Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய வவுனியாவின் செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 6,348 ஏக்கர் காணியை, நெடுங்கேணியில் உள்ள இராணுவ பிராந்திய தலைமையகத்துக்கு பழ மரச்செய்கைக்காக கையளிக்குமாறு காணி அமைச்சின் மேலதிக செயலாளர், அரச அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “செட்டிக்குளம் பிரதேசத்திலும், வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருப்பதற்கும், விவசாயம் செய்வதற்கும் காணி அற்றவர்களாக உள்ள நிலையில், நெடுங்கேணியிலுள்ள இராணுவத்தின் பிராந்திய தலைமையகத்திற்கு கையளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ள காணி, இறுதிகட்டப் போரினால் இடம்பெயரச்செய்யப்பட்டு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தடுத்து வைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்கள் அமைக்கப்பட்ட இடமாகும். அந்த இடத்தையும், அதற்குச்சூழவுள்ள மேலதிகமான இடத்தையும் இராணுவம் சுவீகரித்து வைத்துள்ளது.

ஏறத்தாழ பத்தாயிரம் ஏக்கர் காணிகளுக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளவற்றில் ஒருபகுதியே குறித்த 6,348 ஏக்கர் காணியாகும். வவுனியா மாவட்டத்திலேயே செட்டிக்குளம் பிரதேசத்தில் தான் இவ்வாறு பெருந்தொகை காணிகள் அபகரிக்கப்பட்ட மோசமான செயல்பாடு இடம்பெற்றுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்த காணிகளுக்குள் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய காணிகளும் உள்ளதால் அரசின் இத்தகைய பாரிய நில அபகரிப்புக்கு எதிராக அமைச்சர் றிசாட் பதியுதினும் நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் நிலத்தடி நீரில் கல்சியம் செறிவாக உள்ள இடங்களில் செட்டிக்குளம் பிரதேசம் முதன்மையாக உள்ளபடியால் நீண்ட காலமாக இப்பிரதேச மக்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் கடும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.

இப்பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு மெனிக்பாம் முகாமுக்கு அருகாக மல்பத்து ஓயாவும், அருவி ஆறும் கலந்து பாயும் ஆற்று நீரை சுத்திகரித்து சுத்தமான குடிநீரை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காண வேண்டிய முக்கிய கால கட்டத்தில் நாமுள்ளோம். பிரதேச மட்டத்திலும், மாவட்ட ரீதியிலும் எம் மக்களுக்கு பல்வேறு தேவைகள் உண்டு. இத்தேவைகளை குறைந்தபட்சம் வடமாகாணசபையினூடாகவாவது பூர்த்தி செய்யலாம் என்று நாம் நம்பியிருந்த போதும் காரியங்களை ஆற்ற விடாமல் ஆளுநர் மற்றும் பிரதம செயலாளருக்கு ஊடாக முட்டுக்கட்டைகள் இடப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மீனவர் விவகாரம் தொடர்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பல கடிதங்கள் மன்மோகன்சிங்குக்கு எழுதியும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய முதல் கடிதத்தில் சிறீலங்கா அரசால் சிறை வைக்கப்பட்டுள்ள 82 தமிழக மீனவர்களையும் கட்டாயம் விடுவிக்க வேண்டிய நெருக்கடி மகிந்த அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமும் ஜெனிவாவில் கிடைத்த வெற்றியும் எமது இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வை பெற்றுத்தருவதற்கான வாய்ப்புகள் அமைந்து வரும் நிலையில் இப்பிரதேசத்தில் சிலைகளை நிறுவுவது தொடர்பில் அண்மையில் சிறு பிரச்சினைகள், சச்சரவுகள் ஏற்பட்டுள்ளமை கவலை தரும் விடையமாகும். வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாளியை போட்டு உடைத்த கதையாக சமுகங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது எல்லோருடைய பொறுப்பும் கடமையுமாகும்” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வவுனியாவில் 6,348 ஏக்கர் காணி இராணுவத்திற்காக அரசாங்கத்தினால் சுவீகரிப்பு: சிவசக்தி ஆனந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com