற்றி அவரவர் காய்நகர்த்தலுக்குக் கடைபிடிக்கப்பட்ட இராசதந்திரம். இதைப் புரிந்து கொள்ள வேண்டும். காமன் வெல்த் மாநாட்டுக்குச் சென்று பார்த்து விட்டுப், பன்னாட்டுப் புலனாய்வு வரும் என்று உறுமிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் – ஜெனிவா போலித் தீர்மானத்தைப் புகழ்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் சம்பந்தன் இந்தியாவின் கைத்தடி என்பதை இப்போதும் மெய்ப்பித்துள்ளார். “ வாக்களிக்காமல் நடுநிலை வகித்த இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றம் அளித்தாலும், அம் முடிவெடுத்திட இந்தியாவுக்குச் சரியான காரணங்கள் இருந்திருக்கும். இந்தியாவோடு நாங்கள் பேசுவோம்” என்கிறார்.

மேலும் “ அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தீர்மானம் சரியாக செயல் படுத்தப் பட்டால் அது உண்மையான நல்லிணக்கத்திற்கும், நிரந்தரமான அமைதிக்கும் வழி வகுக்கும்” என்கிறார் சம்பந்தன். சம்பந்தன் என்ற பெயருக்கு முன்னால் கருணா என்று சேர்த்து கருணா சம்பந்தன் என்று வைத்துக் கொண்டால் தமிழக அளவிலும் தமிழீழ அளவிலும் அப்பெயர் பொருத்தமாக இருக்கும்!

காங்கிரசுக்கும் பாசகவுக்கும் இடையே காத்திரமான வேறுபாடு எதுவுமில்லை என்பது மீண்டும் உறுதிப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்ததை பாசக தலைமை ஆதரிக்கிறது. ஆனால் அதன் தமிழ்நாட்டுத் தலைவர் பொன்.இராதாகிருட்டிணன் தந்திரமாக காங்கிரசு அரசைக் கண்டிக்கிறார். ப.சிதம்பரம் காங்கிரசு அரசின் முடிவை ஏற்காமல் பம்மாத்து செய்வது போல், பொன்.இராதகிருட்டிணனும் தமிழர்களை ஏமாற்றப் போலி எதிர்ப்புக் காட்டுகிறார்.

இத் தீர்மானத்தை ஏற்கச் செய்ய, புலம் பெயர்ந்த தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழின உணர்வாளர்களையும் வளைத்துப் போட, அமெரிக்கா இரண்டு மாதங்களாக எல்லாச் சித்து வேலைகளிலும் ஈடுபட்டது. ஏற்கெனவே அமெரிக்கா – இந்தியா - கருணாநிதி அச்சு இயங்கிக் கொண்டுள்ளது. அந்த அச்சில் சுழலும் ஆரக்கால்களாக சில தமிழின உணர்வு அமைப்புகளும், சில உணர்வாளர்களும் தங்களைப் பொருத்திக் கொண்டார்கள்.

முதல்படியாக , அமெரிக்கத் தீர்மானத்தைப் பிடித்துக் கொண்டு மேலேறுவோம் என்று அவர்கள் தர்க்கம் பேசினார்கள். நூலேணியைப் பிடித்துக் கொண்டு மேலேறலாம்; நூலாம்படையைப் பிடித்துக் கொண்டு மேலேற முடியுமா? அறுந்து விழுவோம்! இதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்! என்ன கமுக்கமோ, அவர்கள் நூலாம்படை அணியை உருவாக்கினார்கள்!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தற்சார்புள்ள புலனாய்வு மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்கத் தீர்மானத்தை எரிப்போம் என்றும் ஒன்றுதிரண்டிருந்த தமிழக இன உணர்வாளர்களை இந்த ஆண்டு இரண்டாகப் பிரித்து விட்டது அமெரிக்க ஏகாதிபத்தியம்!

போனது போகட்டும்! தமிழகத் தமிழின உணர்வாளர்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்து , தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்க வேண்டும், தமிழீழத்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மீண்டும் ஒருங்கிணைந்து முழக்கங்கள் எழுப்புவோம்.

உலக அரங்கில் மாற்றங்கள் வரும்! நம் கோரிக்கைகள் ஏற்கப்படும்!

0 Responses to தமிழினப் படுகொலைகளும் பிணந்தின்னிகளும் - பெ.மணியரசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com