தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலிற்குள் நின்று அனந்தி செயற்பட மறுத்து வருவதால் அனந்தியை கூட்டமைப்பிலிருந்து நீக்கும் முயற்சிகள் திரைமறைவில் இடம்பெற்றுவருகின்றன. புலம்பெயர் நாடுகளில் இந்தத் தகவல் ஏற்கனவே அடிபடத்தொடங்கிவிட்டது.
கூட்டமைப்புடன் தொடர்புடைய புலம்பெயர் நாட்டில் வகிக்கும் முக்கியஸ்தர் ஒருவர் அனந்தி விரைவில் நீக்கப்படுவார் என உறுதியாகக் கூறியிருக்கின்றார்.
அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற குழுக்கூட்டத்திலும் பின்னர் திருகோணமலையில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்திலும் அனந்தி தொடர்பான குற்றச்சாட்டுக்களை சம்பந்தனும் சுமந்திரனும் முன்வைத்திருக்கின்றனர். இதன் போது எவருமே அனந்திக்காக பேச முன்வரவில்லை.
உட்கட்சிப் போராட்டத்தை நடாத்துவதாக காட்டிக்கொள்ளும் சுரேஸ் பிறேமச்சந்திரனும் மௌனமாகவே இருந்திருக்கின்றார். தமிழ்த் தேசிய வாதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் ரவிகரனும் மௌனம் காத்தார்.
தனிமைப்பட்டுப்போன நிலையில் உணர்ச்சிவசப்பட்டு திருகோணமலை கூட்டத்தில் பேசியபோது அனந்தி துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டதாகவும் செய்திகள் வந்தன.
அனந்திக்கும் சம்பந்தன் தலைமைக்கும் இடையேயான முரண்பாடு வெளிப்படையானது. கூட்டமைப்புக்கென சொந்த நிகழ்ச்சிநிரல் எதுவும் கிடையாது. அது இந்தியாவின் நிகழ்ச்சி நிரலையே நகர்த்திக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தரப்பு தமிழ்த் தேசிய அரசியலை கைவிட்டு சரணாகதி அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சி நிரல். சம்பந்தன், சுமந்திரன், விக்கி ஆகிய முக்கூட்டுத் தலைமையும் முழுமையாக அதனை ஏற்று நகர்வுகளை மேற்கொள்கின்றது.
அனந்தியும் அந்த நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல அவர் தனது கணவன் உள்ளிட்ட காணாமல் போனவர்களை கண்டறிய முயல்தலையும் கூட கைவிட்டு அவர்ளை மறந்துவிட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. அனந்தி அதனை விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கிலேயே. டேவிட் கமரூன் யாழ் வந்தபோது அவரை சந்திக்க அனந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், சம்பந்தன், சுமந்திரன், முதலமைச்சர் விக்கி ஆகியோரும் அவ்விடயம் பற்றி பேசாமல் விட்டதும் இந்நோக்கிலேயேயாகும்.
கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் இந்தியாவில் தங்கி நிற்பதனாலும் பதவிக்காக சம்பந்தன் தலைமையை பகைக்கமுடியாததினாலும் தமிழ்த் தேசிய அரசியலை நீண்டகாலத்திற்கு முன்னரே கைவிட்டதனாலும். சம்பந்தன் தலைமைக்கு பின்னால் இழுபட்டுச்செல்லவே விரும்புகின்றனர். கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையேயான முரண்பாடு பதவிக்கானதே ஒழிய கொள்கைக்கானதல்ல. இதனால் கொள்கை வழி நின்று அனந்தி போராடும் போது அனந்திக்கு உதவ அவர்களினால் முடியவில்லை.
அனந்தியின் பின்னணி மிகவும் வேறானது. அவர் புலிகளின் தளபதி ஒருவரின் துணைவி. அவரினால் மக்களுக்கு தான் வழங்கிய வாக்குறுதியை கைவிட்டு ஒரு போதும் சம்பந்தன் தலைமையின் நிகழ்ச்சி நிரலிற்கு பின்னால் செல்லமுடியாது. இதனால் தான் தனக்கென ஒரு நிகழ்ச்சி நிரலை வகுத்துக் கொண்டு அவர் செயற்பட முனைந்தார். தேர்தலில் அவர் பெற்ற அதிகப்படியான வாக்குகள், காணாமல் போனோரின் விவகாரத்திற்கு தலைமை கொடுக்க முன்வந்தமையெல்லாம் அவருக்கு வலிமை நிலையை கொடுத்திருந்தன.
