Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாராளுமன்றத்தை அதிகாரமில்லாத நிறுவனமாக மாற்றி, எதிர்க்கட்சிகளை எட்டி உதைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், இன்று தனது மனித உரிமைப் பாவங்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து கழுவி, எதிர்க்கட்சிகளையும் பங்காளிகள் ஆக்க முயற்சிக்கிறது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தலைவர்கள் இதை செய்கிறார்கள் என்றால், அவர்களின் சீடர்கள், தமிழக முதல்வர் ஜெயலிதா ஜெயராமின் கொடும்பாவியை எரித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை திட்டித் தீர்த்து கொழும்பு நகர வீதிகளில் இந்தியாவை ஆத்திரமூட்டுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இந்த விசாரணை நடவடிக்கைகள் திடீரென இன்று காலையில், முன்னறிவித்தல் இல்லாமல் ஆரம்பிக்கப்படவில்லை. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த ஐந்து வருடங்களாக ஐக்கிய நாடுகள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தது.

2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்ததையடுத்து, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமும், இலங்கை ஜனாதிபதியும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் விசேட மனித உரிமை பிரதிநிதியான அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதிநிதி பாலித கோஹன, அன்றைய சட்டமா அதிபரும், இன்றைய பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் பேரவைக்கான அன்றைய இலங்கைப் பிரதிநிதி தமரா குணநாயகம் ஆகியோர் தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகளில் இலங்கை அரசு சார்பாக அறிக்கை சமர்ப்பித்து உறுதிமொழிகள் வழங்கினர்.

அத்துடன், இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம், ஐக்கிய நாடுகளிடம் வாக்குறுதி அளித்தது. இவ்வாறான நிலையில்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆகவே, தாம் ஏதோ ஒரு அப்பாவி அரசாங்கம் போலவும், விபரமில்லா சிறு குழந்தையை போலவும் இனிமேலும் இவர்கள் நாடகம் நடிக்க முடியாது.

இந்த நாட்டில், பாராளுமன்ற அதிகாரங்களை இந்த அரசு வெட்டி துவம்சம் செய்து நீண்ட நாட்களாகிவிட்டது. இன்று அதிகாரங்கள் அனைத்தும் அலரி மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அரசியலமைப்பை திருத்தும் முக்கியமான 18 ஆவது திருத்த மசோதாவை, காலையில் சமர்பித்து, பகலில் பேசி, மாலையில் சட்டமாக்கி கொண்டு போனவர்கள் இவர்கள். அதற்காக, விலைகொடுத்து வாங்கப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை பயன்படுத்தியவர்கள் இவர்கள். அன்றே இந்த பாராளுமன்றத்தின் மகிமை இவர்களால் தோற்கடிக்கப்பட்டது.

இன்று வெள்ளம் தலைக்கு மேலே போய் கொண்டிருக்கின்றது. கழுத்து பட்டி இறுகுகின்றது. இந்த பாரதூர நிலைமை இப்போது அரசுக்கு நன்கு தெரியும். ஆகவேதான், பாராளுமன்றத்துக்கு இந்த விடயத்தை தள்ளி பொறுப்பை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விட்டுவிட்டு இந்த அரசாங்கத்தின் தலைமை தப்ப பார்க்கிறது. இதனால்தான், இன்று இவர்களுக்கு பாராளுமன்றம் மீது திடீர் பாசமும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரிக்க இவர்களுக்கு என்ன யோக்கியத்தை இருக்கிறது? இங்கே இவர்கள் செய்யும், பேசும் இனவாத, மதவாத கருத்துகளுக்கு பதிலடியாகத்தான் தமிழக அரசியல்வாதிகள் செயற்படுகிறார்கள். இதில் இரகசியம் கிடையாது. இங்கே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை கூட கொடுக்க வேண்டாம் என கூச்சல் எழுப்பும் இனவாதிகள், ஜெயலலிதாவை பார்த்து தமிழ் இனவாதி என்றும், மோடியை பார்த்து சர்வதிகாரி என்றும் கூக்குரல் எழுப்புவது வேடிக்கை.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பல்வைத்தியர் குணதாச அமரசேகர கோமாளித்தனமாக பேசுகிறார். ஜெயலலிதா, இலங்கையில் தனித்தமிழ் ஈழத்தை உருவாக்கி, பின்னர் இந்தியாவில் தமிழ்நாட்டை தனித்தமிழ் நாடாக்கி, ஒரு அகண்ட தமிழ் ராஜ்யத்தை உருவாக்க முயல்கிறார் என இவர் சொல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி கவனமாக இருக்க வேண்டும் என இந்தியாவின் ஐக்கியத்தில் மிகவும் அக்கறை உள்ளவர் போல கருத்தும் கூறுகிறார். இவரேதான் சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என்று பகிரங்கமாக சாபம் இட்டவர். ஆகவே இந்த பல் வைத்தியர், பைத்தியத்துக்கு வைத்தியம் செய்யும் ஒரு வைத்தியரை சந்திக்க வேண்டும்” என்று மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தனது பாவங்களை பாராளுமன்றத்தில் கழுவுவதற்கு மஹிந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com