இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதன் பின்னர் இலங்கை அரசியல் சூழலில் புதிய பேச்சுக்கள் அல்லது அதிர்வுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழ் மக்களின் 60 ஆண்டுகளையும் தாண்டி அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றிய புதிய பேச்சுக்கள். அதாவது, புதிய பேச்சுக்கள் என்பது அவ்வளவு புதிது அல்ல.
அது, 13வது திருத்த சட்டத்திற்கு அமைவாக தோற்றுவிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பற்றியது. இந்தப் பேச்சுக்கள் ஆரம்பித்தும் கால்நூற்றாண்டைக் கடந்து விட்டது. இந்த நிலையில், இலங்கை(யின்) அரசாங்கம் (ஒன்று) பகுதியளவாகவேனும் பொலிஸ் அதிகாரத்தை மாகாணங்களுடன் பகிர்வது பற்றிய குழப்பமான அறிவித்தலை அண்மையில் வெளியிட்டுள்ளது. அது, மோடி அரசாங்கத்தின் மீதான பயத்தின் விளைவாகவே என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரம் மற்றும் 13வது திருத்தத்தின் அமுலாக்கம் பற்றி இன்றைய தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் பேசியிருக்கிறது. அதனை தினக்குரலுக்கான நன்றி அறித்தலோடு இங்கு மீளப்பதிகிறோம். (ஆசிரியர் குழு, 4TamilMedia)
13 மைனஸ்?
மாகாண சபைகளுக்கான காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது குறித்த சர்ச்சை மீண்டும் அரசியலரங்கில் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான புதுடில்லிச் சந்திப்பையடுத்தே இந்த விவகாரம் இப்போது புது உத்வேகத்துடன் பேசப்படுகின்றது. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என்பதில் உறுதியாக இருந்த அரசாங்கம் அதில் இப்போது சற்று தளர்வுப்போக்கைக் காட்ட முற்பட்டிருக்கின்றது. இந்தத் தளர்வுப் போக்குக்கு மோடி அரசின் அழுத்தம்தான் காரணம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானதல்ல. ஆனால், அரச தரப்பில் காணப்படும் இந்த தளர்வு தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானதா என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று.
புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி ராஜபக்ஷ சந்தித்த போது, 13 ஆவது திருத்தம் குறித்து தெளிவான சில செய்திகள் தெரிவிக்கப்பட்டது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கியதாக 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்பதை மோடி தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் இலங்கை வழங்கிய உறுதிமொழிகளையும் அவர் நினைவுபடுத்தியிருக்கின்றார். பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் தனக்குள்ள பிரச்சினைகளை இதன்போது மோடிக்கு ராஜபக்ஷ விளக்கியிருக்கின்றார். போர் முடிவடைந்து சில வருடங்களே சென்றுள்ள நிலையில் ஆயுதந்தாங்கிய பொலிஸ் பிரிவை மாகாண சபைக்கு வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என அரசாங்கம் கருதுவதாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே பொலிஸ் அதிகாரங்களைக் கொடுப்போம், ஆனால் முழுமையாகக் கொடுப்பதில்லை என்ற வகையில் ஒரு அரை வேக்காட்டுத் திட்டம் அரசாங்கத்தால் தயாரிக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருப்பதன் பின்னணி இதுதான் எனக் கருதலாம். பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்ற பேச்சுக்கு இடமே இல்லை என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்த மறுநாளே அதற்கு முரணாக அமைச்சர் ரம்புக்வெல கருத்து வெளியிட்டிருக்கின்றார். அரச தரப்பில் காணப்படும் தடுமாற்றங்களை இது வெளிப்படுத்துகின்றது.
13 ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவான ஒரு நிலைப்பாடு அரசாங்கத்திடம் என்றுமே இருந்ததில்லை. தேவைக்கும், சந்தர்ப்பத்துக்கும் ஏற்றவாறும் எதனையாவது சொல்லிச் சமாளித்துக்கொள்வதுதான் இவ்விடயத்தில் அரசாங்கத்தின் உபாயமாக இருந்துள்ளது. இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் 13 பிளஸ் எனச் சொல்லிக்கொள்ளும் அரசாங்கம் உள்நாட்டில் அதனைச் சொல்வதில்லை. 13ஐ கொடுக்கத் தயாரில்லை என்பதுதான் சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் சொல்லும் மந்திரமாக இருக்கின்றது. மன்மோகன் சிங் அரசாங்கம் இதனைப் பொறுத்துக்கொண்டது. ஆனால், மோடி இதனைப் பொறுத்துக்கொள்ளமாட்டார் என அரசாங்கம் இப்போது கருதுகின்றது.