அனந்தி வடமாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்தே முரண்பாடு உருவாகத் தொடங்கி விட்டது. ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும் அது வெளிப்படத் தொடங்கியது. முதலில் கமரூன் வருகையின் போது வெளிப்பட்டது. பொதுநலவாய மாநாட்டினை ஒட்டி பிரித்தானிய பிரதமர் டேவிற் கமரூன் யாழ்ப்பாணம் வந்த போது உண்மை நிலையை அவர் டேவிற் கமரூனிற்கு கூறிவிடக்கூடாது என்பதிலேயே சம்பந்தன் தலைமை கவனமாக இருந்தது. இடம் பெயர்ந்தோரின் போராட்டத்தை கமரூனின் கண்ணுக்கு எட்டாத வகையில் கமரூன் வருவார் என மக்களை நம்பவைத்து மாவிட்டபுரத்தில் நடாத்தியது.
ஆனால் அனந்தி காணாமல் போனோர்க்கான போராட்டத்தை கமரூனின் கவனத்தை பெறுவதற்காக ஏனைய மன்னார் பிரஜைகள்குழு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புக்களுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடாத்தினார். வெறும் 300 பேருடன் நடாத்திய போராட்டம் பாரியளவில் சர்வதேச கவனத்தை பெற்றது. பொலீசாரின் தடைகளையும் உடைத்துக்கொண்டு போராட்டம் முன்னேறியது. அனந்தியின் தனியான நிகழ்ச்சி நிரல் வெளிப்படையாகத் தெரிந்தது. அரசுக்கு எதிரான தமிழ் மக்களது கொதிநிலையை கமரூனிற்கு தெரியாமல் மூடிமறைக்க எடுத்த முயற்சிகள் தவிடுபொடியானது. அதனால்; சம்பந்தன் தலைமை குழம்பிப் போனது. அனந்தி மீது விமர்சனங்களை முன்வைத்த போதும் அனந்தி அதனை பொருட்படுத்தவில்லை.
இரண்டாவது வெளிப்படுத்துகை ஜெனிவா விவகாரத்தில் ஏற்பட்டது. வடமாகாண சபை ஜெனிவா தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானமும் அனந்திக்கு உதவியாக அமைந்தது. ஜெனிவாவிற்கு செல்வதற்கு அனந்தி தயாரானார். தமிழர்கள் மீது புரியப்பட்டது இனப்படுகொலைக்கு ஒப்பானது என்றும் சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் வடமாகாண சபையில் தீPர்மானம்; நிறைவேற்றியது. ஆனாலும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அவற்றை மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்த சம்பந்தன் தலைமை தயாராக இருக்கவில்லை. மாகாணசபை செயற்பட வழிசமைக்கவேண்டும் என்கின்ற விடயங்களை கொண்ட கடிதத்தினை தான் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் ஜெனிவாவில் சமர்ப்பித்தது.
அனந்தி முதற்தடவை ஜெனிவாவிற்கு சென்ற போது சுமந்திரனும் சென்றார். அங்கு ஜெனிவாவில் மனித உரிமைகள் பேர்வையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை கூட்டாக சந்தித்த போது அனந்தியை பேசவிடவில்லை. புலித் தளபதியின் மனைவி என்பதால் அவர்கள் பேசுவதற்கு விரும்பமாட்டார்கள் என்றே அவருக்கு கூறப்பட்டது. ஆனாலும் சந்திப்புக்கு அனந்தியும் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இனப்படுகொலை பற்றியோ அதற்கு சர்வதேச விசாரணை தேவை என்பது பற்றியோ, காணாமல் போனோர் விவகாரம் பற்றியோ சுமந்திரனால் எதுவும் முன்வைக்கப்படவில்லை. மாறாக இலங்கை தொடர்பாக ஓர் தீர்மானம் நிறைவேற்றினால் போதும் அதன் உள்ளடக்கம் பற்றி அக்கறையில்லை என்ற நிலைப்பாட்டையே முன்வைத்திருந்தார்.
