Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முஸ்லிம் ஆள்கள்தான் இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்து எங்கள் அம்மா, அப்பா, தங்கச்சி ஆகிய மூவரையும் அழைத்துச் சென்றனர். மறுநாள் புதுக்குடியிருப்பு கடற்கரையில் அவர்களுடன் பலரது சடலங்களைக் கண்டோம். பார்த்து விட்டு வந்த அண்ணனும் சுடப்பட்டார் என ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஒரு பெண் சாட்சியமளித்தார்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் இரண்டாவது நாள் அமர்வில் சாட்சியமளித்த தேவராசா தயாளினியே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது சாட்சியத்தில் - நாங்கள் எல்லோரும் வீட்டில் இருந்த வேளை இரவு 12 மணியளவில் வந்த சிலர், எங்களது அம்மா, அப்பா, தங்கச்சி ஆகியோரைக் கூட்டம் ஒன்று இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றனர். மறுநாள் எங்களது அம்மா உள்ளிட்டோரை முஸ்லிம் ஆள்கள்தான் அழைத்துச் சென்றதாக அறிந்தோம்.

அத்துடன், அவர்கள் கொல்லப்பட்டுக் கடற்கரையில் கிடக்கின்றனர் என அறிந்து அங்கு சென்றோம். சடலங்களைப் பொலிஸாரும் வந்து பார்த்துவிட்டு அருகிலுள்ள மயானத்திலேயே அடக்கம் செய்தனர்.

அவர்களது சடலங்களைப்பார்த்துவிட்டு வரும் வழியில் எனது அண்ணனையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். அந்த நாளில் எல்லோருமாக எங்களது ஊரைச் சேர்ந்த 21பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். எனது அக்காவுக்கு சுட்டிருந்தார்கள் ம்மாவுக்கும் அப்பாவுக்கும் வெட்டுக்காயங்கள் இருந்தன- என்று அவர் சாட்சியமளித்தார்.

காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணைகளுக்கு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது. கடந்த 6 ஆம் திகதி காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 12 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த 59 பேரும், 07ஆம் திகதி 13 கிராம சேவையாளர் பிரிவிலிருந்து 53 பேரும் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 105 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

அத்துடன் 32 புதிய முறைப்பாடுகள் இரண்டு நாளிலும் கிடைத்திருந்தன. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் 5 கிராம சேவையாளர் பிரிவிலிருந்து 54 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 50 பேர் சாட்சியமளித்தனர்.

அதே நேரம், 85 புதிய முறைப்பாடுகளும் ஏற்கப்பட்டன. இன்று திங்கட்கிழமை 30 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் 40 புதிய முறைப்பாடுகளும் ஏற்கப்பட்டன. அவற்றிலும் 10 பேரிடம் சாட்சியற்கள் பதிவுசெய்யப்பட்டன. மட்டக்களப்பில் இம் மாதம் நான்கு அமர்வுகளை, காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு நடத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 3 நாள் அமர்வை கிரான், செங்கலடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்து. 

0 Responses to புதுக்குடியிருப்பு கடற்கரையில் பலரது சடலங்களைக் கண்டோம்: ஆணைக்குழு முன் ஒரு பெண் சாட்சியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com