இரண்டு வாரங்களுக்கு முன்னர் 13ஆம் திருத்தமோ அல்லது 13 ப்ளஸ் என்ற அதற்கு மேல் செல்லுவதோ, எதுவென்றாலும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்து பேசுங்கள், வராவிட்டால் எதுவும் கிடையாது என்று சொன்ன அரசாங்கம், இன்று என்ன சொல்கிறது? 13ஆம் திருத்தத்தில் பொலிஸ் அதிகாரத்தை தவிர ஏனையவற்றை அமுல் செய்ய தயார் என இந்திய மத்திய அரசுக்கு செய்தி அனுப்புகிறது. இந்த இரண்டு வாரங்களுக்குள் என்ன நிகழ்ந்தது? பிரதமர் நரேந்திர மோடியின் ‘மோடி மந்திரம்’ வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் மாநாட்டில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மாகாணத்தின் முதல்வராக பதவியேற்றவுடன் விக்னேஸ்வரன் இந்தியாவின் இந்து நாளிதழுக்கு அளித்த செவ்வியில் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியிருந்தார். இலங்கையில் தமிழர், சிங்களவர் இடையிலான பிரச்சினை ஒரு குடும்பத்தின் உள்விவகாரம். இன்று சண்டையிட்டுக் கொள்ளும் நாம் நாளை சமாதானமடைவோம். இதில் வெளியார், குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகள் தலையிடக்கூடாது என கூறியிருந்தார்.
இந்த கருத்தினால் அவர், இலங்கையிலும், இந்தியாவிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழ் தேசியவாதிகளின் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார். அது வேறு விடயம். ஆனால், இந்த கருத்தை கூறியதன் மூலம் விக்னேஸ்வரன் இலங்கை அரசுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பியிருந்தார். நாம் ஒரே குடும்பமாக வாழ்ந்து எம் பிரச்சினைகளை தீர்த்து கொள்வோம் என்பதுவே அதுவாகும்.
ஆனால், இலங்கை அரசு அதை கணக்கிலும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று விக்னேஸ்வரனின் கட்சி, சந்திக்க நேரம் ஒதுக்கும்படி தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும் தெரிவித்து, கோரிக்கை விடுத்து கடிதம் எழுதும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளேயே நமது பிரச்சினைகளை தீர்க்கும் நல்ல முயற்சிகளை தூக்கி எறிந்துவிட்டு, இந்நாட்டில் தமிழர்களை வெளிநாடுகளை நோக்கி இந்த அரசு தான் தள்ளுகிறது. உள்நாட்டு பிரச்சினைக்கு உலக நாடுகளிடம் தீர்வை கோருகிறோம் என தமிழர்களை இனி எவரும் குறை கூற கூடாது. ஐநா சபையையும், இந்தியாவையும் நோக்கி நாம் செல்வதற்கு இந்த முட்டாள் அரசாங்கம்தான் காரணம் என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை நாட்டு பிரிவினையை எதிர்க்கிறோம்; ஆனால், இலங்கை இனப்பிரச்சினைக்கு 13ஐ அமுல் செய்து, 13க்கு மேலே செல்லுங்கள் என பிரதமர் மோடி கடுமையாக கூறிவிட்டார்.
அத்துடன் அவர் நேற்று, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவை இருகரங்கூப்பி வரவேற்று உரையாடியுள்ளார். அவர்கள் இருவரும் பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பற்றியும் உரையாடியுள்ளனர். இதன்மூலம் ஒருநாட்டு பிரதமர் தனது நாட்டின் இன்னொரு கட்சியை சார்ந்த ஒரு மாநில முதல்வரை எவ்விதம் நாகரீகமாக நடத்த வேண்டும் என்ற பாடத்தையும் இலங்கை அரசுக்கு பிரதமர் மோடி கற்று கொடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்த விமல் வீரவன்ச கட்சி, ஹெல உறுமய, தேசிய தேசப்பற்று இயக்கம் ஆகியவை இன்று எங்கே? பாராளுமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிய அரசு தரப்பு அஸ்வர் எம்பி இன்று எங்கே? முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி போகும் முன்னர், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கையில் விடுவிக்கப்பட்ட வேகம்தான் என்ன?
13ஐ பற்றி பேசவே பேசாதீர்கள். பேச வேண்டுமானால் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் என்று அகம்பாவத்துடன் பேசியவர்கள், விக்னேஸ்வரனின் நல்லெண்ண கருத்தை தூக்கி எறிந்தவர்கள், இன்று 13ம் திருத்தத்தில் போலிஸ் அதிகாரத்தை தவிர ஏனையவற்றை அமுல் செய்ய தயார் என சொல்கிறார்கள். இனி நாளை இன்னொரு மோடி சந்திப்புக்கு பிறகு போலிஸ் அதிகாரத்தையும் தருகிறோம் என சொன்னாலும் ஆச்சரியமில்லை.
உள்நாட்டில் நாம் கெஞ்சினாலும் சட்டத்தில் உள்ள உரிமையைகூட வழங்க மாட்டீர்கள். ஆனால், வெளிநாட்டில் பலம் பொருந்தியவர்கள் அழுத்தம் கொடுத்தால் இணங்குகிறீர்கள். ஆகவேதான் கேட்கிறேன், மோடி மந்திரம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதா?” என்றுள்ளார்.
0 Responses to இலங்கை அரசு மோடியிடம் பயப்பிடுகிறது - மனோ கணேசன்