அனந்திக்கு ஒரே ஏமாற்றம். பிள்ளைகளையும் ஊரில் தனித்து விட்டுவிட்டு காணாமல் போனோர் விவகாரத்தை பேசுபொருளாக்க ஜெனிவாவிற்கு சென்றால் சுமந்திரன் அதனையும் தடுத்துவிட்டாரே! என்பதால் தான் அந்த ஏமாற்றம்!. மறுபக்கம் கவலையும், கோபமும் ஊடகவியலாளர் மாநாட்டினைக்கூட்டி அந்த ஏமாற்றத்தையும் அதனால் ஏற்பட்ட கோபத்தையும் கவலையையும் பகிரங்கமாக அவர் வெளிப்படுத்தினார். இனிமேல் தனித்தே தான் ஜெனிவா செல்வேன் என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் மாநாடு சுமந்திரனை சினப்படுத்தியது. கூட்டமைப்பின் வருங்காலத் தலைவருக்கே அனந்தி சவால்விடுக்கின்றார் என்ற வெப்பெரிச்சல் வேறு. வெகுஜன அபிப்பிராயம் அனந்தியின் பக்கம் இருந்ததினால் உப்புச்சப்பற்ற ஒரு அறிக்கையுடன் தனது வெப்பெரிச்சலை அடக்கிக்கொண்டார். ஆனால் அன்றே அனந்தியை கட்சியை விட்டு நீக்குவது என அவர் தீர்மானித்து விட்டாராம்;.
இரண்டாவது தடவை அனந்தி எவருக்கும் அறிவிக்காமலே ஜெனிவா சென்றார். அங்கு பிரதான கூட்டத்தில் நான்கு தடவையும் துணைக்கூட்டங்களில் மூன்று தடவையும் உரையாற்றினார். பாதிக்கப்பட்ட பெண் என்ற வகையில் அவரது உரைகளுக்கு நல்ல மதிப்பிருந்தது. குறிப்பாக காணாமல்போனோர் விவகாரம,; சிறுவர் துஸ்பிரயோகம், பெண்கள் துஸ்பிரயோகம், என்பவை பற்றி அழுத்தமாகப் பேசினார். இங்கு சம்பந்தன் தலைமைக்கு எரிச்சலாக இருந்த விடயம் நடைபெற்றது இனப்படுகொலை என்றும், அதற்கு சர்வதேச விசாரணை தேவை என்றும் அவர் அழுத்தமாகக் கூறியது தான்.
ஜெனிவாவில் அனந்திக்கு பிரதான கூட்டத்தில் நான்கு தடவைகள் பேசுவதற்கு சந்தர்பங்கள் கிடைத்தன. சுமந்திரன் விரும்பியிருந்தால் அவருக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அதற்கு முயற்சிக்கவில்லை. அங்கு அவர் உரையாற்றினால் கூட்டமைப்பின் இரகசிய நிகழ்ச்சி நிரல் வெளியேதெரியவரும். அவர் இனப்படுகொலை என்றோ,அதற்கு சர்வதேச விசாரணை தேவை என்றோ ஒருபோதும் பேசியிருக்கமாட்டார். இவை பற்றிப் பேசாமல் அவரினால் தாயகம் திரும்பியிருக்க முடியாது.
அனந்தியின் தனிமையான நிகழ்ச்சிநிரல் வெளிப்படையாக பகிரங்கத்தில் பேசுபொருளானது ஜெனிவா விவகாரத்தில்தான். அனந்தியின் துணிச்சல் தமிழ் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. தமிழ் அரசியலில் முதலாமவர் என்று கருதும் நிலைகூட ஏற்பட்டது. தமிழ் ஊடகங்களும் அவரது செயற்பாடுகளை வரவேற்று முக்கியத்துவம் அளித்தன.
சுமந்திரனின் எரிச்சல் உச்சத்திற்கு சென்றது. அனந்தியை கட்சியிலிருந்து நீக்குவோம் என தன்னைச் சார்ந்தவர்களுக்கு வெளிப்டையாக கூறத்தொடங்கினார். அனந்தியை கடுமையாக விமர்சிப்பதற்கு தருணத்தை எதிர்பார்த்திருந்தார். திருகோணமலையில் நடைபெற்ற கூட்டமைப்பின் கூட்டத்திற்கு முன்னரே பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் அனந்தி பற்றிய விமர்சனம் கடுமையாக சுமந்திரனால் முன்வைக்கப்பட்டது. கூட்டமைப்பிற்கென இரண்டு நிகழ்;சிநிரல் இருக்கமுடியாது. அனந்தி தொடர்ந்து இப்படியே சென்றால் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று கூறினார்.
