Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவில் பலமான அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது. அதன் அழுத்தங்களினால், கையில் பொல்லை வைத்திருக்கும் பொலிஸ் அதிகாரத்தை தரலாம் என இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. எனவே, எமது மாகாண சபைக்கு நாம் படிப்படியாக அதிகாரங்களை பெறமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாண சபை எங்களுடைய வாழ்க்கை பிரச்சனையை தீர்க்க உதவும். எங்களின் வறுமையை போக்க உதவும் என்றும் மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைக்கு பலபேர் மாகாண சபை தொடர்பாக சவால் விடுகிறார்கள். மாகாண சபை ஏன் செயற்படாமல் இருக்கிறது என்று வாதாட யாழ் அமைச்சர் திறந்தவெளிக்கு அழைக்கிறார்.

இன்றைக்கு ஒரு குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும் மாகாண சபை அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது என்பது. அதனை கொண்டு நடத்துகின்ற முதலமைச்சர் மற்றும் எமது அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய செயற்பாடுகளையும் அதிகாரங்களையும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது இந்த அமைச்சருக்கு தெரியாதா?

முதலமைச்சர் அவர்கள் ஜனாதிபதிக்கு ஒரு நல்லிணக்க சமிக்ஞையை ஆரம்பத்தில் காட்டியிருந்தார். ஆனால் இன்று வரைக்கும் இந்த அதிகாரத்தை கொடுப்பதிலே இழுபறி நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது சொல்கிறார்கள் கையில் பொல்லை வைத்துக் கொண்டு செயற்படும் பொலிஸ் அதிகாரம் தரலாம் என்கிறார்கள். நில அதிகாரம் 18வது திருத்தச் சட்டத்தில் அற்றுப் போய்விட்டது. முழு அதிகாரமும் எடுக்கப்பட்டுள்ளது. மக்களுடைய நிலம் இன்று படிப்படியாக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எந்தவொரு அதிகாரமும் இல்லை அதனால் மாகாண சபை பலவீனம் அடைந்துவிட்டது என கருதிவிட முடியாது. அப்படி கருதவும் கூடாது. நிச்சயமாக மாற்றம் வரும். இந்தியாவிலே பலமான ஒரு அரசு வந்திருக்கிறது. அதன் ஆதிக்கத்தால் இன்று பொலிஸ் அதிகாரத்தை தரலாம் என்று சொல்கிறார்கள். ஆகவே இந்த அதிகாரங்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் எமக்கு இருக்கிறது. தமிழ் நாடு, புலம்பெயர் உறவுகள், எம்மோடு இருக்கிறார்கள். சர்வதேசமும் இன்று வரை எம்மோடு நிற்கிறார்கள். ஆகவே இந்த மாகாணசபை அதிகாரங்களுடன் செயற்படக்கூடிய சூழ்நிலை கிட்டும்.

இங்கு ஒரு அமைச்சர் கூறினார் நாம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு சென்று எமது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று. ஆனால் நாம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு செல்வது என்பது ஒரு போதும் நடக்காது. இரண்டு வருடங்களாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இந்த அரசாங்கம் ஏமாற்றியது. இனியும் சென்று ஏமாந்து வரும் போது எம்மை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். இன்றைக்கு இந்தியா பலமாக இருக்கிறது. எனவே நாம் எமது தீர்வுகாண பயணத்திலேயே செல்லவேண்டும்” என்றுள்ளார்.

0 Responses to இந்தியாவின் அழுத்தத்தால் ‘கையில் பொல்லை வைத்திருக்கும்’ பொலிஸ் அதிகாரத்தை அரசு தரலாம்: செல்வம் அடைக்கலநாதன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com