சிறீலங்கா படை புலனாய்வாளர்கள், காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் காணாமல்போரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகத் திரண்டு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர். இன்று காலை திட்டமிட்டபடி காணாமல் போனோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இருந்தவர்களுக்கு நேற்றுமுதல் இராணுவ புலனாய்வாளர்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அவற்றை தகர்த்து மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் முல்லை மண்ணில் காணாமல் போனவர்களுக்காக குரல் கொடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காணாமல் போனவர்கள் தொடர்பில் வழக்கு விசாரணை ஒன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று நடைபெற இருந்த நிலையில் அவ் உறவுகளின் குரல்களை பலப்படுத்தும் வகையில் இன்று முல்லைத்தீவு கச்சேரிக்கு அண்மையாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது.
காணாமல் போனாருக்கான ஆர்ப்பாட்டம் ஒன்று வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் தலைமையில் நீதிமன்றத்திற்கு முன்னர் நடாத்த இருப்பதாகவும் அது நிறுத்தப்படவேண்டும் எனவும் முன்னர் பொலிசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று வடமாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற இருந்த கவனயீர்ப்பு நடவடிக்கைக்கு முல்லைத்தீவில் ரவிகரன் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ளவிருந்த காணாமல் போனோரின் உறவுகளுக்கு இராணுவ புலனாய்வாளர்கள் மூலம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதாக ரவிகரனுக்கும் அனந்தி சசிதரன் அவர்களுக்கும் மக்கள் தகவல்களை வழங்கியிருந்தனர். தனித்து ஆர்ப்பாட்டத்திற்கு செல்லவேண்டாம் எனவும் தாம் அதற்குரிய ஏற்பாடுகளை செய்வோம் எனவும் அவர்கள் கூறியதாகவும் இதனால் குறித்த நேரத்தில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளமுடியுமோ என்ற தமது ஐயங்களையும் மக்கள் தன்னிடம் வெளிப்படுத்தியதாக ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இராணுவ புலனாய்வாளர்களின் முயற்சிகளை தகர்க்கும் பொருட்டு ரவிகரனால் முல்லைத்தீவு பிரதேசத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டும் அவர்களையும் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அவர் முயற்சிகளை முன்னெடுத்தார்.
தொடர்ந்தும் இன்று முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இராணுவத்தினரால் குழப்பங்கள் விளைவிக்கப்படலாம். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவலும் வந்து சேர அவற்றை மீறி ஆர்ப்பாட்டத்தினை நடாத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பம் முதலே ஆங்காங்கே இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு நிகழ்வுகளை அவதானிக்க விடப்பட்டிருந்தனர். அவர்களின் அழுத்தங்களை மீறியதாய் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு காணாமல் போன உறவுகளுக்காய் குரல் கொடுத்து தமது கவலையினையும் கோபத்தினையும் வெளிப்படுத்தினர்.
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடமாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன் ரவிகரன் சிவாஜிலிங்கம் அன்ரனி ஜெகநாதன் மேரி கமலா குணசீலன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கஜேந்திரன் மணிவண்ணன் ஆகியோருடன் வலிவடக்கு பிரதேச சபை உப தலைவர் சஜீவன் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் மக்களும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் விதத்தில் இரண்டு பேரூந்து வண்டிகளில் மக்கள் வருவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நடவடிக்கைகள் அவர்களால் ஏற்படுத்தப்பட அங்கு அவர்களுக்கும் காணாமல் போனவர்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. பின்னர் பொலிசாரின் கட்டுப்பாட்டில் குழப்பவந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட மீண்டும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து ரவிகரன் தலைமையில் சுரேஸ் பிரேமச்சந்திரன், அன்ரனி ஜெகநாதன், சிவாஜிலிங்கம், கஜேந்திரன் ஆகியோர் தமது உரைகளையாற்றி 11 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தனர்.
0 Responses to அச்சுறுத்தல் எதிர்புக்களுக்கு மத்தியில் முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!