திருக்கோணமலையில் இடம் பெற்ற கூட்டத்திற்கு கூட்டமைப்பின் அனைத்து மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது. பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட அனந்தியைச் சார்ந்தவர்கள் ‘முக்கியமாக உன்னைப்பற்றித்தான் விமர்சனங்கள் இடம்பெறும் அதற்கு நீ கட்டாயம் பதில் கூற வேண்டும்’ எனவே கூட்டத்திற்கு கட்டாயம் செல்’ என வற்புறுத்தினர்.
அனந்தி தனக்கு போக்குவரத்து ஒழுங்கு செய்து தருமாறு மாவையை வேண்டினார். மாவை செய்துகொடுக்கவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஏனையவர்களும் தமது வாகனத்தில் அனந்தியை அழைத்துச் செல்வதற்கு அக்கறை காட்டவில்லை. ஐங்கரநேசன் ஊடகவியலாளர்களை தனது வாகனத்தில் அழைத்துச் சென்றபோதும் அனந்தியை அழைக்கமுன்வரவில்லை. அனந்தி கூட்டமைப்புக்குள் தனித்துவிடப்படுகிறார் என ‘இது நம்தேசம்’ வெளியிட்டிருந்த கட்டுரையைப் பார்த்த ஐங்கரநேசன் ‘அவ்வாறு தனித்து விடமாட்டோம்’ என அனந்திக்கு கூறியிருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி காற்றில் போனது. அனந்தியுடன் இணைத்து தங்களை அடையாளம் காட்டுவது சம்பந்தன் தலைமை தங்களையும் புறக்கணிக்க வழிசெய்யும் என நினைத்ததினாலேயே அனந்தியை தனித்து தவிக்கவிட்டனர்.
சொந்தச்செலவில் வாடகைக்கு வாகனத்தை அமர்த்தி அதிகாலையிலேயே எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் தனித்து திருகோணமலைக்கு பயணமானார்.
திருகோணமலையில் கூட்டம் ஆரம்பமானபோது குத்துவிளக்கு ஏற்றும் வைபவம் முதலில் இடம்பெற்றது. அதற்கு அனந்தி அழைக்கப்படவில்லை. போனஸ் ஆசனத்தில் நியமனம் பெற்ற மாகாணசபை பெண் உறுப்பினரே அழைக்கப்பட்டார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒரு வேண்டாத விருந்தாளியாகவே அனந்தியைப் பார்த்தனர். பலரது முகங்களில் ஒரு நக்கல் சிரிப்பு இருந்தது.
அனந்தி தான் பேசவேண்டிய விடயங்களை முன்கூட்டியே தயாரித்து பென் ரைவ் (pen drive) ல் எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் பயண அவசரத்தில் அதன் பிரதிகளை எடுக்கமுடியவில்லை. அதனால் கூட்டத்தின் இடை நடுவில் ஐங்கரநேசனிடம் பிரதி எடுத்து வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அவர் திரும்பிவந்தபோது சுமந்திரன் பேசிக்கொண்டிருந்தார். உம்மைப்பற்றித் தான் கருத்துக்கள் கூறியதாக குறிப்பிட்டார்.
அனந்தி தான் தற்போது வந்திருக்கின்றேன் உங்கள் கருத்துக்களை திருப்பிக் கூறுங்கள் எனக்கேட்டார் சுமந்திரனும் தான் திரும்பிக் கூறுவதாக கூறி ‘ஜெனிவாவில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு மாறாக நீர் உரையாற்றியிருக்கின்றீர். கஜேந்திரகுமார் அணியின் கருத்துக்களைத் தான் நீர் முன்வைத்திருக்கின்றீர் இதனை கட்சியால் ஏற்கமுடியாது’ என்றார்.
அவ் வேளையில் கூட்டத்திலிருந்த வடமாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட்டும் வேறு ஒருவரும் ‘கஜேந்திரகுமாரின் கருத்துக்கள் மட்டுமல்ல அனந்தியே கஜேந்திரகுமார் அணியில் தான் இருக்கின்றார்’ என்றும் கூறி சுமந்திரனுக்கு வக்காளத்து வாங்கியுள்ளனர்.