இந்த நிலையில்தான் 13 மைனஸ் ஒன்றை முன்வைத்து நிலைமைகளைச் சமாளிக்க அரசாங்கம் முற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. இந்தியாவையும், சர்வதேசத்தையும் சமாளிப்பதுடன், சிங்கள மக்கள் மத்தியில் உருவாகக்கூடிய எதிர்ப்புக்களையும் இதன் மூலம் சமாளித்துவிட முடியும் என அரசாங்கம் கருதுகின்றது. அரசாங்கம் கவனத்தைச் செலுத்தாத ஒரேயொரு தரப்பு தமிழர்தான். தமிழர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா, அவர்களின் பிரச்சினைக்கு இது தீர்வாகுமா என்பது அரசுக்குப் பிரச்சினையில்லை. ஒரு புறம் சர்வதேசம். மறுபுறம் சிங்கள கடும் போக்காளர்கள். இந்த இரு தரப்பும்தான் அரசாங்கத்தின் பிரச்சினைக்குரிய தரப்புக்கள். கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு மௌனமாக இருக்க வேண்டியவர்களே தமிழர்கள் என்பதுதான் அரசின் கருத்து.
இது குறித்த அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் இதுவரையில் வெளிவரவில்லை. உணர்வுகளை நாடி பிடித்துப் பார்ப்பதற்காக சில தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கப்போவதில்லை என கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏற்கனவே அறிவித்திருக்கின்றார். இருந்தபோதிலும், கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு மேலதிகமாகப் பெற வேண்டியதற்குப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூட்டமைப்புக்கு ஆலோசனை வழங்கப்படலாம். இவ்விடயத்தில் கூட்டமைப்பின் அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கும் என்பதையும் தமிழ் மக்கள் அவதானிக்கின்றார்கள்.
தமிழர்களுடைய அபிலாஷைகளைப் பொறுத்தவரையில் 13 ஆவது திருத்தம் போதுமானதல்ல. தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் இதனை ஆரம்பம் முதலே சொல்லிவருகின்றன. 13 பிளஸ் என்ற கருத்து அதனால்தான் முன்வைக்கப்பட்டது. ஆனால், 13ஐ ஒரு ஆரம்பமாகக் கொள்ளமுடியும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. ஆனால், அரசாங்கம் இப்போது 13 மைனஸூக்குச் செல்லப்போகின்றது. வெறுமனே போக்குவரத்துப் பொலிஸ் பிரிவையும், சிறு விவகாரங்களைக் கையாள்வதற்கான பொலிஸ் பிரிவையும் வழங்குவது மட்டும் தமிழர்களின் அபிலாஷைகளுக்குத் தீர்வாகிவிடுமா என்பது முக்கியமான கேள்வி!
கவனிக்கப்பட வேண்டிய மற்றைய விடயம் காணி தொடர்பானது. பொலிஸ் அதிகாரத்தில் ஓரளவைக் கொடுப்பதாகக் காட்டிக்கொள்வதன் மூலம் காணி குறித்த விடயத்திலிருந்து கவனம் திசை திருப்பப்படுகின்றது. வடபகுதியில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படும் காணிகளின் தொகை தினசரி அதிகரித்துச் செல்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் 340 கிராமங்களில் 300 கிராமங்களிலுள்ள தனியார் காணிகளில் படையினர் நிலைகொண்டிருப்பதாக எஸ்.சிறிதரன் எம்.பி. தெரிவித்திருக்கின்றார். கிளிநொச்சியில் மட்டுமல்ல வடக்கில் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. இந்த நிலையில்தான் காணி அதிகாரம் மாகாண சபைக்கு முக்கியமாகிறது. அதனைப் பெறவில்லையென்றால் மாகாண சபைக்கு ஆயுதம் இல்லாத பொலிஸ் இருக்கும். ஆனால், ஆள்வதற்கு நிலம் இருக்காது!
(ஞாயிறு தினக்குரல் ஜூன் 08, 2014 ஆசிரியர் தலையங்கம்)
0 Responses to மோடி மந்திரம்: பொலிஸ் அதிகாரம் பற்றி பேச ஆரம்பிக்கும் மஹிந்த அரசாங்கம்!