Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வட மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று முதற் தடவையாக விஜயம் செய்துள்ளார்.

ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்தார்.

ஒட்டுசுட்டான் பகுதியில் பாவட்டிமலை பகுதியில் மூன்று இடங்களில் பாரிய அளவில் கருங்கல் தோண்டுதலும், மணல் அகழ்தலும் இடம்பெற்று வருவதனால், இங்கு கற்களை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற வெடிகளினால் ஏற்படும் நில அதிர்வு காரணமாக அயலில் உள்ள கிராமங்களின் வீட்டுச் சுவர்கள் வெடிப்பேற்பட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பு எற்பட்டிருப்பதாகப் பொதுமக்கள் முறையிட்டிருந்தனர்.

இந்த இடங்களைப் பார்வையிட்ட முதலமைச்சரிடம் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் பலரும், இங்குள்ள நிலைமைகள் குறித்து விளக்கமளித்தனர்.

எனினும் முறையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு மாறாக அரசியல் செல்வாக்கின் மூலம் இங்கு காரியங்கள் நடைபெறுவதாக முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

ஒட்டுசுட்டான் மற்றும் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையின் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் சகிதம் பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர், மாகாண சபையைக் கொண்டு நடத்துவதில் பல முட்டுக்கட்டைகள் எற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, இருப்பினும் அவர்களின் பிரச்சினைகளுக்கு முடிந்த அளவில் விரைவாக தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

மீள்குடியேற்றத்திற்கான காணிகள் இல்லாதிருப்பது, பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பது. இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் அடாவடியாக புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டிருப்பது, இந்திய வீட்டுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்காதிருப்பது, விவசாய நடவடிக்கைகளில் எற்பட்டுள்ள பிரச்சினைகள், குடிநீர் இல்லாமை, தமிழர்களுக்குச் சொந்தமான மீன்பிடிக்கும் இடங்களில் பெரும்பான்மை இன மக்கள் நாயாறு கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் ஆகிய இடங்களில் ஆக்கிரமித்திருப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் முதலமைச்சரிடம் எடுத்தக் கூறப்பட்டன.

கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்துக்கான தமது கடலையும், தமது விவசாய நிலங்களையும் மீளப்பெற்றுத் தருமாறு கண்ணீருடன் கைகூப்பி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

0 Responses to முதல்முறையாக முதல்வர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவுக்கு விஜயம்! கண்ணீருடன் கைகூப்பிய மக்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com