அனந்தி பதில் அளிக்கும் போது நான் புலித் தளபதியின் மனைவி என்பதால் சர்வதேசப் பிரதிநிதிகள் என்னை புறக்கணிப்பர் என்பது உண்மையல்ல. நான் அமெரிக்கா சென்றபோது வெளிவிவகாரப்பிரிவின் பிரதிநிதிகள் என்னை அழைத்துப் பேசியதுமல்லாமல் எனது கருத்துக்களையும் அக்கறையாக கேட்டனர். எனக்கு அரசியல் இரண்டாவது பட்சமானவிடயம். காணாமல் போனோர் விவகாரமே எனக்கு முக்கியமானது. அதனை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்பதற்காகவே என்னுடைய சிறிய பிள்ளைகளையும் தவிக்க விட்டுவிட்டு நான் ஜெனிவா சென்றேன். அங்கு நான் எனது கருத்துக்களை கூறுவதற்கு சுமந்திரன் சந்தர்ப்பம் தரவில்லை , அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி ஒரு வார்த்தையும் தன்னால் பேசமுடியவில்லை. இதுதான் நடக்கும் என முன் கூட்டியே தெரிந்திருந்தால் பிள்ளைகளை தவிக்கவிட்டு நான் சுமந்திரனுடன் ஜெனிவா சென்றிருக்கமாட்டேன் எனக்குறிப்பிட்டார்.
‘இரண்டாவது தடவை காணாமல் போனோர் விவகாரத்தை முன்வைக்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் தனித்துச்சென்றேன். கூட்டமைப்பு தேர்தலின் போது முன்வைத்த கொள்கைகளுக்கு எதிராகவோ வடமாகாணசபையின் தீர்மானங்களுக்கு எதிராகவோ நான் எதுவும் பேசவில்லை’ என்றார்.
கட்சி ஜெனிவாவிற்கு சமர்ப்பித்த கடிதப்பிரதி எங்களுக்கு தரப்படவில்லை. அதனை முன்னரே எமக்கு தந்திருந்தால் அதையும் உள்வாங்கி என்னால் உரையாற்றியிருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சுமந்திரன் அனந்தியின் கருத்துக்களை தர்க்கரீதியாக நிராகரிக்காது கட்சியின் நிலைப்பாட்டிற்கு புறம்பாக நீர் நடந்துகொண்டிருக்கின்றீர் அதனை ஏற்கமுடியாது எனக்கோபமாக குறிப்பிட்டார். இனப்படுகொலை சர்வதேச விசாரணை, தென்னாபிரிக்க பேச்சுவார்த்தை பற்றி எவரும் வாய் திறக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
சம்பந்தன் பேசும்போதும் சுமந்திரனின் கருத்துக்களை ஆதரித்தே பேசினார். இருவருடைய பேச்சுக்களும் முன்னரே கலந்துரையாடி முடிவெடுத்த பின் பேசியவையாக இருந்தன. ஜெனிவாவில் ஒரு கட்சியிலிருந்து இரண்டு கருத்துக்களை முன்வைக்கக்கூடாது இரண்டு அணுகு முறைகளை பின்பற்றமுடியாது என சம்பந்தன் குறிப்பிட்டார.; நாம் மிகவும் சிரமப்பட்டு சர்வதேசத்தை எமக்கு சார்பான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவைத்திருக்கின்றோம். அதனை ஒருவரும் குழப்பக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
சம்பந்தனும், சுமந்திரனும் அனந்திக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தபோது சபையிலிருந்த ஒருவர் கூட அனந்திக்கு சார்பாக பேசமுன்வரவில்லை பலர் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டனர்.
தனித்துவிடப்பட்ட நிலமை, தொடர்ச்சியான அவமானப்படுத்துகை, தன்னுடைய கடமைகளுக்கு தடைகள் வருதல் என்பவற்றினால் மனம் தளர்ந்து பேசும் போது அனந்தியால் அழவேண்டியநிலை ஏற்பட்டது. இந்த நிலை கண்டு அனுதாபப்படுவதற்கு கூட சபையில் எவரும் இருக்கவில்லை.
மதிய உணவு நேரத்தின் பின்னர் அனந்தி சபையிலிருந்து வெளியேறி கோணேசர் கோயிலுக்கு சென்றார். அங்கு கோணேசர் பெருமானிடம் எல்லாவற்றையும் முறையிட்டார். யாழ் திரும்பும்போது கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் போலல்லாது தனது வாகனத்தில் வடமாகாணசபை உறுப்பினர் இருவரையும் ஏற்றிவந்தார்.
