Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்க அமைச்சு அலுவலகம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைவதற்தோ, தேடுதல் நடத்துவதற்கோ பொது பல சேனா அமைப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பொது பல சேனா அமைச்சு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தமையை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அமைச்சு அலுவலகத்திற்குள் இன்று புதன்கிழமை நண்பகல் அத்துமீறி நுழைந்த பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்த தேரர்கள் சிலர், மஹியங்கனை விகாராதிபதி வட்டரக்க விஜித்த தேரர் அங்கு உள்ளதாகவும், அவரைக் அழைத்துச்செல்ல வந்தாகவும் கூறி இரண்டு மணித்தியாலங்கள் வரையில் அமைச்சின் அலுவலகத்தில் தேடுதல் நடத்தியதுடன், குழப்பமும் விளைவித்தனர்.

வட்டரக்க விஜித்த தேரர் அமைச்சு அலுவலகத்துக்குள் வரவில்லை என்று அமைச்சின் செயலாளர் அனுர சிறிவர்த்தன கூறியபோதிலும், தாங்கள் இங்குள்ள அமைச்சரின் அலுவலகங்களை பார்வையிட அனுமதிக்குமாறு பொது பல சேனா கோரியதுடன், தேடுதலிலும் ஈடுபட்டது.

இதனிடையே, குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பொது பல சேனாவின் முக்கியஸ்தரான வெள்ளம்பிட்டிய சுமனதம்ம தேரர், “வட்டரக்க விஜித்த தேரர், மஹியங்கனையில் இருந்து நேரடியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமைச்சுக்கு வந்துள்ளார். அவர் இங்குதான் இருக்கின்றார். ஆனால் எங்களுக்கு அமைச்சரின் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. அல்லது அமைச்சின் சீ.சீ.டி கமராவை கண்காணிப்பதற்கும் எங்களுக்கு அனுமதிக்கவில்லை.

அவர், அமைச்சர் அஸ்ரப் காலம் முதல் முஸ்லிம்களோடு இருந்துகொண்டு பௌத்த மதத்திற்கு இழுக்கு செய்து வருகின்றார். தற்பொழுது அவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனோடு சேர்ந்துகொண்டு முஹம்மத் வட்டரக்க தேராக இருக்கின்றார். அவரை கண்டுபிடித்து அவரது மஞ்சள் சீலையைக் கழற்ற வேண்டும் அல்லது அவரை ஒரு நல்ல பௌத்த தேராக நாங்கள் மாற்ற வேண்டும். அதற்காகவே அவரை பிடித்துக்கொண்டுபோக இங்கு வந்தோம்” என்றார்.

பொது பல சேனா தொடர்ச்சியாக மஹியங்கனை விகாராதிபதியும், ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரரை இலக்கு வைத்து ஆர்ப்பாட்டங்களையும், அச்சுறுத்தல்களையும் விடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. நேற்று செவ்வாய்க்கிழமையும் விஜித்த தேரருக்கு எதிராக மஹியங்கனையில் பொது பல சேனா ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to அமைச்சு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த பொது பல சேனாவுக்கு ரிஷாட் பதியுதீன் கண்டனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com