யாழ்ப்பாணத்தில் அனந்தி தனது கோபத்தையும், கவலையையும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனாலும் ஊடகங்களில் திருகோணமலை கூட்ட நிகழ்வுகள் அனந்தி அழுதது உட்பட வெளியில் வந்தன. அதனால் கூட்டமைப்புத் தலைமைகள் மீது மக்கள் கடும் சீற்றமடைந்தனர். கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். பல இணையத் தளங்கள் சுமந்திரன் சம்பந்தனுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து கட்டுரைகளை வெளியிட்டன. அந்நிலையில் சுமந்திரன் மறுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். சாவகச்சேரியில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் குத்து விளக்கு ஏற்றுவதற்கு அனந்தியும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து இடம் பெற்ற சுமந்திரனின் வடமராட்சிக் கிளை திறப்புவிழா, சுரேஷ்பிறேமச்சந்திரனின் நீர்வேலிக்கிளைத் திறப்புவிழா என்பவற்றிற்கும் அனந்தி அழைக்கப்பட்டார்.
அனந்தியை நீக்கவேண்டும் என்பதில் சம்பந்தன் தலைமை அக்கறையாக இருந்தாலும் அனந்திக்குள்ள மக்கள் செல்வாக்கு கண்டு அஞ்சுகின்றது. அனந்தி ஒரு பெரிய வாக்குவங்கி அதனை இழப்பது கட்சியை பலவீனப்படுத்திவரும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சம்பந்தன் தலைமைக்குள்ள இக்கட்டான நிலை இதுதான். அனந்தியை கட்சியில் வைத்திருக்கவும் முடியாது. வெளியேற்றவும் முடியாது.
பேராசிரியர் சிற்றம்பலம் அனந்தி கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதை நாம் அனுமதிக்கமாட்டோம் முடிந்தால் சம்பந்தன் தலைமை செய்துபார்க்கட்டும் எனச்சவால் விடுத்துள்ளார். வரும் பாராளுமன்றத் தேர்தலில் காணாமல்போனோர் விவகாரத்தை மேலும் பேசுபொருளாக்குவதற்காக வேட்பாளராக நிற்பதற்கு அனந்தி விரும்பக்கூடும். ஆனால் சம்பந்தன் தலைமை அதற்கு இடங்கொடுக்கமாட்டாது.
தற்போது சுமந்திரன் அனந்தி அரசாங்கத்தின் ஆள் என ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். அனந்தியை நீக்கும் போது மக்களுக்கு காரணம் கூறவேண்டும் என்பதற்காகவே இந்த கட்டவிழ்ப்பு இடம்பெறுகின்றது. அனந்தி சுமந்திரனைப் போல மகிந்தர் அணியுடன் கிரிக்கெற் விளையாடவும் இல்லை. ஜெனிவாவில் சிறீலங்கா தூதரகத்திற்கு சென்று காட்டிக் கொடுக்கவும் இல்லை.
ஒரு பெரிய கட்சிக்குள் தனிமரமாக நிற்பது கஷ்டம்தான் அங்கு தொடர்சியான அவமானங்களை சந்திக்கவேண்டிவரும். அனந்தி சளைக்காது அதற்கு முகம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இது வரலாறு அனந்திக்கு இட்ட கட்டளை.
குறிப்பாக அனந்தி இரண்டு விடயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
முதலாவது முக்கியமான அரசியல் நிகழ்வுகள் இடம்பெறும் போது தமிழ் மக்களது நலன் அடிப்படையில் நின்று தனது கருத்துக்களை அறிக்கைகளாக வெளியிட தயங்கக்கூடாது. சம்பந்தன் தலைமை இது விடயத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்பது உண்மைதான். அவை எவற்றையும் கணக்கில் எடுக்கக்கூடாது.
இரண்டாவது அரசியல் என்று வந்துவிட்டால் நல்லவர்கள், நேர்மையானவர்கள், கொள்கைப்பற்றுள்ளவர்கள் காண்பது கடினமாகவிருக்கும், இவற்றையிட்டு ஒரு போதும் மனந்தளரக்கூடாது, பகிரங்கத்தில் அழுவது ஒரு அரசியல் போராளிக்கு அழகல்ல. மலையே சரிந்து விழுந்தாலும் மக்களது நிரந்தர அரசியல் விடுதலைக்காக அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்.
– சூரியவேந்தன்
0 Responses to தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து அனந்தி நீக்கப்படுவாரா?